Published:Updated:

‘‘அணு உலையில் பிரச்னை இருக்கிறது’’

‘‘அணு உலையில் பிரச்னை இருக்கிறது’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘அணு உலையில் பிரச்னை இருக்கிறது’’

- சர்ச்சையைக் கிளப்பும் அணுசக்திக் கழகத் தலைவர்!

‘‘அணு உலையில் பிரச்னை இருக்கிறது’’

- சர்ச்சையைக் கிளப்பும் அணுசக்திக் கழகத் தலைவர்!

Published:Updated:
‘‘அணு உலையில் பிரச்னை இருக்கிறது’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘அணு உலையில் பிரச்னை இருக்கிறது’’

கூடங்குளம் அணு உலையின் முதல் இரு அலகுகளின் கட்டுமானம், செயல்பாடு ஆகியவற்றில் கோடிக்கணக்கான ரூபாய் அளவில் முறைகேடு நடந்திருப்பதாக, மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவினர் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அந்தச் சர்ச்சையே இன்னும் தீராத நிலையில், ‘கூடங்குளம் அணு உலையில் பிரச்னை இருக்கிறது’ என்று இந்திய அணுசக்திக் கழகத்தின் தலைவர் மற்றும் அணுசக்தித் துறைச் செயலாளர் கமலேஷ் நில்கந்த் வியாஸ் கூறியிருப்பது, பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

‘‘அணு உலையில் பிரச்னை இருக்கிறது’’

‘கூடங்குளம் அணு உலைகளில் தரமான உதிரி பாகங்கள் பொருத்தப்படவில்லை; அவை பாதுகாப்பற்றவை’ என்று சமூக ஆர்வலர்களும் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினரும் குரல் கொடுத்துவருகிறார்கள். சில சமூக ஆர்வலர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகப் பெற்றுள்ள தகவல்களின்படி 2013-ம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் முதலாவது அணு உலை இதுவரை 47 முறையும், 2017-ம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் இரண்டாவது அணு உலை இதுவரை 19 முறையும் பழுதடைந்ததாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 15, 16 ஆகிய தேதிகளில் ரஷ்யாவில், ‘ஆட்டம் எக்ஸ்போ 2019’ என்ற சர்வதேச அணுசக்தி மாநாடு நடைபெற்றது. 74 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் இந்திய அணுசக்திக் கழகத்தின் தலைவர் கமலேஷ் நில்கந்த் வியாஸும் பங்கேற்றார். அவரிடம், “கூடங்குளம் அணு உலைகள் அடிக்கடி பழுதடைகின்றனவே?” என்று செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளித்த கமலேஷ், “கூடங்குளம் அணு உலைகள் அடிக்கடி நிறுத்தப்படுவது வழக்கத்துக்கு மாறானதுதான். அணு உலைகளில் அடிக்கடி பழுது ஏற்படுவதை நான் ஒப்புக்கொள்கிறேன். அவை மூன்றாம் தலைமுறை வகையைச் சேர்ந்தவை. இந்த வகையான அணு உலைகள் உலகிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்டிருப்பதால், தொடக்கநிலைப் பிரச்னைகள் இருக்கின்றன. மஹாராஷ்டிர மாநிலத்தின் தாராப்பூரில் அமைக்கப்பட்டுள்ள அணு உலையிலும் இதேபோலப் பிரச்னைகள் ஏற்பட்டன. மூன்று, நான்கு ஆண்டுகளில் அவை சரி செய்யப்பட்டன. கூடங்குளத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க இந்திய அணுசக்திக் கழகத்தினர் தீவிரமாகச் செயல்படுகிறார்கள்” என்று சொல்லியிருக்கிறார். இதுதான் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

‘‘அணு உலையில் பிரச்னை இருக்கிறது’’

இதுகுறித்து அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத் தின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரனிடம் பேசினோம். “நாங்கள் ஆரம்பத்திலிருந்தே, ‘அணு உலைக் கட்டுமானத்தில் ஊழல்கள் நடந்துள்ளன’ என்று சொல்லிவருகிறோம். ஆனால், ‘வெளிநாட்டில் பணம் வாங்குகிறோம்’ என்று எங்கள்மீதே அவதூறு பரப்பினார்கள். ஈரான் நாட்டின் புஷ்ஷர் நகரம், சீன நாட்டின் ஷான்வான் நகரம் ஆகியவற்றில் அமைக்கப்பட்ட அணு உலைகளுக்கு ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ‘ஆட்டம்ஸ்ட்ரோய் எக்ஸ்போர்ட்ஸ்’ நிறுவனத்திடம் இருந்து உதிரிப்பாகங்கள் வாங்கப்பட்டன. அவற்றில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டன. இதையடுத்து அந்த நாடுகள், ரஷ்ய நிறுவனத்திடம் பேசிப் பிரச்னைகளைச் சரி செய்துகொண்டன. ஆனால், இந்தியாவில் பிரச்னை கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அணுசக்திக் கழகத் தலைவரே பிரச்னை இருப்பதை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், மேலும் உலைகள் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்” என்றார்.

‘கூடங்குளம் அணு உலைகளைச் செயல்பட அனுமதிக்கக் கூடாது’ என்று வழக்குத் தொடர்ந்திருக்கும் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம். “ஆரம்பத்திலிருந்தே நாங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை அரசியல்வாதிகள், அணுசக்திக் கழகத்தினர், அணுசக்தித்துறை வல்லுநர் கள் மறுத்துவருகிறார்கள். ஆண்டுக்கு ஓரிரு முறை அணு உலை நிறுத்தப்படுவது சகஜமானது. ஆனால், இந்த அணு உலைகள் குறுகிய காலத்திலேயே பல முறை நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த 300 நாள்களாக அணு உலை செயல்படவில்லை. அணு உலையில் சிறிய பாதிப்பு ஏற்பட்டால் கூட மக்களுக்குத் தீராத சோகத்தை ஏற்படுத்திவிடும். அதனால், அணு உலைகளை உடனடியாக மூட வேண்டும். அடுத்த அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இனி அணு உலை அமைக்கும் திட்டங்களையும் கைவிட வேண்டும். இந்தியாவில் அடுத்தடுத்து அணு உலைகள் ஆரம்பிப்பது பாதுகாப்பல்ல” என்றார்.

‘‘அணு உலையில் பிரச்னை இருக்கிறது’’

இதற்கிடையே, ம.தி.மு.க பொதுச் செயலாளரான வைகோ, “இடிந்தகரை மக்களும், போராட்டக் குழுவினரும் நீண்டகாலமாகச் சொல்லிவரும் விஷயத்தை அணுசக்தித் துறை இப்போது ஒப்புக்கொண்டிருக்கிறது. அணு உலையால் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில், பேரிடர் மேலாண்மையை மேற்கொள்ளும் பொறுப்பு தமிழக அரசுக்கே இருக்கிறது. எனவே, அணு உலைகளின் செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்திவைக்கச் சொல்லி தமிழக அரசு உத்தரவிட வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அணு உலைகள் தொடர்பாக மக்களுக்கு எழும் சந்தேகத்தையும் அச்சத்தையும் போக்க வேண்டியது அரசின் கடமை!

- பி.ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்