Published:Updated:

`9 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் உழவர் சந்தை!’ - மயிலாடுதுறை அவலம்

`9 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் உழவர் சந்தை!’ - மயிலாடுதுறை அவலம்
`9 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் உழவர் சந்தை!’ - மயிலாடுதுறை அவலம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கு எவ்வித பயன்பாடும் இன்றி, கடந்த 9 ஆண்டுகளாக உழவர் சந்தை பூட்டியே கிடக்கிறது. இதனால், காய்கறி பயிரிடும் விவசாயிகளும், பொதுமக்களும்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை இடைத்தரகர் இன்றி, நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்து பலன்பெறும் வகையில் தி.மு.க. ஆட்சியில் தமிழகமெங்கும் உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி மயிலாடுதுறை, பூம்புகார் சாலையில் பல லட்சம் ரூபாய் செலவில் உழவர் சந்தை உருவாக்கப்பட்டது. இதில், 50 கடைகள் அமைக்கப்பட்டது. சுற்றுவட்டாரப்  பகுதிகளில் காய்கறி பயிரிடும் விவசாயிகள் ஒவ்வொரு கடையையும் வாடகைக்கு எடுத்து, நகராட்சிக்கு கட்டணம்  செலுத்தி விட்டு, அதில் தாங்கள்  உற்பத்தி செய்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

நகரில் உள்ள மற்ற காய்கறி கடைகளைவிட, இங்கு விலை குறைவாகவும், செயற்கை உரம் அதிகம் பயன்படுத்தப்படாமல் பயிரிடப்படும் புத்தம் புதிய காய்கறிகளும் கிடைத்தன. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதேநேரத்தில் அதிகாலையில் வெறிச்சோடி கிடக்கும் இந்த உழவர் சந்தை வளாகத்தில் வயதானவர்கள், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் நடை பயிற்சி பெறவும் உதவியாக இருந்தது. இதெல்லாம் 2009 ஆண்டுக்கு முன்பு நடந்த சம்பவங்கள்.

தற்போது உழவர்சந்தை எப்படி இருக்கிறது என்பதை சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம் நம்மிடம் விவரித்தார். ``இந்த உழவர் சந்தையை நகராட்சியின் மார்க்கெட் கமிட்டி நிர்வாகித்து வந்தது. 5 அலுவலர்கள்  பணிபுரிந்தனர். நாளடைவில் விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கை குறைந்துவர, ஒரு கட்டத்தில்  சந்தையை ஒரேடியாக இழுத்து மூடிவிட்டனர்.பொதுமக்களை நடை பயிற்சி செய்யவும்  அனுமதிக்கவில்லை.

உழவர் சந்தை மூடிக்  கிடப்பதால், தற்போது நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் வார சந்தை என்ற பெயரில் காய்கறி விற்பனை நடைபெறுகிறது. தரமான காய்கறி வாங்க பொதுமக்கள் அலைய வேண்டியுள்ளது. எனவே, மீண்டும் உழவர் சந்தையை திறக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை வேண்டும். வாரத்தில் 2 நாள்களாவது உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் யாருக்கும் பயனின்றி கிடக்கும்  உழவர் சந்தை வளாகத்தில் மீண்டும் பொதுமக்கள் நடைபயிற்சிக்கு திறந்துவிட வேண்டும்" என்றார்.

படம் : பா.பிரசன்னா