Published:Updated:

ஓனர் அவமானப்படுத்தியதால் லாரி டிரைவர் தற்கொலை? - ராமநாதபுரத்தில் சோகம்

ஓனர் அவமானப்படுத்தியதால் லாரி டிரைவர் தற்கொலை? -  ராமநாதபுரத்தில் சோகம்
ஓனர் அவமானப்படுத்தியதால் லாரி டிரைவர் தற்கொலை? - ராமநாதபுரத்தில் சோகம்

ராமநாதபுரம் அருகே தனது ஓனர் தன்னை அடித்து அவமானப்படுத்தியதால் லாரி ஓட்டுநர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சமீபகாலமாக வாகன ஓட்டுநர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகிறது. இந்த சம்பவங்களுக்கு போலீஸார்தான் காரணம் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், ராமநாதபுரத்தில் நடந்துள்ள லாரி ஓட்டுநர் தற்கொலைக்கு லாரி நிறுவன ஓனரே காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராமநாதபுரம் அருகே காருகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டி(43). இவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தீன் லாரி சர்வீஸில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று காலை தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை ராமநாதபுரம் பஜார் போலீஸார் மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அரசு மருத்துவமனையில் திரண்ட அவரது உறவினர்கள், சவுந்தரபாண்டியினை லாரி உரிமையாளர் அடித்து உதைத்து அவமானப்படுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி முற்றுகையில் ஈடுபட்டனர். அதனையடுத்து போலீஸார் முறையாக விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில் சவுந்தரபாண்டி தற்கொலை செய்து கொள்வதற்கு முன், லாரியில் மணல் ஏற்றி வந்து பணம் பெற்றதில் ஏற்பட்ட பிரச்னையில், உரிமையாளர் அடித்து உதைத்து அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி அதை டைரியில் வைத்துள்ளார். இக்கடிதத்தை அவரது குடும்பத்தினர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இறந்த சவுந்தரபாண்டிக்கு சாந்தி(40) என்ற மனைவியும், மகா சக்தி(14), விஜய் சக்தி(5) என்ற மகள்களும் உள்ளனர். இது தொடர்பாக  வழக்குப் பதிவு செய்த ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய  போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.