Published:Updated:

`மனநிலைதான் பாதிக்கப்பட்டு விட்டது!’ - படேல் சிலையை சுற்றும் புதிய சர்ச்சை

`மனநிலைதான் பாதிக்கப்பட்டு விட்டது!’ - படேல் சிலையை சுற்றும் புதிய சர்ச்சை
`மனநிலைதான் பாதிக்கப்பட்டு விட்டது!’ - படேல் சிலையை சுற்றும் புதிய சர்ச்சை

நர்மதை நதிக்கரையில், சர்தார் சரோவர் அணையின் அருகே 3,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 182 மீட்டர் உயரமுள்ள படேல் சிலை நிறுவப்பட்டுள்ளது. வல்லபபாய் படேலின் 143-வது பிறந்த தினமான அக்டோபர் 31,  2018 அன்று சிலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.

`நாட்டு மக்கள் வறுமையில் இருக்கும்போது, ரூ.3,000 கோடி செலவில் இந்தச் சிலை தேவையா?' என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. சிலை திறக்கப்பட்டு சில மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் படேல் சிலை தொடர்பான சர்ச்சை நீடித்து வருகிறது. 

இதற்கிடையில் தற்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது படேல் சிலை. நர்மதை நதியில் நூற்றுக்கணக்கான முதலைகள் உள்ளன. தற்போது படேல் சிலை திறக்கப்பட்ட பிறகு, அங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவதால் பணிகளால் முதலைகளுக்கும், முதலைகளால் பயணிகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது எனக் கருதி அங்குள்ள 300-க்கும் அதிகமாக முதலைகளைக் குஜராத்தின் மேற்கு பகுதிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என அம்மாநில அரசு வனத்துறை அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

படேல் சிலையைச் சுற்றியுள்ள நதியில் எத்தனை முதலைகள் உள்ளன என்பது தெரியாமல் முதலைகளை வெளியேற்றும் பணிகளில் இறங்கிவிட்டனர் அதிகாரிகள். பாதுகாப்புக் கூண்டு மூலம் இதுவரை 15 முதலைகள் தரை வழியாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய உள்ளூர் வனத்துறை அதிகாரி அனுராதா சாஹு, “படேல் சிலையைக் காணவரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு நலன் கருதி சிலையைச் சுற்றியுள்ள முதலைகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றன. சிலை அமைந்துள்ள பகுதி முதலைகள் வாழ ஏதுவாக உள்ளது. இங்கிருந்து அவற்றை அகற்றினால் அவற்றின் வாழ்வியலுக்கு எதிராக அமையலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆசிய வன சரணாலய இதழின் ஆசிரியர் ப்ரியாவ்ரத் காதிவி ‘ நமக்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது’ என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.