Published:Updated:

`ஜிகா வைரஸ்; வெறிநாய்க்கடி’ - மிரள வைத்த அரசின் அறிக்கைகள்!

`ஜிகா வைரஸ்; வெறிநாய்க்கடி’ - மிரள வைத்த அரசின் அறிக்கைகள்!
`ஜிகா வைரஸ்; வெறிநாய்க்கடி’ - மிரள வைத்த அரசின் அறிக்கைகள்!

சரியான புள்ளி விவரங்கள் இருந்தால் மட்டுமே ஒரு சுகாதார பிரச்னையை சரியாகப் புரிந்துகொண்டு உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஏதுவாக இருக்கும். சமீபத்திய மத்திய, மாநில அரசின் போக்கு மக்கள் விரோத அலட்சிய தன்மையை வெளிக்காட்டுவதாக உள்ளது. இதன் மூலம் அரசை எப்படி நம்ப முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. ஜிகா வைரஸ் தொடர்பாக மத்திய அரசு தெரிவித்த கருத்துக்கும் தேசிய வைரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. இதே நிலைமைதான் மாநில அரசின், வெறிநாய்க்கடி புள்ளி விவரத்திலும் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து மருத்துவர் புகழேந்தியிடம் பேசினோம். 

அதில், ``2018-ம் ஆண்டு பிற்பகுதியில் ராஜஸ்தானில் 159 பேர் ஜிகா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படபோது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) ஆய்வை மேற்கோள்காட்டி மத்திய அரசு சுகாதாரத்துறை பாதிப்பை ஏற்படுத்திய அந்த வைரஸ் பிரேசில் வகை வைரஸை சார்ந்தது என அறிவித்தது. ஆனால், தற்போது Infection, Genetics and Evolution பத்திரிகையில் தேசிய வைரஸ் நிறுவனம் (NIV) மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் ராஜஸ்தானில் பாதிப்பை ஏற்படுத்திய ஜிகா வைரஸ் மூளை பாதிப்பை ஏற்படுத்தாது எனத் தெரிவித்திருந்தது தவறு என அம்பலம் ஆகியுள்ளது. அது பிரேசில் வகை வைரஸ் என்பது பொய்யாகி உள்ளது. ஏனெனில் தற்போதைய ஆய்வு அந்த வைரஸ் இந்தியாவில் 50 வருடத்துக்கும் மேலாக இருந்திருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளது.

மேலும், இந்த வைரஸ் மூலக்கூறில் S 139 N-ல் மாறுதல் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 2017-ல் SCIENCE பத்திரிகையில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரையில் அந்த மாற்றம் மூளை பாதிப்பை  ஏற்படுத்தும் என்ற செய்தி உள்ளது. முக்கிய விஷயம் என்னவெனில், இந்த மாற்றம் நிகழவில்லை எனச் சுகாதாரத்துறை அமைச்சகம்  பொய்யான தகவலை வெளியிட்டது. இதுகுறித்து தேசிய வைரஸ் நிறுவனம் இயக்குநர் மெளரியாவிடம், ``ஏன் இந்த முரண்பாடு எனக் கேட்டதற்கு எந்தப் பதிலும் இல்லை. இதேபோன்றுதான் மாநில அரசும் வெறிநாய்க்கடி குறித்து பொய்யான தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தின் மருத்துவக் கல்வித்துறை இயக்குநரகம் 2018 ஜனவரி முதல் நவம்பர் வரையுள்ள இடைப்பட்ட காலத்தில் 51 பேர் வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனப் பதிவு செய்தும், அதில் 8 பேர் மட்டுமே இறந்ததாகக் கூறியுள்ளது. ஆனால், இது குறித்து கருத்து தெரிவித்த நோய்த் தொற்று நிபுணர் ராமசுப்பிரமணியன்,  ``இது சாத்தியம் இல்லை என்றும், இந்தியாவில் நோய் முற்றிய நிலையில் யாரும் காப்பாற்றப்படாமல்போய் இறந்துள்ளனர்’’ என்பதே புள்ளி விவரமாக உள்ளது என்று கூறியுள்ளார். 43 பேர் ஏன் இறக்கவில்லை என்பதற்கான விளக்கம் மற்றும் தகவல் இல்லை. தமிழகத்தின் பொது சுகாதாரத்துறை நிறுவனம் 2018-ல் மாதம் ஒன்றுக்கு 2பேர் வெறிநாய்க்கடி நோயால் இறந்துள்ளனர் என்றும், 2018-ல் மொத்தம் 31 இறப்புகள் நிகழ்ந்துள்ளன என்றும், இது 2017-ம் ஆண்டு ஏற்பட்ட மரணத்தைக் காட்டிலும் அதிகம் எனச் செய்தி வெளியிட்டுள்ளது. 

மருத்துவக் கல்வித்துறை இயக்குநரகம் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நிகழ்ந்த 9 வெறிநாய்க்கடி இறப்புகளைப் பதிவு செய்யவில்லை. அதை ஏன் பதிவு செய்யவில்லை எனவும் கூறவில்லை.

சென்னை மாநகராட்சி நிர்வாகமே அந்த 9 நபர்களுக்கு இறப்புச் சான்று வழங்கியுள்ளது. அதில் இறப்புக்குக் காரணமாக வெறிநாய்க்கடி எனப் பதிவு செய்யாமல் போகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. மருத்துவக் கல்வித்துறை இயக்குநரகத்தின் பதிவுகள் பாதிக்கப்பட்ட 43 பேர்களுக்கு என்ன நேர்ந்தது எனக் கூறாமல் மௌனம் காப்பது சரியா. மேற்கூறப்பட்ட உதாரணங்களில் இருந்து, அரசு வெளியிடும் சுகாதாரத்துறை அறிக்கைகளை எப்படி நம்ப முடியும்? எனும் கேள்வி எழுவதால் இதை விளக்க மக்கள் நலனில் அக்கறை கொண்டு அரசு முன்வருமா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.