Published:Updated:

"குற்றவாளியைக் காப்பாற்ற போலீஸார் நினைக்கின்றனர்!" - சேலம் சிறுமி வழக்கில் பெற்றோர் வேதனை

"குற்றவாளியைக் காப்பாற்ற போலீஸார் நினைக்கின்றனர்!" - சேலம் சிறுமி வழக்கில் பெற்றோர் வேதனை
"குற்றவாளியைக் காப்பாற்ற போலீஸார் நினைக்கின்றனர்!" - சேலம் சிறுமி வழக்கில் பெற்றோர் வேதனை

சேலம் மாவட்டத்தில் எட்டாம் வகுப்புச் சிறுமி ஒருவரை, வீட்டுக்குள் புகுந்து வெட்டியதுடன், அந்த உடலை வெளியில் இழுத்துவந்து சாலையில் போட்டுவிட்டுப் போன சம்பவம், கடந்த ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இத்தனை மாதங்கள் கடந்தும் சேலம் சிறுமியின் கொலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குமுறுகின்றனர். அவரது உறவினர்கள்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் தளவாய்ப்பட்டி அடுத்த சுந்தரபுரத்தைச் சேர்ந்தவர்கள் சாமிவேல், சின்னப்பொண்ணு. இவர்களுக்கு அருள்ஜோதி, சற்குருநாதன், ராஜலட்சுமி என இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்கள். கடைசி மகள் ராஜலட்சுமி. இவர்தான் கொடூரமாகக் கொல்லப்பட்டவர். ராஜலட்சுமி கொல்லப்பட்டது குறித்து அக்கிராமத்தினர், ``ரணங்கள் ஏற்படுத்திய ராஜலட்சுமியின் மரணத்தை அவ்வளவு எளிதாகக் கடந்து போய்விட முடியாது. 8-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ராஜலட்சுமி, கடந்த அக்டோபர் மாதம் 22-ம் தேதி பொழுதுசாய்ந்தவேளையில் தன் வயதான தாயோடு வீட்டுக்குள் அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு அரிவாளோடு புகுந்த  தினேஷ்குமார், ராஜலட்சுமியின் கழுத்தை வெட்டி தலைமுடியைப் பிடித்து தரதரவென வாசலுக்கு இழுத்துவந்தார். பின்னர், அவருடைய தாயின் கண் எதிரே... ஆடு அறுப்பதைப்போல அறுத்து கழுத்தைத் தனியாக எடுத்துப்போய் ரோட்டில் வீசிவிட்டுச் சென்றார். இந்தச் சம்பவத்தை இன்று நினைத்தாலும் குலைநடுங்கச் செய்கிறது'' என்றனர்.

பட்டியலினத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி குடும்பத்தினர், அவர்களின் வீட்டுக்கு அருகே வசித்த தினேஷ்குமார் என்கிற கார்த்திக் மற்றும் அவரது உறவினருடன் நட்புடன் பழகிவந்தனர். இந்த நிலையில்தான் தினேஷ்குமார், ராஜலட்சுமியைக் கொலை செய்திருக்கிறார். இக்கொடூரச் சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில், சுந்தரபுரம் கரட்டு அடிவாரத்தில் வசிக்கும்  ராஜலட்சுமியின் வீட்டுக்குச் சென்றிருந்தோம். மூன்று மாதத்துக்கு முன்பு பார்த்த அதே வீடு. பெரிய மாற்றம் எதுவும் இல்லை. வீட்டுக்கு வெளியே போர்வை போர்த்தி தனிமையில் அமர்ந்திருந்த ராஜலட்சுமியின் தாய் சின்னப்பொண்ணு கைகள் நடுங்க... கண்கள் கலங்க... ``நீங்க யாரு சாமீ, எதுக்கு வந்திருக்கீங்க..." என்று கேட்டபோது, இன்னும் அந்த அச்சத்திலிருந்து மீளவில்லை என்பதை நம்மால் உணர முடிந்தது.

அவரை ஆசுவாசப்படுத்தி விவரத்தை சொன்ன பிறகு, போர்வையால் கண்களைத் துடைத்துக்கொண்டு, ``ராஜலட்சுமி சாயந்தரம் ஸ்கூல்விட்டு வந்ததும் அவளும், நானும் இந்த வீட்டுக்குள்ளதான் உட்காந்து இருப்போம். ஒரு பாவமும் அறியாத என் குழந்தையைக் கொன்னுட்டுப் போயிட்டாங்க. இப்ப, தனியா நினைத்து நினைத்துத் தவிக்கிறேன். மூணு மாசம் ஆகியும் வழக்கு என்ன, ஏதுனு தெரியல... சட்டமும், நீதியும் அவுங்க பக்கம் இருக்கு. படிக்காத ஏழைங்க நாங்க. என்ன பண்ண முடியும்'' என்று பேசகூடத் தெம்பில்லாமல் அழ ஆரம்பித்தவர், தன் முந்தானையில் முடித்து வைத்திருந்த அவரது வீட்டுக்காரரின் நம்பரைக் கொடுத்தார்.

அதையடுத்து அவருடைய கணவர் சாமிவேலுக்குத் தொடர்புகொண்டதும் வேலையைப் பாதியிலேயே விட்டுவிட்டு வந்தவர், ``என் மகள் கொலை செய்யப்பட்டு ஒன்றரை மாதம் கழித்து, என் மனைவி சின்னப்பொண்ணு, என் அக்கா மகன் தாதன், அண்ணன் ராஜாராம், தம்பி லட்சுமணன் ஆகியோரிடம் ஆத்தூர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் வாங்கினாங்க. ஆனா, இந்தக் கொலையை என் மனைவி சின்னப்பொண்ணு, என் தம்பி லட்சுமணன், அவனது மனைவி பழனியம்மாள் ஆகியோர் நேரில் பார்த்தவர்கள். இதை ஆத்தூர் டி.எஸ்.பி-யிடம் சொல்லியும், வழக்கில் லட்சுமணனையும், பழனியம்மாளையும் சேர்க்கவில்லை. நான் வாக்குவாதம் செய்து போராடியபிறகு லட்சுமணனை மட்டும் சேர்த்தார். பழனியம்மாளைச் சேர்க்கவில்லை. கொலை நடந்து மூன்று மாதங்கள் கடந்தும் இன்னும் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

இந்தக் கொலைக்குப் பின்புலமாக இருந்த தினேஷ்குமாரின் மனைவி சாரதாவையும், அவனது தம்பி சசிகுமாரையும் வழக்கில் சேர்க்க வேண்டுமென நாங்களும், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், எவிடென்ஸ் கதிர் உட்பட பலர் போராடியும் அவர்களின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. டி.எஸ்.பி-யிடம் கேட்டால், `அவனைக் காப்பாற்ற நினைத்திருந்தால், மறைத்து வைத்திருப்பார்கள். நேராக எதற்காகக் காவல் நிலையம் கொண்டுவர வேண்டும். உன் மகளை உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குக் கூட்டி வந்தபோது `அடையாளம் தெரியாதவர்கள் வெட்டிட்டுப் போயிட்டாங்க'னு சொல்லி இருந்தால் என்ன செய்ய முடியும்' என்று மனசாட்சியே இல்லாமல் பேசுகிறார்.

அன்றிலிருந்து டி.எஸ்.பி-யிடம் பேசுவதில்லை. வழக்கு பற்றி யாரும் எதுவும் சொல்வதும் இல்லை. வீட்டில் அடிக்கும் என் குழந்தையின் ரத்த வாடை, அதிகாரிகளின் வீடுகளில் என்றைக்கு வீசுதோ... அன்றுதான் எங்கள மாதிரி ஏழைகளுக்கு நீதி கிடைக்கும். கொலை செய்தவனை காவல் நிலையத்துக்குக் கூட்டிப் போனார்கள் என்பதற்காக அவர்களைக் காப்பாற்ற காவல் துறையினர் நினைக்கிறார்கள்'' என்றார்.  

வழக்கை முன்னெடுத்துச் செல்லும் எவிடென்ஸ் அமைப்பின் நிர்வாகியான கதிர், ``பட்டியலின மக்களின் படுகொலைகளுக்கு அரசும், காவல் துறையும் அக்கறை காட்டுவதில்லை என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். அதேபோல், இந்த வழக்கும் விதிவிலக்கு அல்ல. ராஜலட்சுமி படுகொலை செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கடந்தும், இன்னும் நீதிமன்றத்தில் ஷார்சீட் ஃபைல் செய்தார்களா, இல்லையா என்றுகூடத் தெரியவில்லை. நாங்கள் தினேஷ்குமாரின் மனைவியையும், தம்பியையும் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும் எனப் பல முறை சொல்லியும் காவல் துறை அதைக் கண்டுகொள்ளவே இல்லை.

ராஜலட்சுமி சிறுமி என்பதால் போக்ஸோ சட்டமும், பட்டியலினச் சிறுமி என்பதால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் போட்டிருப்பதால், இது மகிளா நீதிமன்றத்தில் வருமா அல்லது தாழ்த்தப்பட்டவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருமா என்பது குழப்பமாக இருக்கிறது. பட்டியலினப் படுகொலைகளைப் பொறுத்தவரை கீழ்நீதிமன்றத்தில் தண்டனை பெற்றாலும் அரசின் அலட்சியத்தால் மேல்முறையீட்டில் விடுதலை கிடைத்துவிடுகிறது. அதனால், பட்டியலின மக்களைப் பாதுகாக்கக் கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும்'' என்றார்.

இதுபற்றி ஆத்தூர் டி.எஸ்.பி. பொன்.கார்த்திக்குமார், ``நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நம்பராகிவிட்டது. இனி, விசாரணைக்கு வரும். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், மேற்கொண்டு எதுவும் பேச முடியாது'' என்றார்.