Published:Updated:

நச்சுவாயு பரவியதற்கு ஸ்டெர்லைட் ஆலை காரணமல்ல: நிர்வாக அதிகாரி சொல்கிறார்

நச்சுவாயு பரவியதற்கு ஸ்டெர்லைட் ஆலை காரணமல்ல: நிர்வாக அதிகாரி சொல்கிறார்
நச்சுவாயு பரவியதற்கு ஸ்டெர்லைட் ஆலை காரணமல்ல: நிர்வாக அதிகாரி சொல்கிறார்
நச்சுவாயு பரவியதற்கு ஸ்டெர்லைட் ஆலை காரணமல்ல: நிர்வாக அதிகாரி சொல்கிறார்

சென்னை: தூத்துக்குடியில் நச்சுவாயு பரவிய சம்பவத்திற்கு ஸ்டெர்லைட் ஆலை மீது பழிபோடுகிறார்கள் என்று தெரிவித்துள்ள ஆலை தலைமைச்செயல் அதிகாரி ராம்நாத், தூத்துக்குடியில் எங்கள் ஆலை மட்டுமல்ல ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. ஏன் மற்ற தொழிற்சாலைகளில் இருந்து அது வெளியேறி இருக்கக்கூடாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டெர்லைட் ஆலை தலைமைச்செயல் அதிகாரி பி.ராம்நாத், இந்தியாவின் மொத்த தாமிர உற்பத்தியில் 50 சதவீதம் ஸ்டெர்லைட் ஆலையில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது ஆலை மூடப்பட்டு கிடப்பதால் தாமிர வர்த்தகம் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது 6,800 அமெரிக்க டாலராக இருந்த ஒரு டன் தாமிரத்தின் விலை இப்போது 7,400 டாலராக அதிகரித்துள்ளது.

மின்உற்பத்தி பணியில் தாமிரத்திற்கு பெரும் பங்கு உண்டு. இந்த ஆலையின் மூலம் தமிழக அரசுக்கு ரூ.1,800 கோடி அளவுக்கு வரி வருவாய் கிடைத்து வருகிறது. தொழிலாளர்கள், பணியாளர்கள், அதிகாரிகள் என ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் ஸ்டெர்லைட் ஆலையில் வேலைபார்க்கிறார்கள். இவர்கள் தவிர 16 ஆயிரம் பேர் மறைமுக வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

கடந்த மார்ச் 23ஆம் தேதி தூத்துக்குடியில் நச்சுவாயு பரவிய சம்பவத்திற்கு எங்கள் ஆலை மீது பழிபோடுகிறார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மட்டுமல்ல ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. ஏன் மற்ற தொழிற்சாலைகளில் இருந்து அது வெளியேறி இருக்கக்கூடாதா? மூச்சுத்திணறல், கண் எரிச்சல், சுவாசப்பிரச்னை உள்ளிட்ட சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்படும் பகுதி ஆலையில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஆனால், 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆலை ஊழியர் குடியிருப்பில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

##~~##
ஒரு சில தொண்டு நிறுவனங்களும், சில அரசியல் கட்சியினரும் எதற்கெடுத்தாலும் ஸ்டெர்லைட் ஆலை மீது பழி சுமத்துகிறார்கள். சுற்றுச் சூழல் பாதுகாப்பு விதிமுறைகள் சரியாக இருப்பதாக கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சான்று வழங்கி இருக்கிறது. 6 மாதத்திற்கு ஒருமுறை தூத்துக்குடி சுற்றுப்பகுதியில் பொதுமக்களின் சுகாதாரத்தை கண்காணித்து வருகிறோம்.
சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்து நிபந்தனைகளையும் முறையாக பின்பற்றி வருகிறோம். அண்மையில் உச்ச நீதிமன்றம் அமைத்த ஐ.ஐ.டி. பேராசியர்கள் அடங்கிய நிபுணர் குழுவும் ஸ்டெர்லைட் ஆலையில் நேரடி ஆய்வு நடத்தி அனைத்தும் சரியாக உள்ளதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது என்று ராம்நாத் கூறினார்.