Published:Updated:

"என்னை யாரும் கடத்தவில்லை..!" - முகிலன் மீதான புகாருக்கு மகேஸ்வரி பதில்

"என்னை யாரும் கடத்தவில்லை..!" - முகிலன் மீதான புகாருக்கு மகேஸ்வரி பதில்
"என்னை யாரும் கடத்தவில்லை..!" - முகிலன் மீதான புகாருக்கு மகேஸ்வரி பதில்


       இயற்கை வளங்களைச் சூறையாடுபவர்களுக்கும், மணல் கொள்ளையை அரங்கேற்றுபவர்களுக்கும் சிம்மசொப்பனமாக இருப்பவர் சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன். அவர்மீது குமாரபாளையத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்ற பெண், "என் மகள் மகேஸ்வரியை முகிலன் கடத்தி வச்சிருக்கார். மீட்டுத் தாங்க" என்று கரூர் கலெக்டர் அன்பழகனிடம் கண்ணீர் கோரிக்கை வைத்தார். அப்போது அங்கே வந்த முகிலனைப் பிடித்து இழுத்ததோடு, அவரின் காலில் விழுந்து, 'என் மகளை கொடுத்துடு' என்று கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


 

கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடியதன்மூலம் சமூக செயற்பாட்டாளராக வெளியில் தெரிய ஆரம்பித்தவர் முகிலன். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அவர், கரூரில் நடந்த மணல் கொள்ளைக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்தினார். பல்வேறு வழக்குகளுக்காக கைதுசெய்யப்பட்டு, 350 நாள்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தார். இந்நிலையில், ஜாமீனில் வெளிவந்துள்ள அவர்,கரூரில் தங்கி கையெழுத்து போட்டுவருகிறார். இந்நிலையில், கரூர் மணல் கொள்ளையை எதிர்த்து, இவரோடு சேர்ந்து கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக போராட்டங்களில் கலந்துகொண்டுவருகிறார் மகேஸ்வரி.

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகக் குழுவில் உள்ளார். முகிலன், மகேஷ்வரி மற்றும் இன்னும் சிலரும் அமராவதி ஆற்றில் புதிதாக ஐந்து இடங்களில் மணல்குவாரி அமைக்க அனுமதி கொடுத்ததை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டர் அன்பழகனிடம் கொடுக்கச் சென்றனர். மனுவைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது, அங்கே ஆவேசமாக வந்தனர் மகேஸ்வரியின் தாய் கஸ்தூரியும்,சித்தப்பா பெரியசாமியும். முகிலனின் கையைப் பிடித்து இழுத்த கஸ்தூரி,'கடத்திவைத்திருக்கும் என் மகளை என்கிட்ட கொடுத்துடு' என்றார். அதோடு, அவர் காலிலும் விழுந்து கெஞ்சினார். இதனால்,செய்வதறியாது முகிலன் தவித்தார். 


 

பத்திரிகையாளர்களிடம் பேசிய கஸ்தூரி,  "நாங்க ரொம்ப கஷ்டப்படுற குடும்பம். எனக்கு ரெண்டு மக. என் கணவர் முருகேசன், இப்போ இல்லை. அதனால், சிரமப்பட்டு குடும்பத்தைக் காப்பாத்தும்னு மகேஸ்வரியை எம்.சி.ஏ வரை படிக்க வச்சோம். படிச்சு முடிச்சதும் வேலைக்குப் போறேன்னுட்டு சென்னை போனா. 'சென்னையில்தான் இருக்கா'ன்னு இருந்தோம். ஆனா,'முகிலன் அவளை கடத்தி வச்சிருக்கார், அவளைப் பத்தி தப்பு தப்பா வாட்ஸப்புல செய்தி வருது'ன்னு எங்க சொந்தக்காரங்க எல்லாம் எங்களை கண்டிச்சாங்க. எங்கே இருக்கான்னே தெரியலை. அதனால்,'முகிலன் கடத்தி வச்சிருக்கும் என் மகளை மீட்டுத் தாங்க'ன்னு குமாரபாளையம் காவல் நிலையத்துல ரெண்டு மாசத்துக்கு முன்னாடி புகார் கொடுத்தோம். நடவடிக்கை இல்லை. அதனால, கரூர்ல இருக்கிறதா கேள்விப்பட்டு இன்னைக்கு இங்க வந்தோம். எங்க மகளுக்கு கல்யாணம் பண்ணணும். அவ எங்களுக்கு வேணும்" என்று மன்றாடினார். மகேஸ்வரியிடம்,"பெத்த வயிறு எரியுது. என்னோட வந்துடு" என்று கெஞ்சினார். மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடமும்,"என் மகளை மீட்டுத் தாங்க" என்று கண்ணீரோடு கதறினார். "நடவடிக்கை எடுக்கிறேன்" என்று கலெக்டர் தெரிவித்தார்.


 

இது சம்பந்தமாக, மகேஸ்வரி அப்போதே பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில்,  "நான் சட்டப்படி மேஜர். சுயமா முடிவெடுக்கிற எல்லா உரிமையும் எனக்கு இருக்கு. என்னை யாரும் கடத்தவில்லை. இந்த சமூக செயற்பாட்டாளராகச் செயல்படுவது எனக்குப் பிடித்துப் போய், நானாகத்தான் விருப்பப்பட்டு செயல்படுகிறேன். கல்யாணம் பண்ணிக்கலை. குமாரபாளையம் காவல் நிலையத்தில்,'சுய விருப்பத்தோடுதான் நான் சமூக சேவையில் உள்ளேன். என்னை யாரும் கடத்தவில்லை'ன்னு பதில் கடிதம் கொடுத்துட்டேன். எங்கம்மா புரியாம என்னை கூப்புடுறாங்க. அவங்க எனக்கு அம்மாதான். அதில் மாற்றுக் கருத்தில்லை. அவருக்கு என் நிலையைப் புரியவைப்பேன்" என்றார்.


 

இதுசம்பந்தமாக முகிலனிடம் பேசினோம்.
 "அது அவங்க குடும்பச் சண்டை. மகேஸ்வரி சுய விருப்பத்தோடு சமூக செயற்பாட்டாளராக இயங்கிவருகிறார். எங்களோட போராட்டங்களில் கலந்துக்கிறார். ஆனால், நான் கடத்தி வச்சிருக்கிறதா சொல்றது உண்மை இல்லை. மணல் கொள்ளைக்கு எதிராக, மணல் குவாரியை சட்டவிதிகளை மதிக்காமல் நடத்திவரும் அரசுக்கு எதிராக நாங்க வலுவாகப் போராடிவருகிறோம். அதனால்,போராட்ட வேகத்தைக் குறைப்பதற்காக உளவுத்துறை திட்டமிட்டு மகேஸ்வரி குடும்பத்தாரை கரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து குட்டையைக் குழப்பியிருக்கிறது. அவர்கள் என்ன செய்தாலும், எங்களின் போராட்ட வேகம் குறையாது" என்றார்.