Published:Updated:

தமிழக அரசின் அறிவிப்பால் 11 லட்சம் பேர் வேலை இழப்பு! - பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் வேதனை

தமிழக அரசின் அறிவிப்பால் 11 லட்சம் பேர் வேலை இழப்பு! - பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் வேதனை
தமிழக அரசின் அறிவிப்பால் 11 லட்சம் பேர் வேலை இழப்பு! - பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் வேதனை

தமிழக அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு அரசாணை... 11லட்சம் பேருக்கு வேலை இழப்பு…

தமிழகம் முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட உள்ளன. அதனால் தடை செய்யப்பட்ட பொருள்களைத் தமிழக அரசு பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து. ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாக குழுக்கள் அமைத்த சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆங்காங்கே பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குகளாக 13 பொருள்கள் அடையாளம் காணப்பட்ட பிளாஸ்டிக் தாள்கள்-விரிப்புகள், பிளாஸ்டிக்-தெர்மகோல் தட்டுகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பேப்பர் குவளைகள், பிளாஸ்டிக் தண்ணீர் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் தூக்குப் பைகள், பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பேப்பர் தட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், நெய்யப்படாத பிளாஸ்டிக் தூக்குப் பைகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பேப்பர் பைகள், தெர்மகோல் குவளைகள் ஆகியன தடை செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பொருள்களுக்குப் பதிலாக, பாக்குமட்டையில் தயார் செய்யப்பட்ட தட்டுகள், காகிதப் பைகள், கண்ணாடி அல்லது அலுமினிய குவளைகளை மக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் பிளாஸ்டிக் பைகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், திருச்சியில் திருச்சி-புதுக்கோட்டை பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் முத்துமாணிக்கம் செய்தியாளர்களிடம் பேசினார். “தமிழ்நாடு  அரசு அறிவித்த பிளாஸ்டிக் தடையால் தற்போது தமிழ்நாடு முழுவதும் 11 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரசால் கிரீன் வகை என முத்திரையிடப்பட்ட சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத பிளாஸ்டிக் என அனுமதிக்கப்பட்ட பிளாஸ்டிக்குக்கும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாதத்துக்கு முன்னாள் அரசால் முழுமையாகப் பரிசோதனை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தற்போது தடை என்பதை திடீர் என அறிவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த ஜூன் மாதம் அரசு பச்சை வகை முத்திரையிடப்பட்ட சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத பிளாஸ்டிக் என பிளாஸ்டிக் உற்பத்திக்காகப் பல கோடி ரூபாய் வங்கியில் கடன் வாங்கியுள்ளோம். தற்போது தடை விதித்ததால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.

இந்தச் சுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்கால் விவசாயத்துக்கும் மண்ணுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. பிளாஸ்டிக் தடையை நீக்காவிட்டால் வணிகர் சங்கங்களோடு ஆலோசித்து மாநில அளவில் போராட்டம் நடத்துவோம். பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை உருவாக்க நூறு சதவிகிதம் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து தரத் தயாராக இருக்கிறோம். அதனால் தற்போது விதிக்கப்பட்ட தடை குறித்து தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.