Published:Updated:

நீதிக்கு விசாரணை!

நீதிக்கு விசாரணை!
பிரீமியம் ஸ்டோரி
நீதிக்கு விசாரணை!

நீதிக்கு விசாரணை!

நீதிக்கு விசாரணை!

நீதிக்கு விசாரணை!

Published:Updated:
நீதிக்கு விசாரணை!
பிரீமியம் ஸ்டோரி
நீதிக்கு விசாரணை!
நீதிக்கு விசாரணை!

மீண்டும் ஒருமுறை நீதித்துறை குறித்த சர்ச்சை கிளம்பியுள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், பாலியல் ரீதியில் தன்னைத் துன்புறுத்தியதாக நீதிபதியின் அலுவலக முன்னாள் பெண் ஊழியர் திடுக்கிடும் குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறார். ‘ஒரு நீதிபதியாக நேர்மையுடன் நான் பணியாற்றுவதற்கு எதிராகப் பின்னப்பட்டிருக்கும் சதி இது’ என்று ரஞ்சன் கோகோய் மறுப்பு தெரிவித்திருக்கிறார். கூடவே, மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், பார் கவுன்சில், மத்திய அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சியினர் என்று பலரும் தலைமை நீதிபதியின் பக்கம் தாங்கள் நிற்பதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே சமயம், இந்தப் புகாரை விசாரிப்பதற்காக, தானே நீதிபதிகள் குழுவை அமைத்த தலைமை நீதிபதி, அதில் தானும் இடம்பெற்றது கடும் விமர்சனத்துக்குள்ளானது. பாலியல் ரீதியிலான புகார்கள் என்றதுமே, அதற்குரிய வழிமுறைகளோடு விசாரணை நடப்பதை அவர் உறுதி செய்திருக்க வேண்டும், விசாரணைகளுக்கு வழிவிட்டு நின்றிருக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்யத் தவறியது, பலவாறான ஊகங்களுக்கு வழி வகுத்துவிட்டது. ஆனாலும், பிறகு சுதாரித்துக்கொண்டு, ‘இந்தப் பிரச்னையை ஊடகங்களின் கைகளுக்கு விட்டுவிடுகிறோம்’ என்று கூறியிருப்பதும், ‘புகாரை விசாரிக்கும் குழுவில் தலைமை நீதிபதி இடம்பெற மாட்டார்’ என்று முடிவெடுக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது!

இது இப்படியிருக்க, இந்தக் குற்றச்சாட்டின் பின்னணியில், அரசியல் காரணங்கள் இருக்கின்றன என்று வெளியாகும் செய்திகளையும் அப்படியே ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ‘நீதித்துறையில் அரசியல் தலையீடு’ என்று சில மாதங்களுக்கு முன் வெளிப்படையாகப் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய நீதிபதிகளில் இந்த ரஞ்சன் கோகோயும் ஒருவர். சமீபத்தில் ரஃபேல் விமான பேர ஊழல் குறித்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு ஏற்றது, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரத்துக்குத் தடை எனப் பல்வேறு வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். கூடவே, ராகுல் காந்தி, மத்திய அரசு தொடர்பான பல்வேறு வழக்குகளில் அடுத்தடுத்த வாரங்களில் தீர்ப்பு வரவிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.  ‘தலைமை நீதிபதிமீது இத்தகைய குற்றச்சாட்டைச் சுமத்துவதற்காக ஒன்றரைக் கோடி ரூபாய் வரை என்னிடம் பேரம் பேசப்பட்டது. நான் மறுத்துவிட்டேன்’ என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரே வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.

இவற்றிலெல்லாம் நியாயம் இருக்கிறதா என்று தீர விசாரிக்கவும் வேண்டும்.  ஏற்கெனவே சி.பி.ஐ, தேர்தல் ஆணையம் என்று சுயேச்சையான அமைப்புகளில் சர்ச்சைக்கும் சந்தேகத்துக்கும் உரிய நிகழ்வுகள் தொடர்கின்றன. இத்தகைய சூழலில், தலைமை நீதிபதிமீதான இந்தக் குற்றச்சாட்டு, ஒட்டுமொத்தமாக நாட்டின் சுயேச்சை அமைப்புகள் அனைத்தையும் முடக்கும் வேலையோ என்கிற சந்தேகத்தை எழுப்பாமல் இல்லை. எனவே, இது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தி, பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். ஏனெனில், ஜனநாயகத்தில் மிச்சமிருக்கும் கடைசி நம்பிக்கை, நீதித்துறைதான். அதுவும் சிதைக்கப்பட்டால்?!