Published:Updated:

ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசுப் பேருந்து மாயம்! - திருவள்ளூர் பரபரப்பு

ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசுப் பேருந்து மாயம்! - திருவள்ளூர் பரபரப்பு
ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசுப் பேருந்து மாயம்! - திருவள்ளூர் பரபரப்பு

உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டு, திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சொகுசுப் பேருந்து மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாகத் திருவள்ளூர் ஆர்.டி.ஓ எனப்படும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ஜெயபாஸ்கரன் திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 

சொகுசுப் பேருந்து திருடப்பட்டது தொடர்பாகத் திருவள்ளூர் ஆர். டி.ஓ ஜெயபாஸ்கரனிடம் கேட்டோம். ``கோயம்பேடு பகுதியில் திருத்தணி பிரேக் இன்ஸ்பெக்டர் அமிதா பானு கடந்த டிசம்பர் 31-ம் தேதி பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, புதுச்சேரியைச் சேர்ந்த சி.கே.வி டிராவல்ஸுக்குச் சொந்தமான சொகுசுப் பேருந்து எந்த வித ஆவணங்களும் இல்லாமல் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பஸ்ஸை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருவள்ளூர் கொண்டு வந்தனர்.

ஆர்.டி.ஓ ஆபிஸ் வளாகத்தில் பஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் ஆபீஸ் கேட்டை உடைத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸை மர்ம நபர்கள் திருடிச் செல்வதாக இரவு வாட்ச்மேன் எனக்குத் தகவல் சொன்னார். நான் திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். விசாரணை மேற்கொண்ட போலீஸார், அந்தப் பேருந்தை கோயம்பேட்டில் மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். போலீஸார் பஸ்ஸை திருவள்ளூருக்கு எடுத்து வருகின்றனர்’’ எனத் தெரிவித்தார். கோயம்பேடு தனியார் பேருந்து நிலையத்தில் அந்தப் பேருந்தை நிறுத்திச் சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள. அதேபோல், ஆர்.டி.ஓ அலுவலகத்திலிருந்து உரிய ஆவணங்கள் இன்றி இயங்கியதாகப் பறிமுதல் செய்யப்பட்ட லாரி ஒன்றும் மாயமாகியுள்ளதாகப் புகார் எழுந்திருக்கிறது.

ஆர்.டி.ஓ அலுவலகத்திலிருந்து வேறு வாகனங்கள் மாயமாகியுள்ளதா என்பது பொங்கல் விடுமுறைக்குப் பிறகுதான் தெரியவரும் என்கிறார்கள் ஆர்.டி.ஓ அலுவலக ஊழியர்கள்.