Published:Updated:

`எங்க பேரையெல்லாம் ஏன் சேர்க்கல?’ - நாகை அருகே வி.ஏ.ஓ-வைத் தாக்கிய இளைஞர்கள்

`எங்க பேரையெல்லாம் ஏன் சேர்க்கல?’ - நாகை அருகே வி.ஏ.ஓ-வைத் தாக்கிய இளைஞர்கள்
`எங்க பேரையெல்லாம் ஏன் சேர்க்கல?’ - நாகை அருகே வி.ஏ.ஓ-வைத் தாக்கிய இளைஞர்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கஜா புயலடித்து இரண்டு மாதங்களாகியும் நிவாரண உதவிகள் இன்னும் கொடுத்து முடியவில்லை. இந்நிலையில் இன்று வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன் மேற்பார்வையில் நடந்த நிகழ்ச்சிக்கு போலீஸாரும் பாதுகாப்பாக இருந்தனர். அப்போது  வேம்பதேவன்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அங்கு வந்து, `நிவாரண உதவியில் எங்கள் குடும்பங்களின் பெயர்களை ஏன் சேர்க்கவில்லை? பாதிக்கப்பட்ட எங்களுக்கு நிவாரணம் கிடைக்காததற்கு நீங்கள்தான் காரணம்’ என்று கூறி வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென கோபாலகிருஷ்ணன் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலால் நிலைகுலைந்துபோன அவர், கீழே விழுந்தார். இதய நோயாளி கோபாலகிருஷ்ணனுக்கு, கடந்த மாதம்தான் பைபாஸ் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், கிராம நிர்வாக அலுவலரைத் தாக்கிய இளைஞர்களைத் தேடி வருகின்றனர். 

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடச் சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல், வேதாரண்யம் தாசில்தார் ஸ்ரீதர், போலீஸார் உள்ளிட்டோர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்டிருக்கிறார்.

படம்: பா.பிரசன்னா