Published:Updated:

`நவம்பர் மாத சம்பளம் இதுவரை வரவில்லை!’ - திருச்சி அரசு மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம்

`நவம்பர் மாத சம்பளம் இதுவரை வரவில்லை!’ - திருச்சி அரசு மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம்
`நவம்பர் மாத சம்பளம் இதுவரை வரவில்லை!’ - திருச்சி அரசு மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம்

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு திருச்சி அரசு தலைமை மருத்துவமனை நிர்வாகம் சரி வர ஊதியம் வழங்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 40-க்கும் மேற்பட்டவர்கள், இன்று திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விபத்துப் பிரிவுக்கும் முன்பாக உட்கார்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனை ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் மற்றும் இந்திய தொழிற்சங்க மையம் மாநகர் மாவட்டம் சார்பில் அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரெங்கராஜன், மாவட்டக் குழு உறுப்பினர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில், திருச்சி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியருக்குக் கடந்த நவம்பர் மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், இங்கு பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி தொடர்ச்சியாகப் போராடி வருவதாகவும், கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த முறை சம்பள உயர்வுகோரி ஒப்பந்தப் பணியாளர்கள் போராடியபோது, மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில், குறைந்தபட்ச கூலி அரசாணை கொண்டுவரப்பட்டது. அந்த அரசாணையை இன்னமும் அமல்படுத்தாமல் அரசு மருத்துவமனை நிர்வாகம் தங்களை வஞ்சிப்பதாகக் குற்றஞ்சாட்டினர். போராட்டம் நடத்தியவர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இன்று மாலைக்குள் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வரவு வைக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் வாங்கப்பட்டது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மணிமாறன், ``அரசு மருத்துவமனையில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், துப்புரவுப் பணியாளர்கள், சமையலர், ஓட்டுநர் என பலவகையிலான பணிகளுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்குக் கூலி உயர்வு கேட்டு பல முறை போராட்டங்கள் நடத்தப்பட்டது. எங்களின் போராட்டங்களின் விளைவாகத் திருச்சி மாவட்ட ஆட்சியரின் ஆணைக்கு இணங்க, பணியைப் பொறுத்து ஊதியம் வரையறை செய்து அரசாணை வெளியிடப்பட்டது. அந்த வகையில் ஒருவருக்கு 10,000-க்கும் மேலாக ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால் மருத்துவமனை நிர்வாகம், தோராயமாக ரூ.5,500 மட்டும் கூலியாக வழங்குகிறது. அதிலும் நவம்பர் மாத சம்பளத்தை இன்றுவரை வழங்கவில்லை. போராட்டத்துக்குப் பிறகு இன்று மாலைக்குள் வழங்குவதாகக் கூறியுள்ளார்கள். மற்றபடி மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்த கூலியை வழங்குவது தொடர்பாக மீண்டும் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துப் பேச முடிவெடுத்துள்ளோம்” என்றார்.

திருச்சி அரசு மருத்துவமனையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நடத்தும் போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.