Published:Updated:

இரண்டு நாள்களில் 15 லட்சம்! - நாமக்கல்லில் இறந்த அர்ச்சகர் பெயரில் நிதி திரட்டி மோசடி?

இரண்டு நாள்களில் 15 லட்சம்! - நாமக்கல்லில் இறந்த அர்ச்சகர் பெயரில் நிதி திரட்டி மோசடி?
இரண்டு நாள்களில் 15 லட்சம்! - நாமக்கல்லில் இறந்த அர்ச்சகர் பெயரில் நிதி திரட்டி மோசடி?

நாமக்கல்லில் 18 அடி உயர ஆஞ்சநேயருக்குப் பூஜை செய்தபோது தவறி விழுந்து வெங்கடேஷ் என்ற அர்ச்சகர் மரணமடைந்தார். கோயில் வரலாற்றில் நடந்த இந்த துயர சம்பவம் நாமக்கல் மக்களை வேதனைப்படுத்திய நிலையில், மரணமடைந்த அர்ச்சகர் பெயரில் ஃபேஸ்புக்கில் போலியாக வேண்டுகோள் விடுத்து ரூ.15 லட்சம் திரட்டியிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 4 மாதங்களாக வெங்கடேஷுக்கு ஏதோ காரணத்தால் சம்பளம் வழங்கப்படாமல் இருந்துள்ளது. வெங்கேடேஷ் இறந்ததும் அவரின் சகோதரர் நாகராஜ் கோயில் நிர்வாகத்தை அணுகி நிலுவை சம்பளத்தைக் கேட்டுள்ளார். உறவினர்கள் வங்கிக்கணக்கு ஏதாவது தாருங்கள், அதில் பணம் செலுத்துவதாகக் கோயில் தரப்பில் கூறப்பட்டுள்ளது. நாகராஜ் தன் ஒன்றுவிட்ட சகோதரர் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் கரூர் வைஸ்யா நாமக்கல் கிளை வங்கிக்கணக்கைக் கொடுத்துள்ளார். 

இதற்கிடையே, வெங்கடேஷ் உடலை அடக்கம் செய்யகூடப் பணம் இல்லாமல் குடும்பத்தினர் தவிப்பதாக யாரோ ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு கிருஷ்ணமூர்த்தின் வங்கிக் கணக்குடன் நாகராஜ் செல்போன் எண்ணையும் வெளியிட்டுள்ளார். உடனடியாக உலகம் முழுக்க இருந்து பணம் குவிந்தது. சுமார் 200 பேர் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 15 லட்ச ரூபாய் கிருஷ்ணமூர்த்தியின் வங்கிக்கணக்கில் சேர்ந்துள்ளதாகக் கரூர் வைஸ்யா வங்கியின் அதிகாரி உறுதி செய்துள்ளார். 

கோயிலில் வெங்கடேஷுடன் பணியாற்றியவர்கள் இதுபோன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கிருஷ்ணமூர்த்தி ஒரு வேளை இந்தக் காரியத்தை செய்திருக்கலாம் என்று குடும்ப உறுப்பினர்கள் அவரைக் கேள்விக்கணைகளால் துளைத்தனர். இதனால், கிருஷ்ணமூர்த்திக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து வெங்கடேஷின் சகோதரர் நாகராஜ் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், ``ஃபேஸ்புக் பதிவில் எனது டெலிபோன் எண்ணையும் பதிவிட்டுள்ளனர். உலகம் முழுக்க இருந்து அழைப்பு வந்துகொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் கைப்பேசியை அணைத்து வைத்து விட்டேன். என் சகோதரர் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்ய எங்களிடம் போதிய வசதி இருக்கிறது. எங்களுக்குப் பணம் அனுப்பியவர்களுக்குப் பணத்தை திரும்பச் செலுத்த வங்கியின் உதவியை நாடியுள்ளோம். வங்கியில் கிருஷ்ணமூர்த்தியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இது குறித்து சைபர் கிரைம் பிரிவில் புகார் செலுத்த முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.