Published:Updated:

சங்கிலித் தொடர்போல் சமூக மோதல்கள்: வைகோ அச்சம்

சங்கிலித் தொடர்போல் சமூக மோதல்கள்: வைகோ அச்சம்
சங்கிலித் தொடர்போல் சமூக மோதல்கள்: வைகோ அச்சம்
சங்கிலித் தொடர்போல் சமூக மோதல்கள்: வைகோ அச்சம்

சென்னை: தலித் வீடுகள் எரிப்பு, உயிரிழப்புகள் போன்ற சங்கிலித் தொடர்ச்சியான நிகழ்வுகள் மேலும் சமூக மோதல்களை உருவாக்கி விடுமோ என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அச்சம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சமூக நீதி மலரவும், அவர்கள் வாழ்வில் உயரவும், தமிழகத்தில் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் காலமெல்லாம் அறவழியில் போராடி, மகத்தான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதில் வட தமிழ்நாடு பெரும் பங்கு வகித்து வந்துள்ளது.

இந்திய அரசியல் சட்டத்தைத் தந்த பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் காட்டிய சமூக நீதிப் பாதையைத் தமிழகம் ஏற்றுக்கொண்டதனால், தியாகச் சுடர் காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் முன்னெடுத்த முயற்சிகளால், சமூக நீதிக்காக இந்திய அரசியல் சட்டம் முதல் திருத்தத்தைக் கண்டது. அத்தகைய பெருமைக்குரிய தமிழகத்தில் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களும், வர்ணாசிரமத்தின் பெயரால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டிருந்த தலித் சமூக மக்களும் நேசமும் நட்பும் கொண்டு கரம் கோர்த்து வாழும் நிலை மேலும் மேலும் வளர வேண்டும் என்று ஏங்கி இருந்தேன்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாசும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் கரம் கோர்த்தபோது மகிழ்ந்தேன். மருத்துவர் ராமதாசுக்கு ‘தமிழ்க்குடிதாங்கி’ என்ற பட்டம் சூட்டி, ‘டாக்டர் அம்பேத்கர்’ விருதினை தொல்.திருமாவளவன் வழங்கிய போதும், அரசியல் களத்தில், ‘என் தம்பி திருமாவளவன்’ என்று மருத்துவர் ராமதாஸ் அரவணைத்தபோதும், இது சமூக நல்லிணக்கத்துக்கு அரண் அமைக்கிறது என்று நம்பிக்கை கொண்டேன்.

ஆனால் கடந்த ஓராண்டு காலமாக, குறிப்பாக, தர்மபுரியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, வேற்றுமையும் கசப்புணர்வும் ஏற்பட்டிருப்பது மிகவும் கவலை தருகிறது. ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று, சித்திரை முழு நிலவு நாளில், மரக்காணம் பகுதியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தலித் மக்களினுடைய வீடுகள் கொளுத்தப்பட்ட நிகழ்வுகள், இச்சம்பவத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள், இதன் சங்கிலித் தொடர்ச்சியாக மேலும் சமூக மோதல்கள் வெடித்துவிடக் கூடும் என்ற நிலை மிகவும் அச்சத்தைத் தருகிறது.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
என்ற குறளின் வாசகத்தை கருத்தில் கொள்வது நல்லது.

தமிழ் நாட்டில் இளைய தலைமுறையினர் குறிப்பாக,  மாணவர் உலகம் ஈழத் தமிழரின் விடியலுக்காக சாதி, மதம், அரசியல் கட்சிகளைக் கடந்து வீறுகொண்டு எழுந்து உரிமைப் போர்க்கொடி உயர்த்தி நிற்பது தமிழ்க் குலத்துக்கு மகத்தான விடியலை, ஒளிமயமான எதிர்காலத்தை படைக்கின்ற சூழல் கனிந்துள்ள இந்த உன்னதமான நேரத்தில், வேற்றுமையும், சாதி மோதலும் ஏற்பட்டால், இளைய தலைமுறையினரின் உள்ளத்தில் அந்தக் கசப்புகள் படிந்துவிடும். இவ்வளவு காலம் சமூக நீதிக்காக தலைவர்கள் பாடுபட்டதும், போராடியதும், தியாகம் செய்ததும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும். இந்தக் கவலை நல்லோர் மனமெல்லாம் சூழ்ந்துவிட்டது.

மோதல்களும், வன்முறைகளும் ஏற்படுகிறபோது, தாய்மார்கள், வயது முதிர்ந்தோர், நோய்வாய்ப்பட்டோர், சிறு பிராயத்தினர், குழந்தைகள் பெரும் துன்பத்துககு ஆளாகின்றனர். உயிர்ச்சேதம், பொருட்சேதம் நேருகிறது. உழைப்பு ஒன்றையே மேற்கொண்டு வாழ்ந்து வரும் தலித் மக்களும், மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களும் தாங்க இயலாத சோதனைக்கும் துயரத்துக்கும் ஆளாக நேரிடும்.

எனவே, கடந்துபோன கசப்பான சம்பவங்களை இனி மனதில் கொள்ளாமல், சகோதரத்துவத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் பேணிக் காக்க அனைத்துத் தரப்பினரும் முன்வரவேண்டும் என தமிழ் நாட்டின் நலனில் அக்கறையுள்ள பொதுநல ஊழியன் என்ற முறையில், ஒரு சகோதரனாக இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.

மரக்காணம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவும், சமூக நல்லிணக்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கவும் இன்று நானும், கழகப் பொருளாளர் டாக்டர் இரா.மாசிலாமணி, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், காஞ்சி மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் க.சோமு, தேர்தல் பணிச் செயலாளர் ந.மனோகரன், அமைப்புச் செயலாளர் சீமா பஷீர், வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் ஏ.கே.மணி, புதுவை மாநில அமைப்பாளர் ஹேமா பாண்டுரங்கன் ஆகியோரும் மரக்காணம் பகுதிக்குச் செல்ல விரும்பினோம். பொது அமைதியைப் பாதுகாக்க தடை உத்தரவு போடப்பட்டு இருப்பதாகவும், அதனால் எவரையும் அனுமதிக்க இயலாது என்று காவல்துறையினர் கூறியதால் அதனை ஏற்றுக்கொண்டோம்.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டபூர்வமான தக்க நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.