Published:Updated:

வீரபாண்டியகட்டமொம்மன் நினைவு விழா: போலீஸ் கெடுபிடியால் புறக்கணிப்பு!

வீரபாண்டியகட்டமொம்மன் நினைவு விழா: போலீஸ் கெடுபிடியால் புறக்கணிப்பு!
வீரபாண்டியகட்டமொம்மன் நினைவு விழா: போலீஸ் கெடுபிடியால் புறக்கணிப்பு!

தூத்துக்குடி: போலீஸ் கெடுபிடியை கண்டித்து வீரபாண்டியகட்டமொம்மன் நினைவு விழாவை புறக்கணிக்க போவதாக வீரபாண்டியகட்டமொம்மன் நாயக்கர் பேரவை அறிவித்துள்ளது.

சமீபத்தில் ‘நாட்டின் விடுதலைக்காக போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்’ என சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தவுடன் அதைவரவேற்று நன்றி சொல்லிக் கொண்டிருந்த கட்டமொம்மனின் வாரிசுகளும் அவர் சார்ந்த சமூதாய மக்களும், வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெற இருக்கிற கட்டமொம்மன் நினைவு நாள் விழாவிற்கு ஏகப்பட்ட கெடுபிடி செய்து வரும் போலீஸாரை கண்டித்து, ஒட்டு மொத்த விழாவையும் புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த பாளையக்காரர்களில் ஒருவர் வீரபாண்டியகட்டபொம்மன். 1760 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி பிறந்த அவர், பிரிட்டிஷ் அரசின் கெடுபிடி வரிவசூலுக்கு எதிராக குரல் கொடுத்து எதிர்த்து நின்றார். அதனால் பிரிட்டிஷாரின் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார். கயத்தாறு என்னும் இடத்தில் உள்ள ஒரு புளியமரத்தில் கட்டமொம்மனை தூக்கிலிட்டனர். விடுதலை பெற்ற இந்தியா அவரை வாழ்த்தியது.

##~~##

அவருக்கு நன்றி சொல்லும் விதமாக அவர் வாழ்ந்த பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை புதிதாக கட்டியது தமிழக அரசு அந்த கோட்டையில் வைத்து வருடம் தோறும் ‘கட்டமொம்மன் நினைவு விழா’வையும் நடத்தி வருகிறது. கட்டமொம்மன் சார்ந்த சமுதாய மக்கள் அங்கிருக்கும் வீரசக்கிதேவி கோவிலில் கொடைவிழாவையும் அப்போது நடத்துவார்கள். இரண்டு நாட்கள் நடைபெறும் அந்த விழாக்களில் வாள் எடுத்து ஓடி வருவது, நினைவு ஜோதி ஓட்டம், பட்டிமன்றம்,கச்சேரி,வழக்காடுமன்றம் என பல நிகழ்ச்சிகள் இடம்பெறும். அதேபோல் அதன் அருகே கட்டமொம்மனின் தளபதியாக இருந்து வந்த வீரன்சுந்தரலிங்கனாரின் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கருப்பசாமி கோவில் கொடை விழாவை நடத்தி வருவதும் வழக்கம். இரு சமுதாய மக்களும் இணைந்து ஆண்டாண்டு காலமாக இந்த விழாக்களை நடத்தி மகிழ்ந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.

ஆனால் கடந்த ஆண்டு விழா நடந்து கொண்டிருந்த போது இரு சமுதாய மக்களிடையே சிறு சிறு உரசல்கள் ஏற்பட்டது. இதை கவனித்த போலீஸார் சிலரை ஒழுங்குபடுத்த நினைத்து உள்ளே நுழைந்தனர். அதில் போலீஸாருக்கும் அங்குள்ள மக்களுக்கும் இடையே பெரிய சலசலப்பு ஏற்பட்டது. இரண்டு சமுதாய மக்களும் ஒருவருக் கொருவர் மோதிக் கொண்டனர். ‘போலீஸாரின் அத்துமீறல்தான் அதுக்கு காரனம்’ என கட்டமொம்மன் சார்ந்த சமுதாய மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். அது குறித்து நீதி மன்றத்தில் வழக்கும் போட்டிருக்கிறார்கள். இந்தநிலையில் இந்தாண்டு வரும் சித்திரை கடைசி வெள்ளிக்கிழமையான மே10, 11 தேதிகளில் விழா நடைபெற இருக்கிறது.

வீரபாண்டியகட்டமொம்மன் நினைவு விழா: போலீஸ் கெடுபிடியால் புறக்கணிப்பு!

அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கருப்பசாமி கோவில் கொடை விழா நடத்தும் மக்களை வியாழன் இரவு முதல் வெள்ளி மாலை வரையிலும் சக்கிதேவி ஆலயத்தை வழிபடும் மக்களை வெள்ளி மாலை முதல் இரவு வரையிலும் மட்டுமே அனுமதிக்கப்படும் என போலீஸார் அறிவித்திருக்கிறார்களாம். இந்த அறிவிப்பை எதிர்க்கும் வீரசக்கிதேவி ஆலய குழுவை சேர்ந்தவர்கள் அவர்களது கொடிக்கம்பத்தில் கறுப்பு கொடி ஏற்றி கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள். மேலும் அன்றைய தினம் ஒட்டுமொத்தமாக விழாவை புறக்கணிக்க போவதாக கூறிவருகிறார்கள்.

வீரபாண்டியகட்டமொம்மன் நினைவு விழா: போலீஸ் கெடுபிடியால் புறக்கணிப்பு!

ஆலயகுழு தலைவர் முருகேசபூபதி, ‘‘எஸ்.பி ராஜேந்திரனால்தான் போன வருஷம் பிரச்னை ஏற்பட்டது. இந்த வருஷமும் அவரையே பொறுப்பாளராக போட்டிருப்பது கலெக்டரின் அலட்சியத்தை காட்டுகிறது. நாங்கள் எவ்வளவோ சொல்லியும் கலெக்டர் கேட்கலை. அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்து எங்களை அவமானப்படுத்திவிட்டனர். நாங்கள் இந்த ஆண்டு ஒட்டு மொத்த விழாவையுமே புறக்கணிக்க போகிறோம்’’ என்றார்.

வீரபாண்டியகட்டமொம்மன் நாயக்கர் பேரவை நிறுவனத்தலைவர் ராதாகிருஷ்ணன், ‘‘அதிகமாக போலீஸை குவித்து எங்களை மிரட்டுகிறார்கள். இரவுதான் அதிக நிகழ்ச்சிகள் நடத்த முடியும் ஆனால் பகலில் நடத்த சொல்கிறார்கள். இப்போ அடிக்கிற வெயிலில் எதாவது நிகழ்ச்சி நடத்த முடியுமா அந்த அளவிற்கு பந்தல்தான் போட முடியுமா? மக்களின் வருகையை குறைக்க காவல்துறையினர் சதி செய்கிறார்கள். எனவே நாங்கள் ஒட்டுமொத்தமாக விழாவை புறகணிக்க போகிறோம்’’ என்றார்.

மாவட்ட எஸ்.பி-யான ராஜேந்திரன் இது குறித்து நீண்ட நேரம் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருவதால் அவரிடம் பேசமுடியவில்லை.

-எஸ்.சரவணப்பெருமாள்
படங்கள்: ஏ.சிதம்பரம்