Published:Updated:

கலெக்டர் அலுவலகத்தில் முளைத்த திடீர் பிள்ளையார்! - கரூர் சர்ச்சை

கலெக்டர் அலுவலகத்தில் முளைத்த திடீர் பிள்ளையார்! - கரூர் சர்ச்சை
கலெக்டர் அலுவலகத்தில் முளைத்த திடீர் பிள்ளையார்! - கரூர் சர்ச்சை

கரூர் பத்திரப்பதிவுத்துறையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் பிள்ளையார் கோயில் ஒன்றை கட்ட முயல்வது பெரும் சர்ச்சையை ஏற்டுத்தியிருக்கிறது. 

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம், இணை சார் பதிவாளர், முதன்மை கல்வி அலுவலர், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) உள்ளிட்ட அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்தக் கட்டடம் முன்பாக, சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பையும் மீறி புதிதாகப் பிள்ளையார் சிலை ஒன்றை வைத்து கோயில் கட்ட முயல, அது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`அரசு அலுவலக வளாகங்களுக்குள் கோயில்கள் கட்டக் கூடாது' என்ற அரசு ஆணைகள், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற உத்தரவுகளைக் கண்டுகொள்ளாமல் சட்டவிரோதமாக இக்கோயில் கட்டப்படுகிறது எனக் கூறி சமூக ஆர்வலர்கள் கச்சைக்கட்டி வருகின்றனர். `விதிகளுக்கு முரணாக எழுப்பப்படும் இந்தக் கோயிலை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட கரூர் மாவட்ட ஆட்சியர், பிரச்னைக்குரிய கோயிலை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால்,வெகுண்டெழுந்த சாமானிய மக்கள் கட்சி, தலித் விடுதலை இயக்கம், சமநீதி கழகம் மற்றும் கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் ஆகியோர் போராட முடிவு செய்துள்ளனர். 
 

இதுசம்பந்தமாக நம்மிடம் பேசிய வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், ``கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் நேர்மையானவர். ஆனால், இந்தக் கோயில் கட்டப்படுவதைத் தடுக்க அஞ்சுகிறார். 'யார் கோயிலைக் கட்டுகிறார்கள்?' என்று கேட்டதற்கு, 'யாரென்று தெரியவில்லை' என அனைத்து அதிகாரிகளும் கைவிரித்தனர். நெருக்கிப் பிடிச்சு விசாரிச்சப்பதான், பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவர், இந்தக் கோயிலை கட்டுவதாகச் சொன்னாங்க. அதாவது, பத்திரப் பதிவுத்துறையில் இந்தப் பிள்ளையாரால் நல்லா கல்லா கட்ட முடியுதாம். அதனால்தான், அந்தப் பிள்ளையாருக்கு நிரந்தரமா கோயில் கட்ட, அவர் முயற்சி செய்றாராம். அரசு அலுவலக வளாகத்தில் கோயில்கள் கட்டக் கூடாதுன்னு விதிமுறை இருக்கு. கோர்ட் தீர்ப்புகள் இருக்கு. ஆனா, அதையும் மீறி கட்டுறாங்க. மதச்சார்ப்பற்ற இந்தியாவில் இதுபோல் குறிப்பிட்ட கடவுள் சம்பந்தமான கோயிலை அமைப்பது பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

அப்படியானால், அதே இடத்தில் பெரியார் சிலை, அம்பேத்கர் சிலை, யேசு நாதர் சிலை போன்றவற்றை வைத்தால் அதிகாரிகள் இதேபோல கண்டுகொள்ளாமல் இருப்பார்களா? கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கட்டப்பட்டு வரும் திடீர் விநாயகர் கோயிலை அகற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்காவிட்டால், முதல்கட்டமாக வரும் 21-ம் தேதி கரூருக்கு வருகைதரும் சிறுபான்மையினர் நல ஆணையர் சிஸ்வா பிரகாஷிடம் முறையிடுவோம். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து, அந்தப் பிள்ளையார் கோயிலை அகற்றினால், நாங்கள் போராட்டத்தை வாபஸ் வாங்குவோம்’’ என்றார் ஆக்ரோஷமாக.