Published:Updated:

`சாலையோர வியாபாரிகளுக்கு மிரட்டல்; தனியார் நிறுவனத்துக்கு அனுமதி! - தேசபந்து மைதான சர்ச்சை

`சாலையோர வியாபாரிகளுக்கு மிரட்டல்; தனியார் நிறுவனத்துக்கு அனுமதி! - தேசபந்து மைதான சர்ச்சை
`சாலையோர வியாபாரிகளுக்கு மிரட்டல்; தனியார் நிறுவனத்துக்கு அனுமதி! - தேசபந்து மைதான சர்ச்சை

சாலையோர வியாபாரிகளை விற்பனை செய்யவிடாமல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரால் மிரட்டப்பட்ட தேசபந்து மைதானம் தனியார் நிறுவனம் தற்காலிக டூவீலர் ஷோரூம் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

விருதுநகரின் மையப்பகுதியில் பழைய பேருந்து நிலையம் அருகே தேசபந்து மைதானம் அமைந்துள்ளது. இந்த இடத்தைச் சுற்றி கோயில்கள் மற்றும் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்த பெயரை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யக் கோரி தியாகி சங்கரலிங்கனார் இந்த இடத்தில்தான் 76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார். தற்போது கோயில் மற்றும் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொள்ளும் இடமாக இதைப் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது அரசியல் கட்சிக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் மக்கள் பிரச்னைகளை மையப்படுத்தி நடத்தப்படும் பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்குக் காவல்துறையினர் அனுமதி மறுத்துவிடுகின்றனர். ஒலிபெருக்கி அமைக்க அனுமதி கிடையாது.

``தேசபந்து மைதானத்தில் சாலையோரங்களில் கீழே உட்கார்ந்து வெள்ளரி, கொய்யாப்பழம் என விற்பனை செய்யும் வயதானவர்கள் மற்றும் ஏழை மக்களை காவல்துறையினர் விரட்டியடிப்பார்கள். தள்ளுவண்டிகளில் விற்பனை செய்பவர்களையும் காவல்துறையினர் விரட்டுவது அன்றாட வாடிக்கையாகவே உள்ளது. ஆனால், தனியார் நிறுவனத்தின் சார்பில் தற்காலிக டூவீலர் ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. இது அதிகாரிகள் யாருக்கும் தெரியாதா?. ஆனால் இந்த ஷோரூமை காவல்துறையினர் கண்டுகொள்ளவே இல்லை. சிறு வியாபாரிகளுக்கு ஒரு நியாயம், பெரிய நிறுவனங்களுக்கு ஒரு நியாயமா?. இனி இதையே முன்னுதாரணமாக கொண்டு பல தனியார் நிகழ்ச்சிகளுக்கும் இங்கே இடம் கேட்பார்கள். அப்படி எல்லோருக்குமே நகராட்சி நிர்வாகம் அனுமதி கொடுக்குமா?’’ எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் பார்த்தசாரதியிடம் கேட்டபோது, ``அரசு நிகழ்ச்சிகள் நடந்தால் அந்த இடத்தில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வோம். மற்றபடி, தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கொடுப்பதில்லை. டூவீலர் ஷோரூம் அமைக்க நாங்கள் யாருக்கும் அனுமதி தரவில்லை. என்னிடம் யாரும் கையெழுத்து வாங்கவில்லை’’ எனத் தெரிவித்தார்.

நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ஞானமூர்த்தியிடம் கேட்டபோது, ``அரசு நிகழ்ச்சிகளுக்குத்தான் இங்கே அனுமதி வழங்கப்படும். தனியார் நிகழ்ச்சி நடத்த யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. அனுமதி தரவும் மாட்டோம்’’ எனத் தெரிவித்தார்.

விருதுநகர் நகரக் காவல் நிலைய ஆய்வாளர் சம்பத்திடம் கேட்டபோது, ``வாகனங்களை நிறுத்திக் கொள்வதற்காகவே இந்த இடத்தை ஒதுக்கிக் கொடுத்துள்ளோம். தற்போது முதல்முறையாக இப்போதுதான் தனியாருக்கு அனுமதி கொடுத்துள்ளோம். இது ஒரு சாதாரணமான நிகழ்வுதான். 2 நாள்களில் அவர்களே காலி செய்துவிடுவார்கள். ஆனால், இதுதான் முதலும், கடைசியும். இனி யாருக்கும் இதுபோல அனுமதி தரமாட்டோம்’’ எனத் தெரிவித்தார்.