Published:Updated:

ராஜமரியாதை, கிடா விருந்து! - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்!

எம்.குமரேசன்

போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி பிடிபட்டது எப்படி?

ராஜமரியாதை, கிடா விருந்து! -  மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்!
ராஜமரியாதை, கிடா விருந்து! - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்!

ஐ.ஏ.எஸ் தேர்வானதாகக் கூறி இளைஞர் ஒருவர் சாதாரண காவல்துறை அதிகாரி முதல் தமிழக காவல்துறையின் உயர் அதிகாரி வரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ள விஷயம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மதுரை மாநகரக் கமிஷனர் டேவிட்சன் தேவஆசிர்வாதத்திடம் அந்த இளைஞர் நேற்று பிடிபட்டார். 

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே சின்னக்கலந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 22). ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகனான இவர், ஐ.ஏ.எஸ் தேர்வில் 74 வது இடத்தைப் பிடித்து தேர்வானதாகக் கூறினார். ஊடகங்களும் செய்தியாக்கின. சாதாரண ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் படைத்த சாதனையால் திருவண்ணாமலை சுற்று வட்டார மக்கள் பூரிப்படைந்தனர். இதனால், யுவராஜுக்கு சென்ற இடமெல்லாம் மிகுந்த மரியாதை கிடைத்தது. 

பள்ளி கல்லூரிகளுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். மாணவர்களிடத்தில், `ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவது எப்படி’ என்றெல்லாம் உரை நிகழ்த்தினார். உரை நிகழ்த்த ரூ.20,000 வரை கட்டணமும் பெற்றார். யுராஜுக்குத் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் பாலகிருஷ்ணன் என்பவரின் நட்பு கிடைத்தது. இவருக்கு மதுரை அருகேயுள்ள  திருமங்கலம் சொந்த ஊர். பொங்கல் பண்டிகையையொட்டி, திருமங்கலத்தில் யுவராஜ்க்கு கிடா விருந்துக்கு பாலகிருஷ்ணன் ஏற்பாடு செய்தார். விழாவைச் சிறப்பித்து வைக்கப் போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியும் சென்றார். விருந்துக்கு வந்த சில காவல்துறை அதிகாரிகள் மதுரை கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்தை சந்தித்து வாழ்த்து பெறுமாறு யுவராஜிடம் கூறினார். 

ஏற்கெனவே, பல காவல்துறை உயர் அதிகாரிகளை ஏமாற்றிய அனுபவம் இருந்த யுவராஜ், எந்தவித தயக்கமும் இல்லாமல் டேவிட்சன் தேவாசீர்வாதத்தை சந்திக்க நேற்று சென்றார். உடனடியாகக் கமிஷனர் அறைக்குள் செல்லவும் அனுமதி கிடைத்தது. ஆனால், யுவராஜின் நடவடிக்கைகள் கமிஷனருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, `ஐ.ஏ.எஸ் எந்த ஆண்டு தேர்வானீர்கள்; தேர்வாணையமான யு.பி.எஸ்.சி குறித்தும் சில கேள்விகளை கமிஷனர் இவரிடத்தில் கேட்டுள்ளார். யுவராஜ் கூறிய ஆண்டில் தேர்வான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பட்டியலைக் கமிஷனர் ஆய்வு செய்தபோது, அதில் இவரின் பெயர் இல்லை. தொடர்ந்து, கமிஷனரின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் திணறிய யுவராஜ் ,தான் ஐ.ஏ.எஸ் தேர்வானதாகப் பொய் சொன்னதாக உண்மையை ஒப்புக்கொண்டார். போலீஸார் அவரைக் கைது செய்தனர். 

ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி தோல்வி அடைந்த யுவராஜ், போலியான ஆவணங்களைத் தயார் செய்து, தனது பெற்றோரையும் ஊரையும் ஏமாற்றியதும் தெரிய வந்தது. ஊரையே புலனாய்வு செய்யும் போலீஸ் அதிகாரிகள் யுவராஜிடம் ஏமாந்ததுதான் புரியாத புதிராக உள்ளது.