Published:Updated:

படுகொலைகளின் நூற்றாண்டு!

படுகொலைகளின் நூற்றாண்டு!

பிரீமியம் ஸ்டோரி
படுகொலைகளின் நூற்றாண்டு!

மிர்தசரஸ் நகரத்தின் ஜாலியன் வாலா பாக்கில் அமைதியான முறையில் போராடக் குழுமியிருந்தவர்களின் மீது ஜெனரல் டயர் ஒரு துப்பாக்கிச் சூட்டை நடத்துகிறார். எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் கொடுக்காமல், கலைந்து செல்லுவதற்கான அறிவிப்பைக்கூடச் செய்யாமல், தன் படைவீரர்களை மக்கள்மீது சுடச் சொல்கிறார். பத்து நிமிடங்களில் சுட்டுத் தீர்க்கப்பட்ட 1650 தோட்டாக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுகுவித்தது. ஏப்ரல் 13, 1919 அன்று மாலை 5.45-க்குத் துப்பாக்கிச்சூடு முடிந்தபோதும் அங்குள்ள கிணற்றுக்குள் தற்காப்பிற்காகக் குதித்தவர்கள், துப்பாக்கிக் காயங்களுடன் உள்ளே விழுந்தவர்கள் என அந்தப் பூங்கா வெளியெங்கும் மரணத்தின் ஓலம்.

படுகொலைகளின் நூற்றாண்டு!

கடந்த வாரம் ஜாலியன் வாலா பாக் படுகொலையின் நூற்றாண்டு நினைவு அனுசரிக்கப்பட்ட போது மீண்டும் அந்த மரண ஓலங்கள் எல்லைக்கு அப்பாலும் ஒலித்தன. அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலா பாக் நினைவிடத்தில் இந்தியாவிற்கான பிரிட்டிஷ் தூதர் டொம்னிக் அஸ்க்வித், நினைவு வளையம் வைத்தார், லண்டனில் உள்ள பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஜாலியன் வாலா பாக் சம்பவம் குறித்து ஒரு விவாதம் எழுந்தது. ஏற்கெனவே இங்கிலாந்தின் ராணி எலிசபெத் 1997-ல் இந்தியா வந்தபோதும், டேவிட் காமெரூன் 2013-ல் ஜாலியன் வாலா பாக் சென்ற போதும் கூட யாரும் இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்பதை நாம் அறிவோம். இந்த முறை ஜாலியன் வாலாபாக் நூற்றாண்டையொட்டி மீண்டும் அழுத்தமான விவாதம் எழுந்துள்ளது.

இந்தியா முழுவதிலும் மக்களின் மனங்களில் எழுந்த சுதந்திர தாகம் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டது, இந்த அலையைக் கண்டு பயந்த ஆங்கிலேய அரசு அதை முற்றாக அழித்துவிட நினைத்தது. நெருக்கடி கொடுக்கும் புதிய புதிய சட்டங்களை அவர்கள் இயற்றத் தொடங்கினார்கள்.

ஆங்கிலேய அரசு  ரௌலட் சட்டத்தை இயற்றியது, இதன்படி ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதும், போராடுகிறவர்களை அச்சுறுத்துவதும் அதன் அடிப்படை அம்சம். ஒருவரை எந்த விசாரணையும் இன்றி இரண்டு வருடம் வரை சிறைவைக்கலாம் என்றது ரெளலட் சட்டம்.

படுகொலைகளின் நூற்றாண்டு!

முதலாம் உலகப்போரில்  பிரித்தானியப் படைகள் சார்பாகப் போரிட்டதில் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் மட்டும் 3,55,000 சிப்பாய்கள். இவர்களில் பலர் உயிரிழந்தனர். மீண்டவர்களும், உடல் ஊனமானவர்களும் பஞ்சாப் திரும்பியிருந்தனர். தங்களின் தியாகங்கள் மதிக்கப்படவில்லை என்று ஒரு பெரும் கோபம் சீக்கியர்கள் மத்தியில் நிலவியது. மறுபுறம் விவசாயம் பொய்த்ததும், வறுமையும் விலைவாசி உயர்வும் அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக மாற்றியது.

1919 மார்ச் மாதம் முழுவதுமே சத்தியாக்கிரக நடவடிக்கை தொடங்கியது. இதனால் ஆங்கிலேயர்களின் தகவல் தொடர்பு ஸ்தம்பித்தது, மகாத்மா காந்தியை டெல்லி நகருக்குள் நுழையவிடாமல் தடுத்தது ஆங்கிலேய அரசு. ஆங்கிலேய அரசுக்கு எதிராக தேசிய அளவில் தொழிற்சங்கங்கள் கடையடைப்பு நடத்தி, தங்களின் ஒத்துழையாமையை அறிவித்தனர். இந்திய காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த மருத்துவர் சத்பால்  மற்றும் வழக்குரைஞர் சைஃபூதின் கிச்லூ ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அமிர்தசரஸ் முக்கிய வீதிகளில் மக்கள் தவழ்ந்து செல்ல ஆணையிடப்பட்டது.

படுகொலைகளின் நூற்றாண்டு!

தங்கள் தலைவர்களை விடுவிக்கக்கோரி மார்ச் 30, 1919 அன்று ஜாலியன் வாலாபாக்கில் பெருந்திரளாக மக்கள் குவிந்தார்கள். அன்று நடைபெற்ற முழுக்கடையடைப்பு மக்கள் மத்தியில் பேரெழுச்சியை ஏற்படுத்தியது. இந்த எழுச்சி அலை இந்தியாவின் பல நகரங்களுக்குக் காட்டுத்தீயாய்ப் பரவியது. ஏப்ரல் 10 அன்று நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்தனர்.

ஏப்ரல் 13, 1919 சீக்கியர்களின் புத்தாண்டான பைசாகி நாள். அன்று அமிர்தசரஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட தங்களின் தலைவர்களை விடுவிக்கக் கோரி ஜாலியன் வாலாபாக்கில் மக்கள் பேரெண்ணிக்கையில் திரண்டனர், நான்கு புறமும் பெரும் மதில்களால் சூழப்பட்ட இந்தப் பூங்காவில்தான் ஜெனரல் டயரின் உத்தரவின் பெயரில் 1650 தோட்டாக்கள் இந்திய மக்கள்மீது பாய்ந்து உயிர்குடித்தன.

இந்தப் படுகொலை குறித்து நடந்த விசாரணையின்போது 1919 ஆகஸ்ட் 25 அன்று ஜெனரல் டயர் சமர்ப்பித்த வாக்குமூலத்தில் அவர், “நான் சுட்டேன். கூட்டம் சிதறிப்போகும் வரை சுட்டுக்கொண்டேயிருந்தேன். மக்களின் நெஞ்சிலே எவ்வளவு பெருந்தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணங்கொண்டேனோ அவ்வளவு அதிகம் சுடவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாகப் படையாட்கள் இருந்திருந்தால் அடிபட்டோர் மற்றும் இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருந்திருக்கும். நான் அங்கு போனது வெறுமனே கூட்டத்தைக் கலைக்க மாத்திரமல்ல; மக்களின் நெஞ்சிலே ஒரு குலைநடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன். அங்கு கூடியவர்கள் நெஞ்சில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுவதுமான எல்லோருக்குமே குலைநடுக்கம் தோன்ற வேண்டும் என்றுதான் சுட்டுக்கொண்டேயிருந்தேன். அவசியத்துக்கு மேல் கடுமை காட்டிவிட்டேனோ என்ற கேள்விக்கே இடமில்லை” என்றார்.

படுகொலைகளின் நூற்றாண்டு!

இந்த வார்த்தைகள் நமக்கு அன்றைய நிலைமையை உணர உதவும். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு என்பது இதுபோல் எண்ணற்ற தியாகங்களின் வரலாறுகளால் உருவானது. சாதாரணமாக வந்துவிடவில்லை இந்தச் சுதந்திரம் என்பதை நாம் ஒவ்வொரு நாளும் உணர வேண்டும், நம் பெருமைமிகு வரலாற்றை நினைவுகூர வேண்டும்.

13 ஏப்ரல் 2019 நாளன்று ஜாலியன் வாலா பாக் படுகொலை நடந்து நூறு ஆண்டுகள் ஆகின்றன.  ஜாலியன் வாலா பாக் படுகொலைக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே இப்போது வருத்தம் தெரிவித்துள்ளார். என்றோ நடந்த நிகழ்வுக்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும், எப்பொழுதோ நடந்த நிகழ்வுக்கு இன்று நாங்கள் எப்படி மன்னிப்பு கேட்க முடியும் என்கிறார்கள் அவர்கள்.

ஆஸ்திரேலியாவின் பழங்குடிகளான அபாரிஜின்கள்மீது ஆங்கிலேயர்கள் கடும் நெருக்கடிகளை ஏவினார்கள், படுகொலைகளைச் செய்தார்கள். ஆனால் சமீபமாக, அங்கே அவர்கள் நிகழ்த்திய படுகொலைகளுக்கு ஆஸ்திரேலியப் பாராளுமன்றத்தில் பல முறை மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் விக்டோரிய அரசால் மன்னிப்பு கேட்க முடியும் எனில், இந்தியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்தப் படுகொலைகளுக்கு ஏன் அவர்களால் மன்னிப்பு கேட்க முடியாது?

அது சரி, இதைவிடக் கடுமையான சட்டங்கள் இப்போது இந்தியாவில் நடைமுறையில் இருக்கின்றனவே? ஜெனரல் டயர் ஒரு வெள்ளையராக மட்டும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

அ.முத்துக்கிருஷ்ணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு