Published:Updated:

பாலியல் புகாரில் சிக்கிய பிஷப்புக்கு எதிராகப் போராடிய கன்னியாஸ்திரிகள் இடமாற்றம்!

பாலியல் புகாரில் சிக்கிய பிஷப்புக்கு எதிராகப் போராடிய கன்னியாஸ்திரிகள் இடமாற்றம்!
பாலியல் புகாரில் சிக்கிய பிஷப்புக்கு எதிராகப் போராடிய கன்னியாஸ்திரிகள் இடமாற்றம்!

கன்னியாஸ்திரியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜலந்தர் பிஷப் பிராங்கோ முளய்க்கலை கைது செய்யக்கோரி கடந்த ஆண்டு கொச்சியில் தொடர் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள் இப்போது இடம் மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் புகாரில் சிக்கிய பிஷப்புக்கு எதிராகப் போராடிய கன்னியாஸ்திரிகள் இடமாற்றம்!

சீரோ மலபார் சபையின் ஜலந்தர் பிஷப் பிராங்கோ முளய்க்கல், கேரளாவில் உள்ள கான்வென்டில் வைத்து தன்னை 2014 - 16-ம் ஆண்டு வரை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஆண்டு புகார் அளித்தார். இந்தப் புகார் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. புகாரின்பேரில் ஆரம்பத்தில் ஜலந்தர் பிஷப் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பிஷப்பை கைது செய்யக்கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னியாஸ்திரிகள் கொச்சியில் தொடர் போராட்டம் நடத்தினர். வாட்டிகனுக்கும் கன்னியாஸ்திரிகள் புகார் அனுப்பினர். இதையடுத்து, பிஷப் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் பாலியல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு பிராங்கோ முளய்க்கல் போலீஸார் முன்னிலையில் ஆஜரானார்.

பாலியல் புகாரில் சிக்கிய பிஷப்புக்கு எதிராகப் போராடிய கன்னியாஸ்திரிகள் இடமாற்றம்!

மூன்று நாள் விசாரணைக்குப் பிறகு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி பிஷப் பிராங்கோவை கோட்டயம் போலீஸார் கைது செய்தனர். காவல் துறையினர் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் உயர் நீதிமன்றம் பிஷப் பிராங்கோ முளய்க்கல் கேரள மாநிலத்துக்குள் பிரவேசிக்கக் கூடாது என்றும், ஆனால் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும். பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட வேண்டும் என்பதுபோன்ற நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கியது. இதற்கிடையில் பிஷப் பிராங்கோ முளய்க்கலுக்கு எதிராகச் சாட்சி சொன்ன முதன்மை சாட்சியான பாதிரியார் குரியகோஸ் கட்டுத்தரா என்பவர் கடந்த அக்டோபர் மாதம் ஜலந்தரில் மர்மான முறையில் அவரது அறையில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிராங்கோ முளய்க்கலுக்கு எதிராகக் கடந்த ஆண்டு கொச்சியில் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள் 4 பேர் பிற மாநிலங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதிலும் போராட்டத்தின்போது டிவி விவாதங்களில் பங்கேற்று பேசிய கன்னியாஸ்திரி அனுபமா, பஞ்சாப் மாநிலம் ஜலந்தருக்கு மாற்றம் செய்யப்படுள்ளார். ஜலந்தரில்தான் பாலியல் புகாரில் சிக்கிய பிஷப் பிராங்கோ முளய்க்கல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சிஸ்டர் அனுபமா கூறுகையில், ``சபையின் சட்டதிட்டங்களை மீறியதாக எங்களுக்கு அளித்த டிரான்ஸ்பர் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. உயிரே போகும் நிலை வந்தாலும் குருவிலங்காடு சபையில் இருந்து வெளியேறமாட்டோம். எங்களை இங்கிருந்து வெளியேற்றிவிட்டு புகார் கொடுத்த கன்னியாஸ்திரிக்கு நெருக்கடி கொடுத்து வழக்கை வாபஸ்பெற வைக்க முயல்கிறார்கள். நாங்கள் இங்கிருந்தபடியே பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்காகக் குரல் கொடுப்போம்" என்றார்.