Published:Updated:

90 செ.மீட்டருக்குப் பதில் 85 செ.மீட்டர்! - பனியனை மாற்றித்தர மறுத்த கடைக்கு ரூ.8,000 அபராதம்!

90 செ.மீட்டருக்குப் பதில் 85 செ.மீட்டர்! - பனியனை மாற்றித்தர மறுத்த கடைக்கு ரூ.8,000 அபராதம்!
90 செ.மீட்டருக்குப் பதில் 85 செ.மீட்டர்! - பனியனை மாற்றித்தர மறுத்த கடைக்கு ரூ.8,000 அபராதம்!

சேவைக் குறைபாட்டுடன் செயல்பட்ட வணிக நிறுவனத்துக்கு நெல்லை நுகர்வோர் கோர்ட்டு அபராதம் விதித்துத் தீர்ப்பு அளித்துள்ளது. 

நெல்லையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பி.வி.முத்துராமன். இவர் மேலப்பாளையத்தில் சரவணா செல்வா ரத்தினம் ஸ்டோரில் கடந்த ஜூலை 22-ம் தேதி ரூ.1,234 மதிப்பிலான வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கியிருக்கிறார். அதோடு சேர்த்து 90 செ.மீ அளவுள்ள பனியன் ஒன்றையும் வாங்கியுள்ளார். மறுநாள் அவர் அந்தப் பனியனை அணிந்துகொண்டு நீதிமன்றம் செல்வதற்காக அதை எடுத்துப் பார்த்திருக்கிறார்.

அப்போது அது 90 செ.மீட்டருக்குப் பதிலாக 85 செ.மீ அளவுடன் இருந்தால் அதை அணியமுடியவில்லை. அதனால் அந்தப் பனியனை எடுத்துச் சென்று கடையின் மேலாளரிடம் காட்டி, தனக்குத் தேவையான அளவுக்குப் பதிலாக தவறுதலாக மாற்றிக் கொடுக்கப்பட்டு விட்டதால் அதை திரும்பப் பெற்றுக் கொண்டு தனக்குத் தேவையான அளவுக்கு மாற்றித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், கடையிலிருந்த மேலாளர், தங்கள் கடையில் இருந்து ஒருமுறை வாங்கிச் சென்ற பொருள்களை மீண்டும் திரும்ப வாங்குவதில்லை எனக் கூறி அதை மாற்றித் தர மறுத்துவிட்டார். 

அதனால் மன உளைச்சலுக்கு ஆளான வழக்கறிஞர் முத்துராமன் இது தொடர்பாக அந்தக் கடைக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதற்குக் கடை நிர்வாகத்தினர் எந்தப் பதிலையும் தரவில்லை. எனவே, தனக்கு ஏற்பட்ட சேவைக் குறைபாட்டுக்கு உரிய தீர்வு பெற்றுத் தருமாறு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரம்மா ஆஜரானார். 

இந்த மனுவை நுகர்வோர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. எனவே, நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தைத் தெரிவிக்குமாறு நுகர்வோர் கோர்ட்டு சார்பாக கடையின் மேலாளர் மற்றும் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்குக் கடை நிர்வாகத்தினர் எந்தப் பதிலையும் அனுப்பவில்லை. மேலும், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் இல்லை. அதனால் கடையின் மேலாளர் மற்றும் உரிமையாளர் ஆகியோரை தோன்றாத் தரப்பினராக நீதிமன்றம் அறிவித்தது. 

வழக்கில் ஆதாரம் இருப்பதாலேயே கடையின் சார்பாக உள்ளவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதை வழக்கறிஞர் பிரம்மா எடுத்துக்கூறி வாதிட்டார். அதை ஏற்றுக்கொண்ட நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் தேவதாஸ், உறுப்பினர் சிவனமூர்த்தி ஆகியோர் தவறுதலாக பனியன் அளவை மாற்றிக் கொடுத்தது சேவைக் குறைபாடு எனத் தீர்ப்பளித்தனர். சேவைக் குறைபாடு காரணமாக மனுதாருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ.5,000 மற்றும் வழக்குச் செலவுக்கு ரூ.3000 என மொத்தம் 8000 ரூபாய் அளிக்க வேண்டும். அத்துடன், தவறான அளவுள்ள பனியனை திரும்ப பெற்றுக்கொண்டு மனுதாருக்கு பனியன் விலையான 104 ரூபாயைத் திருப்பி வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.