Published:Updated:

புனே அருகே ஏலியன்கள் நடமாட்டம்! - பிரதமர் அலுவலகத்தை அதிரவைத்த இ-மெயில்

புனே அருகே ஏலியன்கள் நடமாட்டம்! - பிரதமர் அலுவலகத்தை அதிரவைத்த இ-மெயில்
புனே அருகே ஏலியன்கள் நடமாட்டம்! - பிரதமர் அலுவலகத்தை அதிரவைத்த இ-மெயில்

புனே அருகே ஏலியன்கள் நடமாட்டம் இருப்பதாக பிரதமர் அலுவலகத்துக்குச் சென்ற இ-மெயிலால் மகாராஷ்டிரா போலீஸார் பரபரப்பானார்கள். பிரதமர் அலுவலக உத்தரவை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் குறிப்பிட்ட பகுதியில் ஏலியன்கள் நடமாட்டம் எனக் கூறப்படுவதில் உண்மையில்லை என்பது தெரியவந்தது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஷிங்காஹத் பகுதியை அடுத்துள்ள காட்டுப் பகுதியில் ஏலியன்கள் நடமாட்டம் இருப்பதாகவும், நமது தகவல்களைச் சேகரித்து அவர்கள், தங்கள் கிரகத்துக்கு அனுப்பி வருவதாகவும் பிரதமர் அலுவலகத்துக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இ-மெயில் அனுப்பியிருந்தார். மேலும், அந்தத் தகவல்களைச் சேகரித்துக் கொண்டு பூமி மீது ஏலியன்கள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும், உடனடியாக அதைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த இ-மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதையடுத்து, குறிப்பிட்ட அந்தப் பகுதியில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி ஷிங்காஹத் பகுதி போலீஸாருக்குப் பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பறந்தது. உடனடியாகக் களத்தில் இறங்கிய போலீஸார், புகாரில் தெரிவிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தக் காட்டுப் பகுதியில் ஏலியன்கள் நடமாட்டம் எதுவும் இல்லை என்பதை போலீஸார் உறுதிப்படுத்தினர். மேலும், புகார் கூறிய இளைஞருக்கு சமீபத்தில் மூளையில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருப்பதாகவும், அவர் அந்த காயத்திலிருந்து தேறி வருவதும் தெரியவந்தது. வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் அந்த இளைஞரின் மனைவியும், அப்பகுதியில் ஏலியன்கள் நடமாட்டம் ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். 

Photo Credit:ANI

இதுகுறித்து பேசிய ஷிங்காஹத் காவல்நிலைய ஆய்வாளர் சர்தார் பாட்டீல், ``ஷிங்காஹத் பகுதியை அடுத்த காட்டுப்பகுதியில் ஏலியன்கள் பதுங்கி இருந்து தகவல்களைச் சேகரிப்பதாகக் கடந்த 15 நாள்களுக்கு முன்னர் எங்களுக்கு ஒரு புகார் வந்தது. அந்தப் புகாரில், தனது வீட்டு ஜன்னலைத் திறக்கும்போதெல்லாம், ஏலியன்கள் தன்னைப் புகைப்படம் எடுத்துக்கொள்வதாக இளைஞர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஏலியன்கள் தன்னைத் தொடர்புகொள்ள முயன்றதாகவும் அவர் கூறியிருந்தார். குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தியபோது, சந்தேகப்படும்படியான எந்த நடவடிக்கைகளும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், மூளையில் ஏற்பட்ட பிரச்னைக்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதும், அதிலிருந்து அவர் மீண்டு வருவதும் விசாரணையில் தெரியவந்தது’’ என்றார். இதுகுறித்த அறிக்கை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.