Published:Updated:

‘ பதிலடி கொடுக்கவே நாங்கள் செல்ல இருந்தோம்’ - சபரிமலை மசூதிக்குள் நுழைய முயன்ற பெண்கள் கைது

‘ பதிலடி கொடுக்கவே நாங்கள் செல்ல இருந்தோம்’ - சபரிமலை மசூதிக்குள் நுழைய முயன்ற பெண்கள் கைது
‘ பதிலடி கொடுக்கவே நாங்கள் செல்ல இருந்தோம்’ - சபரிமலை மசூதிக்குள் நுழைய முயன்ற பெண்கள் கைது

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, ஒவ்வொரு முறை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும்போதும் பல பிரச்னைகள், போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. ஐப்பசி பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டபோது, பெண் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலர் சபரிமலைக்குள் நுழைய முயன்றனர். இதை எதிர்த்து, சந்நிதான வாயிலில் பக்தர்கள் பலர் போராட்டம் நடத்தினர். பின்னர் நிலக்கல், பம்பை மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த போராட்டத்தில், 2,000-க்கும் மேற்பட்டோர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து, தற்போது மகர பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடந்த சர்ச்சையினால், சபரிமலையில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொடர் போராட்டங்கள் மற்றும் பதற்றம் காரணமாக அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த 2-ம் தேதி அதிகாலை கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து மற்றும் மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா ஆகிய இரு பெண்களும் சபரிமலை சந்நிதானத்துக்குள் சென்று ஐயப்பனைத் தரிசனம்செய்தனர். 

இந்த விவகாரம் கேரளாவையே புரட்டிப்போட்டுள்ளது. இரு பெண்கள் சபரிமலைக்குள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. சில தினங்களுக்கு முன்பு, கேரளா முழுவதும் நடந்த கடையடைப்புப் போராட்டம், இந்திய அளவில் பெரிதாகப் பேசப்பட்டது. இதில், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் கேரள பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து அமைப்புகளுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவிவருகிறது. 

PC : Twitter/@vinc2kindia

இதற்கிடையில், மூன்று பெண்கள் சபரிமலையில் உள்ள வாவர் மசூதிக்குச் செல்ல முயன்ற விவகாரம், அங்கும் இன்னும் சர்ச்சையை அதிகரித்துள்ளது. சபரிமலையில் உள்ள வாவர் மசூதி மிகவும் பிரசித்திபெற்றது. ஐயப்பன் கோயிலைப் போலவே அந்த மசூதிக்குள்ளும் பெண்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில பெண்கள் வாவர் மசூதிக்குள் நுழைய இருப்பதாக கேரள போலீஸுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், சபரிமலைக்கு செல்லும் ஏழு செக் போஸ்ட்டுகளிலும் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இறுதியில், சபரிமலை செல்ல முயன்ற மூன்று பெண்களையும் அடையாளம் கண்டு, காவல்துறையினர் கைது செய்தனர். 

PC : Twitter/@Hariindic

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. ரேவதி, சுசீலா தேவி, காந்திமதி ஆகிய மூவரும் திருப்பூர் மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் என கேரள போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி பேசிய கொழிஞ்சம்பாரா காவலர்கள், “இவர்கள் மூவரும் கேரளாவில் இன ரீதியிலான பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். அவர்கள் வருவது தொடர்பாக எங்களுக்கு முன்னதாகவே தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை அதிகரித்து, இறுதியில் பாலகாடு, வேல தவலம் செக் போஸ்டில் வைத்து இவர்களைக் கைதுசெய்துள்ளோம்” என்றுதெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மீது மதம், இனம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில், பல்வேறு குழுக்களுக்கு இடையில் பகைமையைத் தூண்டுதல் பிரிவு 153 ஏ-வின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ’சபரிமலைக்குள் பெண்கள் சென்றதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, நாங்கள் வாவர் மசூதிக்குள் நுழைய உள்ளோம்’ என அந்தப் பெண்கள் விசாரணையில் கூறியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.