Published:Updated:

சபரிமலை ஏறிய 2 பெண்கள்! - பின்னணியில் சிறிய அறிவியலும் பெரிய குழுவும்

சபரிமலை ஏறிய 2 பெண்கள்! - பின்னணியில் சிறிய அறிவியலும் பெரிய குழுவும்
சபரிமலை ஏறிய 2 பெண்கள்! - பின்னணியில் சிறிய அறிவியலும் பெரிய குழுவும்

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து மற்றும் மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா ஆகிய இரு பெண்களும் ஜனவரி 2-ம் தேதி சபரிமலை சந்நிதானத்துக்குள் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்தனர்.

இதன்மூலம் பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சபரிமலையில் பெண்கள் வழிபாடு சாத்தியப்பட்டுள்ளது.  இவர்களைப் போலவே மற்ற பெண்களும் பல முறை சபரிமலை சந்நிதானம் வரை சென்று பக்தர்களின் போராட்டத்தால் உள்ளே செல்ல முடியாமல் திரும்பியுள்ளனர். இப்படி இருக்க, இவர்கள் இருவர் மட்டும் எப்படி எந்த பக்தர் கண்ணிலும் படாமல் ஆயிரக்கணக்கானவர்களை மீறி சாமி தரிசனம் செய்தனர்? என்ற கேள்வி பலரது மனத்திலும் எழுந்துள்ளது. இந்த இரு பெண்களும் சபரிமலை செல்ல, ஒரு பெரிய குழுவும் அவர்களுக்குப் பின்னால் சிறு அறிவியலும் உதவியுள்ளது. 

கேரளாவின் கோழிகோடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரேயாஸ் கணரன். இவர், மருத்துவ பொறியாளர் மற்றும் சமூக ஆர்வலராகப் பணியாற்றிவருகிறார். சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு இவர் முழு ஆதரவு தெரிவித்து வந்துள்ளார். இதனால், இதே கொள்கை உடையவர்களை இணைத்து, ‘நவோதனா கேரளம் சபரிமலையிலேக்’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்கியுள்ளார். இதில், சபரிமலைக்குள் சென்ற பிந்து, கனகதுர்கா போன்ற பல பெண்களும் பிரசாத் அமோர் என்ற மனநல மருத்துவரும் சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இணைந்து, பல நாள்களாகத் திட்டமிட்டு அறிவியலைப் பயன்படுத்தி கோயிலுக்குள் நுழைந்துள்ளனர்.

இது தொடர்பாக ஆங்கில ஊடகங்களிடம் பேசிய மருத்துவர் அமோர், “ நீண்ட நாள்களாகப் பல பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயற்சி செய்கின்றனர். ஆனால், அவர்களால் பக்தர்களின் போராட்டத்தைத் தாண்டி உள்ளே செல்ல முடியவில்லை. பெண்களை உள்ளே அனுப்ப அரசும் தங்களால் முடிந்த பல முயற்சிகளை எடுத்துவருகிறது. இருந்தும் அதனால் எந்தப் பலனும் இல்லை. இதிலிருந்து பெண்கள் என்றுமே கோயிலுக்குள் செல்ல முடியாது என்ற ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. பெண்களுக்கு எதிரான மூட நம்பிக்கைகளை உடைத்தெறிய, நாங்கள் ‘இன்விஸிபிள் கொரில்லா’ என்ற சிறிய அறிவியல் கோட்பாட்டைப் பயன்படுத்தினோம்” என்று கூறினார். 

முன்னதாக, இன்விஸிபிள் கொரில்லா என்றால் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம். இன்விஸிபிள் கொரில்லா என்பது, ஒருவரின் கவனத்தைத் திசைதிருப்பப் பயன்படுத்துவது. இதை, 1999-ம் ஆண்டு டேனியல் சிம்சன் மற்றும் கிறிஸ்டோபர் காப்ரிஸ் என்ற அறிவியலாளர்கள் கண்டுபிடித்து வீடியோவாக வெளியிட்டனர். அந்த வீடியோவில், சிலர் பந்துகளைத் தூக்கிப்போட்டு பிடித்துக்கொண்டிருப்பார்கள். வீடியோ தொடங்கும்போதே அதில் எந்த முறை பந்து பரிமாறப்படுகிறது என்பதைக் கவனியுங்கள் எனக் குறிப்பிட்டிருக்கும். அந்த வீடியோவைப் பார்த்துக்கொண்டிருப்பவர், பந்துகள் பரிமாறப்படுவதை மட்டுமே கவனித்துக்கொண்டிருப்பார். அதற்கு இடையில், ஒரு கொரில்லா நடந்து செல்லும், அப்போது, வீடியோவைப் பார்ப்பவர்கள் குழம்ப நேரிடும். அந்த இடத்தில் பந்து பரிமாற்றத்தை எண்ணத் தவறவிடுவார்கள். இதனால், இறுதியில் தவறான விடை வரும். இந்தக் கோட்பாட்டைத்தான் மருத்துவர் அமோரும் இரு பெண்கள் சபரிமலைக்குச் செல்ல பயன்படுத்தியுள்ளார். 

 “முதலில், நாங்கள் போராட்டக்காரர்கள் மற்றும் கோயிலில் உள்ள போலீஸாரை திசைதிருப்ப முயற்சி செய்தோம். அதன்படி, முன்னதாக சிலரை அனுப்பி சபரிமலையில் நிலவும் சூழ்நிலைகளை ஆராய்ந்தோம். இந்த இரு பெண்களும் கோயிலுக்குள் செல்லப்போவது சபரிமலைக்கு வெளியில் இருக்கும் சில காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரியும். அவர்களிடமிருந்து இந்த விஷயம் வெளியில் போகாதவாறு பாதுகாத்தோம். பிறகு, இன்விஸிபிள் கொரில்லா முறையைப் பயன்படுத்தி, கூட்டத்துக்குள் மிகவும் சாதாரணமாக இரு பெண்களையும் அனுப்பினோம். பிந்து மற்றும் கனகதுர்கா ஆகிய இருவரும் மிகுந்த தைரியம் உள்ளவர்கள். எந்த இடத்திலும் தங்கள் உடல் அசைவிலும் நடையிலும், பாவனைகளிலும் எந்த மாற்றமும் காண்பிக்காமல், கூட்டத்துக்குள் புகுந்து போலீஸ் பாதுகாப்புடன் சந்நிதானம் வரை சென்றுவிட்டனர்.  

புடவையில் சென்றால், பெண்கள் எனத் தனியாகத் தெரியும் என்ற காரணத்தால்தான், இருவரும் சுடிதார் அணிந்துசென்றனர். இவர்கள் சந்நிதானத்துக்குள் நுழையும் வரை அது பெண்கள்தான் என யாரும் கவனிக்கவில்லை.  மக்களுக்கு பலவற்றின் மீது கவன ஈர்ப்பு இருக்கும். அதனால், நாம் அவர்களைத் திசைதிருப்ப முயற்சி செய்தால் மட்டுமே அவர்களின் கவனம் சிதறும். மற்றபடி மக்கள் தங்களின் வேலைகளிலேயே கவனம் செலுத்திவருவார்கள். இதைப் பயன்படுத்தித்தான் இரு பெண்களும் கோயிலுக்குள் சென்றார்கள்” என விளக்கியுள்ளார். 

மேலும், “இரு பெண்களும் ஆம்புலன்ஸில் வந்து இறங்கி, யாருக்கும் தெரியாமல் கூட்டம் இல்லாத நேரத்தில் பலத்த பாதுகாப்புடன் உள்ளே சென்றனர் எனப் பலர் கூறுகிறார்கள். ஆனால், அவை அனைத்தும் உண்மையில்லை. ஜனவரி 2-ம் தேதி, கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில், பிந்துவும் கனக துர்காவும் மிகவும் சாதாரணமாக மலை ஏறி ஐயப்பனைத் தரிசனம் செய்தனர்” என மருத்துவர் அமோர் கூறியுள்ளார்.