Published:Updated:

ஹைதர் அலி, திப்பு சுல்தானுக்கு மணி மண்டபம்!

ஹைதர் அலி, திப்பு சுல்தானுக்கு மணி மண்டபம்!
ஹைதர் அலி, திப்பு சுல்தானுக்கு மணி மண்டபம்!
ஹைதர் அலி, திப்பு சுல்தானுக்கு மணி மண்டபம்!

சென்னை: ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி வீரமரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நினைவாக திண்டுக்கல் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று படித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், சுயமரியாதைச் சுடரொளி ஜீவரத்தினம், தியாகி சங்கரலிங்கனார், வீரபாண்டிய கட்டபொம்மன், மனு நீதிச் சோழன் ஆகியோருக்கு மணி மண்டபங்களை அமைக்கவும், தீரன் சின்னமலை, வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்கள் அமைக்கவும், தியாகி சிதம்பரநாதன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி ஆகியோருக்கு திருவுருவச் சிலைகள் எழுப்பவும் ஆணையிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

வீரமங்கை வேலு நாச்சியாரின் படைத் தளபதியாய் விளங்கி தன் உயிரை மாய்த்துக் கொண்ட வீரத் தாய் குயிலியின் நினைவைப் போற்றும் வகையில், வீரமங்கை வேலுநாச்சியாருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு வரும் வளாகத்தில் வீரத்தாய் குயிலிக்கும் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.

இதே போன்று, ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன்னுயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நினைவாக திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்.

ஏழை மக்கள் உயர்வு பெற தன் வாழ்வை அர்ப்பணித்தவரும், மக்களின் அறியாமையைப் போக்க கல்வி நிறுவனம் தொடங்கியவரும், காந்தி அடிகளை அழைத்து வந்து அறநெறி பரப்பியவரும், சட்டமன்ற மேலவை மற்றும் பேரவை உறுப்பினராக பணியாற்றியவரும் ஆன சுவாமி சகஜானந்தாவுக்கு, அவர் வாழ்ந்த இடமான சிதம்பரத்தில் அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும்.

##~~##
இதே போன்று, எனது ஆட்சிக் காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2000ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தினை சிறப்பான முறையில் புதுப்பித்து, புனரமைத்திட வேண்டும் என்று கோரிக்கையை ஏற்று சென்னை, மந்தைவெளி, பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ள சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களது மணிமண்டபம் புதுப்பித்து புனரமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.