Published:Updated:

`மறைமுகமாகக் கருத்து சொல்கிறோம்’- ஹெல்மெட்டுடன் பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்த பத்திரிகையாளர்கள்

`மறைமுகமாகக் கருத்து சொல்கிறோம்’- ஹெல்மெட்டுடன் பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்த பத்திரிகையாளர்கள்
`மறைமுகமாகக் கருத்து சொல்கிறோம்’- ஹெல்மெட்டுடன் பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்த பத்திரிகையாளர்கள்

கையில் மைக், தோள்களில் கேமரா, தலையில் ஹெல்மெட்டுடன் பா.ஜ.க தலைவர்களைப் பேட்டியெடுத்துள்ளனர் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பத்திரிகையாளர்கள். 

PC : Twitter/@DeepuPatidarINC

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் பா.ஜ.க சார்பில் நேற்று கூட்டம் நடத்தப்பட்டது. அதில் உள்ளூர் பா.ஜ.க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் தங்கள் தலையில் ஹெல்மெட் அணிந்துகொண்டு பா.ஜ.க தலைவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அந்த மாநிலத்தில் உள்ள எந்த பா.ஜ.க தலைவரைச் சந்தித்தாலும் தலையில் ஹெல்மெட்டுடனே பேட்டியெடுத்து வருகின்றனர். பத்திரிகையாளர்களின் இந்தச் செயல் அங்கிருந்தவர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

பிறகு இது பற்றி விளக்கிய பத்திரிகையாளர்கள், ``கடந்த வாரம் கேமராமேன் ஒருவரை பா.ஜ.க தலைவர் சரமாரியாக தாக்கிவிட்டார். அதே போன்ற தவறு மீண்டும் நடைபெறக்கூடாது என்பதற்காகவும் தங்கள் செயல்களின் மூலம் மத்திய பா.ஜ.க அரசுக்கு மறைமுகமாகக் கருத்து செல்வதற்காகவும் இவ்வாறு செய்தோம்’ எனத் தெரிவித்துள்ளனர். 

PC : Twitter/@thealokputul

இதே சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை பா.ஜ.க மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் நடந்தவற்றை பாண்டே என்ற கேமராமேன் ரெக்கார்டு செய்துகொண்டு நின்றுள்ளார். அப்போது ஏற்பட்ட சர்ச்சையில் கேமராமேனை தாக்கியுள்ளார் மாவட்ட பா.ஜ.க தலைவர். இந்தத் தாக்குதலில் பத்திரிகையாளருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பெயரில் அந்த பா.ஜ.க நிர்வாகி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது பற்றி பாண்டே கூறும்போது, ``கடந்த வாரம் நடந்த கூட்டத்தை நான் என் போனில் பதிவுசெய்துகொண்டிருந்தேன். அப்போது பா.ஜ.க நிர்வாகிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மோதலையும் நாங்கள் பதிவுசெய்தோம். பிறகு எங்களிடம் வந்த அவர், வீடியோவை முழுவதுமாக நீக்கக் கூறினார். நாங்கள் மறுத்தோம் அதில் கோபமடைந்த பா.ஜ.க நிர்வாகி என்னைக் கடுமையாக தாக்கினார். பிறகு என் போனில் இருந்து வீடியோவையும் நீக்கிவிட்டனர். கூட்டம் நடந்த அறையில் நான் 20 நிமிடங்களாக இருந்தேன். என்னை அடித்த பிறகு வெளியில் வந்து பிற பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்’ எனத் தெரிவித்துள்ளார்.

2018-ம் ஆண்டு பத்திரிகையாளர்கள் சுதந்திரம் தொடர்பாக எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையில் 180 நாடுகளில் இந்தியா 138-வது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் வடகொரியா உள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு 80-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 58 இடங்கள் பின்னோக்கி சென்றுவிட்டது.