Published:Updated:

10 பேர் குழுவாக முன்பதிவு செய்தால் பேருந்து கட்டணத்தில் 10% தள்ளுபடி!

10 பேர் குழுவாக முன்பதிவு  செய்தால் பேருந்து கட்டணத்தில் 10% தள்ளுபடி!
10 பேர் குழுவாக முன்பதிவு செய்தால் பேருந்து கட்டணத்தில் 10% தள்ளுபடி!
10 பேர் குழுவாக முன்பதிவு  செய்தால் பேருந்து கட்டணத்தில் 10% தள்ளுபடி!

சென்னை: தமிழக அரசு பேருந்துகளில் முன் பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில்,  குறைந்த பட்சம் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பயணச் சீட்டுகள் முன் பதிவு செய்யும் குழுமப் பயணிகளுக்கு பயணத் தொகையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

  இன்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, "மாநிலத்திலுள்ள போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் பேருந்துகள் சேவை எவ்வித தொய்வும் இன்றி வழங்கிட பணிமனைகள் மிகவும் அவசியம் ஆகும். பணிமனைகள் அதிக அளவில் இருப்பது பேருந்துகள் பழுதுபடுதலை குறைப்பதுடன் டீசல் செலவையும் குறைப்பதற்கு வழிவகை ஏற்படுத்தும். கடந்த இரண்டு ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் 43 பணிமனைகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

பல சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த மாமன்றத்தில் பல இடங்களில் பணிமனைகள் அமைக்க வேண்டும் என கோரியுள்ளனர். பணிமனைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில், மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஆதம்பாக்கம், குரோம்பேட்டை, பெரம்பூர், குன்றத்தூர், பெரும்பாக்கம், தையூர், கும்மிடிபூண்டி ஆகிய இடங்களிலும்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்தில் செங்கம், எலத்தூர் ஆகிய இடங்களிலும்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டத்தில் ஓமலூர், பள்ளப்பட்டி ஆகிய இடங்களிலும்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோயம்புத்தூர்

##~~##

கோட்டத்தில் சூலூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, பேரூர் ஆகிய இடங்களிலும்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்  கும்பகோணம் கோட்டத்தில் விராலிமலை, உப்பிலியாபுரம், பிராட்டியூர், கரூர், கும்பகோணம், பாளையம் ஆகிய இடங்களிலும்;

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டத்தில் காரியாப்பட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களிலும்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி கோட்டத்தில் ஆலங்குளம், சாத்தான்குளம் ஆகிய  இடங்களிலும் 25 பணிமனைகள் 22 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மலைப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு விரைவாக எளிதில் சென்று திரும்பும் வகையில் 35 கோடி ரூபாய் செலவில் 250 சிற்றுந்துகள் (மினி பஸ்) புதியதாக அறிமுகப்படுத்தப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இடைநிற்றல் இன்றி அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தினை நிறைவு செய்யும் வகையில், அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களின் பயனாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 

மேலும் தொழில் துறை மற்றும் அறிவியல் துறைகளில் அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக தொழில் துறை நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களின் எண்ணிக்கையும் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. எனவே, இதனால் ஏற்படும் கூடுதல் போக்குவரத்து தேவையினை நிறைவேற்றும் வகையிலும், அவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவையினை வழங்கிடும் வகையிலும், தற்போது சென்னை பெருநகரத்தில் மகளிர் மற்றும் சிறுவர்களுக்காக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை 134 லிருந்து 200 ஆக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன் பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில்,  குறைந்த பட்சம் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பயணச் சீட்டுகள் முன் பதிவு செய்யும் குழுமப் பயணிகளுக்கு பயணத் தொகையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இந்தச் சலுகை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் இச்சலுகை வழங்கப்பட மாட்டாது.போக்குவரத்து கழக நகர பேருந்துகளில் வழக்கமாக பயணம் செய்யும் பயணிகளுக்கு மாநகர் / நகர பேருந்துகளில் தற்போது மூன்றில் ஒரு பங்கு சலுகைக் கட்டணத்துடன் கூடிய மாதாந்திர பயணச் சீட்டு வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது.

இந்தச் சலுகை புறநகர் பேருந்துகளில் பயணம் செய்யும்  பயணிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது மட்டுமல்லாமல், பயணிகளின் வசதிக்காக புதுப்பிக்கப்படக் கூடிய கையடக்க பயண அட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தின்படி பயணிகள் பயணிக்கும் போது அதற்குரிய கட்டணம் பயண அட்டையில் உள்ள தொகையிலிருந்து கழித்துக் கொள்ளப்படும்.

போக்குவரத்துக் கழக கிளை அலுவலகம் அல்லது பேருந்து நிலைய அலுவலகம் மற்றும் நடத்துநரிடம் பணத்தினை செலுத்தி கையடக்க அட்டையினை புதுப்பித்துக் கொள்ளலாம். இத்திட்டம் முதற்கட்டமாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வாகனப் பெருக்கம் மற்றும் சரக அலுவலகத்திற்கும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அலுவலகங்களுக்கும் இடையில் உள்ள தூரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நிர்வாகத் திறனை மேம்படுத்த வேலூரை தலைமை இடமாகக் கொண்டு ஒரு புதிய துணைப் போக்குவரத்து ஆணையர் அலுவலகம்  ஏற்படுத்தப்படும்.

போக்குவரத்து வாகனத்திற்கான அனுமதிச் சீட்டு, வாகன மறு பதிவு, தடையில்லாச் சான்று, பன்னாட்டு ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை பெற பொதுமக்கள் அதிக தூரம் பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையில், சோழிங்கநல்லூர், அம்பத்தூர், வாணியம்பாடி, மயிலாடுதுறை மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள பகுதி அலுவலகங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களாக தரம் உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெருகி வரும் வாகன எண்ணிக்கை மற்றும் மக்கள் தொகை காரணமாக தற்போது இயங்கி வரும் போக்குவரத்து அலுவலகங்களில் அன்றாடப் பணிகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதன் விளைவாக, பொது மக்களுக்கு துரித சேவை செய்திட முடியாத சூழ்நிலை உள்ளது. பொதுமக்களுக்கு விரைந்து சேவை செய்யும் நோக்கில், மீனம்பாக்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள குன்றத்தூரில், கூடுதலாக ஒரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும், சேலம், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில், கூடுதலாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொது மக்கள், ஓட்டுநர் உரிமம், நடத்துநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு போன்ற பல்வேறு சேவைகளை உடனுக்குடன் பெறும் வகையில், திருவள்ளூர் மாவட்டம்  கும்மிடிப்பூண்டி, கடலூர் மாவட்டம் பண்ருட்டி, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, வேலூர் மாவட்டம் ஆம்பூர், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், திருவாரூர் மாவட்டம்  திருத்துறைப்பூண்டி, திருச்சி மாவட்டம் லால்குடி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை ஆகிய இடங்களில், புதிய பகுதி அலுவலகங்கள் தொடங்கப்படும். சாலைப் பாதுகாப்பில் வாகன ஓட்டுநரின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதைக் கருத்தில் கொண்டும், சாலை விபத்துகளை தவிர்க்கும் வண்ணமும், மொத்தமுள்ள 42 போக்குவரத்து ஓட்டுநர் தேர்வு தளங்களில், முதற்கட்டமாக 14 ஓட்டுநர் தேர்வு தளங்கள் இந்த ஆண்டு 10 கோடி ரூபாய் செலவில் கணினிமயம் ஆக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளங்களாக மாற்றி அமைக்கப்படும். கணினிமயம் ஆக்கப்பட்ட தேர்வுத் தளங்கள் மூலம் ஓட்டுநர் உரிமத் தேர்வு நடத்தப்படும் போது, தேர்வு முடிவுகள் அனைத்தும் கணினி வரைபடம் மூலம் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு, திறமையின் அடிப்படையில் ஓட்டுநர் உரிமம் வழங்க இயலும்.    

எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள்  போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் வசதியையும், போக்குவரத்து உரிமங்களை பெறும் பொதுமக்களின் வசதியையும், மேம்படுத்துவதோடு, சாலை விபத்துக்களை குறைக்கவும் வழி வகுக்கும்" என்றார்.