Published:Updated:

`லாரிகளிலிருந்து இறக்கவிட மாட்டோம்!’ - ஓ.என்.ஜி.சி-யின் குழாய் பதிக்கும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

`லாரிகளிலிருந்து இறக்கவிட மாட்டோம்!’ - ஓ.என்.ஜி.சி-யின் குழாய் பதிக்கும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு
`லாரிகளிலிருந்து இறக்கவிட மாட்டோம்!’ - ஓ.என்.ஜி.சி-யின் குழாய் பதிக்கும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

சீர்காழி அருகே வேட்டங்குடியில் கெயில் நிறுவனம் சார்பில் லாரிகளில் கொண்டு வரப்பட்ட இரும்புக் குழாய்களை இறக்கவிடாமல் பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி சி நிறுவனம் சார்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த எரிவாயுவை குத்தாலம் அருகே மேமாத்தூர் என்ற இடத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் சில தினங்களுக்கு முன்பு வேம்படி என்ற இடத்தில், கெயில் நிறுவனம் சார்பில் வயலில், லாரிகள் மூலம் இரும்புக் குழாய்களை கொண்டு வந்து இறக்கினர். அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் சார்பில் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எரிவாயுக்குழாய்கள் உரிய பாதை வழியே கொண்டு செல்வதற்கு ஒன்றன் பின் ஒன்றாக வயல்களில் வரிசையாகப் போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வேம்படி கிராமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேட்டங்குடி என்ற இடத்தில் ஒரு தனியாருக்குச் சொந்தமான இடத்தில் கெயில் நிறுவனம் சார்பில் லாரிகளில் கொண்டு வந்த 26 இரும்புக் குழாய்களை 50 க்கும் மேற்பட்ட போலீஸார் உதவியுடன் லாரியிலிருந்து இறக்கும் பணியில் அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டனர், அப்போது வேட்டங்குடியைச் சேர்ந்த நஞ்சை, புஞ்சை விவசாயிகள் சங்கத்தலைவர் வில்வநாதன் மற்றும் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அங்குதன் மற்றும் விவசாயிகள் சம்பவ இடத்திற்கு வந்து ``லாரிகளிலிருந்து இரும்புக் குழாய்களை அனுமதியின்றி இறக்குவதை அனுமதிக்க முடியாது" என்று எதிர்ப்பு தெரிவித்தனர். நீண்டநேர விவாதத்திற்குப் பிறகு, அதிகாரிகள் மற்றும் போலீஸார் அமைதிப்பேச்சு வார்த்தை நடத்தினர். இதுகுறித்து பின்னர் முடிவு செய்வதாக இருதரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, கொண்டு வரப்பட்ட இரும்புக் குழாய்கள் லாரிகளிலேயே இறக்காமல் வைத்திருக்கின்றன. இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

படம் - பா.பிரசன்னா