நாட்டையே உலுக்கிய புல்வாமா தாக்குதலில், இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் 44 பேர் மரணமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக ஜெயிஷ் இ முகமது அமைப்பு பாகிஸ்தானில் உள்ளதால், அந்த நாட்டுக்கு இந்தியா உட்பட மொத்த உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
சில தினங்களுக்கு முன்னர், புல்வாமா தாக்குதல் தொடர்பாகக் கருத்து வெளியிட்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ‘ தீவிரவாதத் தாக்குதலில் எந்த ஆதாரமும் இல்லாமல் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சுமத்துகிறது. தீவிரவாதத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தத் தாக்குதலால் எங்களுக்கு என்ன பயன். இந்தத் தாக்குதல் தொடர்பாக இந்தியா ஏதேனும் ஆதாரம் அளித்தால், இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருக்கிறோம். தீவிரவாதம் மற்றும் காஷ்மீர் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் பாகிஸ்தான் தயாராக உள்ளது’ என வீடியோ மூலம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமரின் கருத்தை ட்விட்டரில் விமர்சித்துள்ள பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா, “ டியர் பிரைம் மினிஸ்டர், பேசினால் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்றால், நீங்கள் மூன்று முறை திருமணம் செய்துகொள்ளவேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஒருவர் உங்கள்மீது ஆர்.டி.எக்ஸ் பாம் வீச வரும்போது, அவரிடம் எப்படி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்த முட்டாள் இந்தியர்களுக்குப் பாடம் எடுங்கள் சார். அதற்கான ஆசிரியர் கட்டணத்தையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
உங்கள் நாட்டில்தான் ஒசாமா வாழ்ந்தார் என்று அமெரிக்காவுக்குத் தெரிந்துள்ளது. ஆனால், உங்கள் நாட்டில் யார் வாழ்கிறார்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. உங்கள் நாடு உண்மையாகவே ஒரு நாடா. நான் ஒரு முட்டாள் இந்தியன் கேட்கிறேன், தயவுசெய்து எனக்குக் கற்றுக்கொடுங்கள் சார். ஜெயிஷ் இ முகமது, லக்ஷர் இ தொய்பா, தாலிபான், அல்கொய்தா போன்ற அமைப்புகள் உங்கள் நாட்டில் உள்ளதாக யாரும் என்னிடம் சொல்லவில்லை. ஆனால், அவர்கள் உங்கள் நாட்டில் இல்லை, அவர்கள் நட்பை நீங்கள் விரும்பவில்லை என நீங்கள் சொல்லியும் நான் கேட்டதில்லை இம்ரான் சார்.
நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஜெயிஷ் இ முகமது, லக்ஷர் இ தொய்பா போன்ற அமைப்புகள் அனைத்தும் உங்களின் பந்துகள் போன்றவை. அவற்றை நீங்கள் பாகிஸ்தான் என்ற பவுண்ட்ரியைக் கடந்து இந்தியா என்ற பெவிலியனுக்கு தொடர்ந்து அடிக்கிறீர்கள். வெடிகுண்டுகளை ( Bomb) கிரிக்கெட் பந்துகள் போன்று நீங்கள் கருதுகிறீர்களா... எங்களுக்குக் கற்றுக்கொடுங்கள்’ எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.