Published:Updated:

`பொன் மாணிக்கவேல் சொல்வது கொஞ்சம் உண்மை, கொஞ்சம் பொய்' - ஆதாரங்களுடன் ஏ.டி.எஸ்.பி இளங்கோ

`பொன் மாணிக்கவேல் சொல்வது கொஞ்சம் உண்மை, கொஞ்சம் பொய்' - ஆதாரங்களுடன் ஏ.டி.எஸ்.பி இளங்கோ
`பொன் மாணிக்கவேல் சொல்வது கொஞ்சம் உண்மை, கொஞ்சம் பொய்' - ஆதாரங்களுடன் ஏ.டி.எஸ்.பி இளங்கோ

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சொல்வதில் கொஞ்சம் உண்மை, கொஞ்சம் பொய் இருப்பதாக ஏ.டி.எஸ்.பி இளங்கோ ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார். 

பொன் மாணிக்கவேலுக்கு எதிராக டி.ஜி.பி-யிடம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் மாற்றுப்பணியில் பணியாற்றும் சில போலீஸார் மனு கொடுத்தனர். அதற்கு அவர் பதிலடி கொடுத்தார். இதனால் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் கடும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

``பொன் மாணிக்கவேல், எங்களை சுதந்திரமாக செயல்படவிடவில்லை. அவரின் நிர்பந்தத்தின்பேரில் விசாரணை நடத்தினோம். 21.7.2017-ம் தேதிக்கு முன்பதிவான வழக்குகளை விசாரிக்கத்தான் நீதிமன்றம் எங்களுக்கு உத்தரவிட்டது. அதனால்தான் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. ஓய்வு பெற்றபிறகும் நீதிமன்றத்தால் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, இனிமேலும் அவரின் தலைமையின் கீழ் எங்களால் பணியாற்ற முடியாது. எனவேதான் இடமாறுதல் கேட்டு டி.ஜி.பி-யிடம் மனு கொடுத்துள்ளோம்'' என்கின்றனர் பொன் மாணிக்கவேலுக்கு எதிராக சிலைக் கடத்தல் பிரிவில் இருக்கும் மாற்றுப்பணி போலீஸார். 

அதற்குப் பதிலளித்த சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், ``சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் மாற்றுப்பணியில் பணியாற்றும் காவல்துறையினர், எப்.ஐ.ஆர் பதிவு செய்யமுடியாது. மேலும், அவர்கள் அனைவரும் விசாரணை அதிகாரிகள்தான். விசாரணையை முடித்து அதன் ரிப்போர்ட்டை எங்களிடம் சமர்பிக்கும்போது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் உள்ள போலீஸார்தான் எப்.ஐ.ஆர் பதிவு செய்து கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள். நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்கள் தங்களின் கடமைகளைச் சரிவர செய்யவில்லை. அதிலும் சிலர் நீண்ட காலமாக மருத்துவ விடுப்பில் உள்ளனர். எனக்கு எதிராக யாரும் புகார் கொடுக்கவில்லை. சிலைகளைப் பறிமுதல் செய்யும்போது அவற்றை தூக்குவதற்கும் கண்காணிப்பதற்கும்தான் மாற்றுப்பணியில் பணியாற்றவர்களை பயன்படுத்தியுள்ளேன். அவர்களைக் கொண்டு எந்தச் சிலைகளையும் நான் மீட்கவில்லை. சிலைக் கடத்தியவர்களை தனியொருவனாக சென்று நான்தான் ஆயுதப்படை போலீஸாரின் உதவியோடு கைது செய்தேன். சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவில் காவலர்களே இல்லையென்றாலும் என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை உழைப்பேன். நான், தப்பு செய்தால் என்னுடைய ஹாலரைப் பிடித்து கேள்வி கேட்கலாம். இடமாறுதல் கேட்பவர்கள், தங்களின் கடமைகளை முடித்துவிட்டால் மாலை போட்டு அவர்களை அனுப்பி வைப்பேன்" என்று தெரிவித்தார். 

இதுகுறித்து ஏ.டி.எஸ்.பி இளங்கோவிடம் பேசினோம். ``பொன்.மாணிக்கவேல் கூறுவதில் சில உண்மைகளும் பொய்களும் உள்ளன. அதாவது, இடமாறுதல் கேட்டு யாரும் விண்ணப்பிக்கவில்லை என்று கூறுகிறார். அதில் உண்மையில்லை. ஏனெனில் சிலர் இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்தும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. அவரால் மாற்றுப்பணியில் பணியாற்றியவர்கள் பல்வேறு சங்கடங்களை அனுபவித்துள்ளனர். ஏன், ஏ.டி.எஸ்.பி-க்கள் அசோக்குமார், சந்திரசேகர் ஆகியோர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். அவர்கள் எதற்காக விருப்ப ஓய்வு பெற்றார்கள் என்பதை விசாரித்தால் உண்மை வெளிவரும்.

எங்களுக்கு நீதிமன்றம் கொடுத்த டாஸ்க் என்பது 21.7.2017-ம் ஆண்டு முன் பதிவான 333 வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்பதுதான். அந்த வழக்குகளை பொன் மாணிக்கவேல், எங்களிடம் பிரித்துக்கொடுத்துவிட்டார். அப்போது வாய்மொழியாக எங்களை விசாரிக்கக்கூடாது என்று அவர் உத்தரவிட்டதால் நாங்கள் விசாரிக்கவில்லை. எங்களின் குற்றச்சாட்டுக்களுக்கு அவர் எந்தவித பதிலும் சொல்லவில்லை. பந்தநல்லூர் வழக்கில் ஏ.டி.எஸ்.பி குமாரை சுதந்திரமாக விசாரிக்கவிடவில்லை. இதனால்தான் அவர் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார்.

எங்களுக்கு எப்.ஐ.ஆர் பதிவு செய்ய அதிகாரம் கிடையாது என்று அவர் சொல்வது உண்மைதான். நாங்கள் விசாரணை குழுவில்தான் இருக்கிறோம். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் 28 அதிகாரிகள் உள்ளனர். அவர்கள்தான் எப்.ஐ.ஆர்-களைப் பதிவு செய்வார்கள். நிலுவையில் உள்ள வழக்குகளைத்தான் விசாரித்தோம். சிலவற்றை மிகைப்படுத்திக்கூறி  மக்களை ஏமாற்றிவருகிறார்.  

எனக்குப் பதிலாகவும் குமாருக்குப் பதிலாகவும் ஏ.டி.எஸ்.பி-க்கள் ராஜாராம், மாதவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், என்னை பொன் மாணிக்கவேல் விடுவிக்கவில்லை. அவர், ஓய்வுபெறும் நாளில் டி.ஜி.பி உத்தரவோடு அவரைச் சந்தித்தேன். அப்போதுகூட என்னை விடுவிக்கவில்லை. எஸ்.ஐ-க்கள், காவலர்கள் இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இடமாறுதல் கேட்ட விவகாரம் பெரிதானதும் நள்ளிரவில் 60 பேரை மெயில் போட்டு இடமாறுதல் செய்துள்ளார். அதற்கு ஆதாரமாக ஒரு தகவலைச் சொல்கிறேன். மதுரையில் எஸ்.ஐ போதுமணி என்பவரை இடமாறுதல் செய்ய உத்தரவு வந்தது. அவருக்குப் பதிலாக தமிழ்செல்வியும் நியமிக்கப்பட்டார். ஆனால், போதுமணியை அவர் விடுவிக்கவில்லை. அவர் செய்த தவறுகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் உளறுகிறார்" என்றார். 

அவரிடம்  பொன் மாணிக்கவேல் மீது எதற்காக பகிரங்க குற்றச்சாட்டுக்களைச் சொல்கிறீர்கள் என்ற கேள்வியை கேட்டபோது, `` பொன் மாணிக்கவேல், சிறந்த அதிகாரி, கடின உழைப்பாளி என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஐ.ஜி-யாக இருக்கும் அவர், கீழே இறங்கி வேலை பார்த்துவருகிறார். அவர் மட்டுமல்லாமல் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகள் ஏராளமான சிலைகளை மீட்டுள்ளனர். அதன்தொடர்ச்சியாகத்தான் பொன் மாணிக்கவேலும் ஏராளமான சிலைகளை மீட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறையிலும் தவறு இருக்கிறது. அவரை ஹீரோவாக்க நாங்கள் பழிவாங்கப்படுகிறோம். இது ஒரு விசாரணை டீம். குழுவோடு அவர் ஒருங்கிணைந்து செயல்பட்டிருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. காவல்துறை, தமிழக அரசை அவர் எதிர்க்கிறார்.  அவரின் ஏதோ ஒரு நோக்கத்துக்காக உழைக்க நாங்கள் தயாராக இல்லை. மக்களுக்காக உழைக்கத் தயாராக இருக்கிறோம். அதனால்தான் நாங்கள் இடமாறுதல் கேட்கிறோம்" என்றார். 

இதுகுறித்து பொன் மாணிக்கவேலுவின் விளக்கம் கேட்க பலதடவை முயற்சி செய்தோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப்பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம்.