Published:Updated:

`இதை நான் ஏற்கிறேன்!'- காஷ்மீரி குறித்து மேகாலயா ஆளுநர் சர்ச்சைப் பதிவு

`இதை நான் ஏற்கிறேன்!'- காஷ்மீரி குறித்து மேகாலயா ஆளுநர் சர்ச்சைப் பதிவு
`இதை நான் ஏற்கிறேன்!'- காஷ்மீரி குறித்து மேகாலயா ஆளுநர் சர்ச்சைப் பதிவு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டம், அவாந்திபோரா பகுதியில் கடந்த 14-ம் தேதியன்று பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மரணம் அடைந்தனர். உயிர்நீத்த துணை ராணுவ வீரர்களுக்காக நாடே கண்ணீர் வடிக்கிறது. அதற்குக் காரணமான தீவிரவாத அமைப்புக்கு எதிராக நாட்டு மக்கள் கொந்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும், புல்வாமா தாக்குதலுக்குப் பின் நாட்டின் பல்வேறு இடங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் காஷ்மீரி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்த அடுத்தடுத்த நாள்களில், காஷ்மீரி வணிகர்களையும், மாணவர்களையும் சங் பரிவார் அமைப்புகள் தாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் சமூக வலைதளங்களில் காஷ்மீரி மக்களுக்கு எதிராகப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது சில கும்பல்கள். காஷ்மீரிகளைப் புறக்கணிக்க வேண்டும் என இந்தக் கும்பல்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. தனி நபர்கள்தான் இப்படிப் பேசுகிறார்கள் என்றால் இதற்கெல்லாம் ஒரு படி மேலாகச் சென்று மாநில ஆளுநர் ஒருவரே இப்படி சர்ச்சை அளிக்கும் விதமாகப் பேசியுள்ளார். 

மேகலாயா மாநில ஆளுநர் தாதகடெ ராய் தான் இப்படி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற கர்னல் ஒருவர் ஒரு முறையீடு செய்துள்ளார். அதில், புல்வாமா தாக்குதலுக்கு எதிராகக் காஷ்மீர் செல்லாதீர்கள், அடுத்த 2 ஆண்டுகளுக்கு அமர்நாத் செல்லாதீர்கள். ஒவ்வொரு குளிர்காலத்திலும் வரும் காஷ்மீர் வியாபாரிகளிடமிருந்து எதுவும் வாங்க வேண்டாம். அனைத்து காஷ்மீரிகளையும் புறக்கணிப்போம்" எனக் குறிப்பிட்டு ``இதை நான் ஏற்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார். 

இவரின் இந்த சர்ச்சைப் பதிவை அடுத்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மேகாலயா ஆளுநரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார். இதேபோல் உமர் அப்துல்லாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில், ``தாதகடெ ராய் போன்ற ஆட்கள் காஷ்மீரி இல்லாத காஷ்மீர் வேண்டும் எனச் சொல்கிறார்கள். காஷ்மீரி வேண்டாம் எனச் சொல்லும் நீங்கள் எங்கள் நதியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதை ஏன் நிறுத்தவில்லை. விரைவில் நாங்கள் கடலில் பயணம் செய்வதை பார்ப்பீர்கள்" என ட்வீட் போட்டு பதிலடி கொடுத்துள்ளார்.