Published:Updated:

`காளையை சுட்டதுக்குப் பதிலா எங்களை சுட்டிருக்கலாம்' - கதறும் பழனியம்மாள்

சு.சூர்யா கோமதி
`காளையை சுட்டதுக்குப் பதிலா எங்களை சுட்டிருக்கலாம்' - கதறும் பழனியம்மாள்
`காளையை சுட்டதுக்குப் பதிலா எங்களை சுட்டிருக்கலாம்' - கதறும் பழனியம்மாள்

விழுப்புரம் மாவட்டம் கெடார் பகுதியில், மணல் அள்ளிய மாட்டு வண்டித் தொழிலாளிகள்மீது நேற்று மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தச் சம்பவத்தின்போது, மாட்டுவண்டியில் பூட்டப்பட்டிருந்த காளையின் வாயில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. இது தொடர்பான புகைப்படங்கள் நேற்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. இது தொடர்பாக, மாட்டின் உரிமையாளர் பழனியம்மாளிடம் பேசினோம்.

"எங்க காளையை நாங்க  ஜல்லிக்கட்டன்னுதான் கூப்பிடுவோம். மனுஷங்க காட்டும் அன்பைவிட, பல மடங்கு அன்புகொண்டவன். ஜல்லிக்கட்டனை நாங்க எங்களுடைய  மூத்த மகனாகத்தான் பார்த்தோம். எங்களுக்கு குலத்தொழில் விவசாயம். என் கணவர் கிருஷ்ண மூர்த்தி, அவரோட நண்பர்களுடன்  சேர்ந்து வீரமூர் ஏரியில் நேற்று  காலை 4 மணிக்கு மண் எடுக்கப் போனார். அதன்பின், ஜல்லிக் கட்டனை சுட்டுட்டாங்கன்னு, மருத்துவமனையில் இருந்து போன் பண்றாரு, நான் பதறி அடிச்சு குழந்தையோட அரசு கால்நடை மருத்துவமனைக்குப் போக,  ரத்தம் நிறைந்த வாயோடு, வலியில் துடித்துக்கொண்டிருந்த எங்கள் காளையைப் பார்த்ததும் மூச்சே நின்னு போச்சு.துப்பாக்கி சத்தம் கேட்டதும், ஆளுங்க எல்லாம் பயத்தில் கரும்புத் தோட்டத்துக்குள்ள போயிட்டாங்க. ஐந்து முறை துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டிருக்கு. 3 குண்டுகள் மாட்டு வண்டியிலும் ,ஒரு குண்டு ஜல்லி கட்டன் மீதும், இன்னொரு குண்டு தரையிலும் வெடிச்சிருக்கு. எங்க காளையைச் சுட்டதுக்குப் பதிலா, எங்களை சுட்டிருக்கலாம்.

வாயில்லா ஜீவன்  வலியால் கதறுவதைக் கேட்க முடியல என்று சொல்லும்போதே கண்கள் குளமாகிறது பழனியம்மாளுக்கு. சற்று அமைதியாகித் தொடர்கிறார். இப்போ ஆபரேஷன் செய்து அவன் வாயில் இருந்த துப்பாக்கிக் குண்டை  எடுத்துட்டாங்க. ஆனா, இன்னும் காளை இயல்பு நிலைக்கு வரல .காவல் துறையில் வழக்குப்பதிவு செய்திருக்கோம். நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்காங்க. எங்கள் ஜல்லிக்கட்டான் குணமாக அந்த ஆண்டவன்தான் அருள்புரியணும்'' என்று கலங்கிய கண்களுடன் காளையை அணைத்துக்கொள்கிறார் பழனியம்மாள்.