Published:Updated:

அனுமதியைப் புதுப்பிக்காத சிப்காட்: புதிய ஆலைக்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு!

அனுமதியைப் புதுப்பிக்காத சிப்காட்:  புதிய ஆலைக்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு!
அனுமதியைப் புதுப்பிக்காத சிப்காட்: புதிய ஆலைக்கு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு!

நெல்லை கங்கைகொண்டானில் செயல்பட்டு வரும் சிப்காட் நிறுவனம் இயங்குவதற்கான அனுமதியைப் புதுப்பிக்காத நிலையில், அந்த வளாகத்தில், 42 ஏக்கர் பரப்பளவில் இண்டேன் நிறுவனத்தின் பாட்டிலிங் பிளான்ட் அமைக்கப்பட உள்ளதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. 

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில், சிப்காட் தொழிற்பேட்டை செயல்பட்டுவருகிறது. இந்த வளாகத்தில் பெப்சி, கொக்கோகோலா, ஏடிசி டயர் கம்பெனி உள்ளிட்ட 50-க்கும் அதிகமான கம்பெனிகள் செயல்பட்டுவருகின்றன. இந்த நிலையில், இண்டேன் நிறுவனம் சார்பில் சிலிண்டர்களில் காஸ் நிரப்புவதற்கான ஆலை அமைக்கப்பட உள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. 

ஆலையைத் திறப்பதற்குத் தயார் நிலையில் உள்ள சூழலில், கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர் ரொனால்டோ பிண்டோ, இண்டேன் நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர். 

இந்தக் கூட்டத்தில், கங்கைகொண்டான், துறையூர், தாழையூத்து உள்ளிட்ட சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய இண்டேன் நிறுவன அதிகாரிகள், ’’தற்போது, நெல்லை மாவட்ட மக்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் மதுரை அல்லது திருச்சியில் உள்ள ஆலைகளில் இருந்தே கொண்டுவரப்படுகிறது. அதனால், காலதாமதம் ஏற்படுகிறது. தற்போது, சிப்காட் வளாகத்தில் 42 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலை, தினமும் 800 மெட்ரிக் டன் அளவிலான 3 பிளான்ட் மூலமாகத் தினமும் 33,000 உருளைகளில் எரிவாயு நிரப்பும் பணிகளை மேற்கொள்ளும். 

இதன்மூலம் நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் வீடுகள் பயனடையும். பொதுமக்களுக்கு தங்குதடையின்றியும் காலதாமதம் இல்லாமலும் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்’ என்றார். அதைப் பொதுமக்களும் வரவேற்றனர். ஆனால், கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற சமூக ஆர்வலர் முத்துராமன், இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

முத்துராமன் பேசுகையில், ’’மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து ஆலையைக் கட்டுவதற்கான அனுமதியைப் பெறாமல், இந்த ஆலை ஏற்கெனவே கட்டப்பட்டுவிட்டது. அதோடு, ஆலை அமையும் இடத்துக்கு வெகு அருகில், புள்ளிமான் பூங்கா சரணாலயம் உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விடவும் கூடுதல் சப்தம் ஏற்படும் என்பதை இண்டேன் நிறுவன அதிகாரிகளே ஒப்புக்கொண்டுள்ளனர். 

இது தவிர, கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் நிறுவனம் செயல்படுவதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பெறப்பட்ட அனுமதியைப் புதுப்பிக்கவில்லை. சிப்காட் நிறுவனமே செயல்படுவதற்கான அனுமதி இல்லாத நிலையில், அங்கு எரிவாயு உருளைகளை நிரப்பும் ஆலைக்கு அந்த நிறுவனம் எப்படி அனுமதிகொடுத்தது’’ என்று கேள்வி எழுப்பினார். இரு தரப்பினரும் தெரிவித்த கருத்துகள் பதிவு செய்யப்பட்டன.