Published:Updated:

குடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர்! - மயங்கி விழுந்ததால் பரபரப்பு

குடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர்! - மயங்கி விழுந்ததால் பரபரப்பு
குடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர்! - மயங்கி விழுந்ததால் பரபரப்பு

கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு மருத்துவர் ஒருவர் டியூட்டி நேரத்தில் மது அருந்திவிட்டு வந்ததோடு அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளித்தபோது போதையில் தள்ளாடி மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

கரூர் மாவட்டம்,குளித்தலையில் இருக்கிறது அரசு மருத்துவமனை. குளித்தலை மட்டுமின்றி,சுற்றியுள்ள 30 க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு உதவியாக இந்த மருத்துவமனை உள்ளது. அடித்தட்டு மக்கள் நிறைந்த பகுதி என்பதால்,மக்கள் அனைவரும் இந்த மருத்துவமனையில்தான் எந்த பிரச்னை என்றாலும்,சிகிச்சை எடுக்க வந்து போகிறார்கள். அதோடு,குளித்தலை நகராட்சி கரூர் டு திருச்சி மார்க்கத்தில் இருப்பதால்,போக்குவரத்து நெரிசல் மிகுந்த வழியாக உள்ளது. இந்த வழியில் அடிக்கடி நடக்கும் விபத்துகளில் சிக்குபவர்களையும் இந்த மருத்துவமனைக்குதான் முதல்உதவி சிகிச்சை அளிக்க அழைத்து வருவார்கள். தினமும் இப்படி நூற்றுக்கணக்கான நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து போகிறார்கள். இந்த சூழலில்தான்,இந்த மருத்துவமனையின் அவசரப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளி ஒருவருக்கு மதுபோதையில் இங்கு பணிபுரியும் மருத்துவர் சிகிச்சை அளிக்க முயன்ற சம்பவம் நோயாளிகள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் பாண்டியன் என்பவர்தான் அப்படி மது அருந்துவிட்டு வந்து,போதை தலைக்கேறியதால் நோயாளி மீதே மயங்கி விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

 இதுசம்மந்தமாக நம்மிடம் பேசிய குளித்தலை இளைஞர்கள் சிலர், ``இந்த மருத்துவமனையில் ஏற்கெனவே எந்த வசதிகளும் இல்லைன்னு நாங்க அரசு கவனத்துக்கு மனு மேல மனுவா அனுப்பிகிட்டு இருக்கோம். இந்த சூழலில்,அங்கு பணிபுரியும் மருத்துவர் மது அருந்திவிட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வந்த நோயாளிக்கு சிகிச்சையளிக்க முயன்று, அவரது உயிரோடு விளையாடி இருக்கிறார். நேற்று இரவுதான் இந்த சம்பவம் நடந்திருக்கு. இரவு டியூட்டிக்கு மதுவை அருந்திவிட்டு தள்ளாடியபடி வந்திருக்கிறார். அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளியை நெருங்கி அவருக்கு சிகிச்சையளிக்க முயன்றிருக்கிறார். ஆனால், உடல் தள்ளாடியபடி இருந்ததால், அந்த நோயாளியின் உறவினர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது.

அவரிடம் போய் கேட்டிருக்கிறார்கள். அவர்களிடம் வாக்குவாதம் செய்த மருத்துவர், போதை தலைக்கேற அப்படியே தரையில் மயங்கி விழுந்திருக்கிறார். இதனால்,நோயாளிகளும், மக்களும் பதற்றமாயினர். இதற்குள், அங்கே வந்த சக மருத்துவர்கள் மருத்துவர் பாண்டியனை தூக்கி, அவரது முகத்தை கழுவி போதையை தெளிய வைக்க முயன்றதோடு, அவரை அவசரம் அவசரமாக அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவர் பாண்டியன் குறித்து மருத்துவமனை தலைமை மருத்துவரிடமும், மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநரிடமும் புகார் சொல்லி இருக்கிறோம்.

ஆனால், சம்பவம் நடந்து 20 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. போதையில் வந்த அந்த மருத்துவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிக்கு ஒருவேளை போதையில் தவறான சிகிச்சையை அளித்திருந்தால், அந்த நோயாளியின் கதி என்ன ஆயிருக்கும்ன்னு நினைச்சாலே, பதற்றமா வருது. அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கனும். அவரது மருத்துவர் அங்கீகாரத்தை இந்திய மருத்துவக் கழகமும் உடனடியாக ரத்து பண்ணனும். இந்த மருத்துவர் அடிக்கடி இப்படி டியூட்டி நேரத்தில் மது அருந்திவிட்டு வருவதாக சொல்றாங்க. இவரால் நோயாளிகளுக்கு ஏதேனும் ஆவதற்குள் இவர்மீது கடுமையா நடவடிக்கை எடுக்கணும்’’ என்றார்கள்.