Published:Updated:

உலகமயமாகும் பயங்கரவாதம் - இலங்கைத் தொடர் குண்டுவெடிப்பு

உலகமயமாகும் பயங்கரவாதம் - இலங்கைத் தொடர் குண்டுவெடிப்பு
பிரீமியம் ஸ்டோரி
உலகமயமாகும் பயங்கரவாதம் - இலங்கைத் தொடர் குண்டுவெடிப்பு

ஜமாலன்

உலகமயமாகும் பயங்கரவாதம் - இலங்கைத் தொடர் குண்டுவெடிப்பு

ஜமாலன்

Published:Updated:
உலகமயமாகும் பயங்கரவாதம் - இலங்கைத் தொடர் குண்டுவெடிப்பு
பிரீமியம் ஸ்டோரி
உலகமயமாகும் பயங்கரவாதம் - இலங்கைத் தொடர் குண்டுவெடிப்பு

லங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள், மனித குலத்தின் உச்சபட்ச கொடூரங்களில் ஒன்று.  சர்ச்சுகள், சுற்றுலாப் பயணிகள் தங்கும் ஹோட்டல்கள் தாக்கப்படுவதில் உள்ள உள்நோக்கம் குறித்த குழப்பம் முக்கியமானது. எந்தவித எதிர்பார்ப்பும் உள்நோக்கமும் இல்லாமல் சர்ச்சுகளைத் தாக்குதல் என்பதும், இலங்கை அரசுக்குத் தெரியாமல் இது நடந்துவிட்டதான தோற்றம் எல்லாம் ஏற்படுத்தும் சந்தேகம் முக்கியமானது. தொடர்ந்து ஆறுமாத காலமாக, இந்திய உளவுத்துறையான ரா (RAW) மற்றும் இலங்கை உளவுத்துறை எச்சரித்தும், அரசு இதில் கவனமற்று இருந்துள்ளது ஏன்? என்ற கேள்விகள் எழுகின்றன. முன்பு ஈழத்தமிழ் போராளிகளைத் தனிமைப்படுத்த, இலங்கைப் பேரினவாத அரசே இத்தகைய குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய வரலாறுகள் உண்டு. இலங்கையில் பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய நான்கு மதத்தினரே முக்கியமான மதத்தினர்கள் என்றாலும், பௌத்தர்களே சிங்கள இனமாகவும், மதமாகவும் உள்ளனர். 

உலகமயமாகும் பயங்கரவாதம் - இலங்கைத் தொடர் குண்டுவெடிப்பு

தமிழீழ இனப்போரில் நிகழ்ந்த பேரழிவுக்குப் பின் நடத்தப்பட்டிருக்கும் இத்தாக்குதல், இலங்கையின் அரசியலில் மற்றொரு பரிணாமத்தைக் காட்டுகிறது.  இன முரண்களிலிருந்து மத முரண்களை நோக்கி நகர்த்தப்படுவதன் வழியாக தேசியப் போராட்டங்கள், மதப்போராட்டங்களாக மாற்றப்பட்டு எல்லை தாண்டியதான ஒரு உலகளாவியத் தன்மை உருவாக்கப்படுகிறது.

இலங்கையில் சமீப காலங்களில் உருவாகி வளரும் இந்துத்துவ சக்திகள், ராஜபக்சவின் அரசைக் கைப்பற்றும் வெறி, சிறிசேனாவின் அரசாங்கத்திற்கும் அரசிற்கும் உள்ள முரண்பாடுகள், பௌத்த சிங்கள அதிகார வர்க்கத்திற்குள் நிலவும் முரண் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதம் பேசும் அடிப்படைவாத அமைப்புகளின் வளர்ச்சி, எனப் பல காரணிகள் இதில் கவனம் செலுத்த வேண்டிய புள்ளிகள். இத்தொடர் குண்டுவெடிப்புகளில் இஸ்லாம் என்கிற பொதுமைப்படுத்துதல் எத்தனை ஆபத்தானதோ, அத்தனை ஆபத்தானது இந்நிகழ்வின் புவிசார் அரசியலையும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் உலகளாவிய அரசியலையும் அதன் சார்புகளையும் வெளிப்படுத்தாமல் பேசுவது.

பொதுவாக, மத அடிப்படைவாதத்திற்கும் அம்மதங்களுக்கும் சம்பந்தமில்லை. இது இந்து, பௌத்த, யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் அனைத்துக்கும் பொதுவானது. மத அடிப்படைவாதம் என்பது, நவீனத்துவ சமூகத்தால் கைவிடப்பட்ட, பகுத்தறிவுசார் மதச்சார்பற்ற அரசுகளுக்கு எதிராக உருவான ஒருவகைப் பின்நவீன அரசியல் விளைவு.  மத அதிகாரத்தைக்கொண்ட புனித அரசுகள் உருவாக, இறைவனின் ஆட்சியதிகாரத்தைக் கொண்டுவரும் நோக்கை வெளிப்படுத்துவதாக இவ்வமைப்புகள் அறிவித்துக்கொண்டாலும், அடிப்படையில் இவை புவிசார் அரசியலில் உருவாக்கப்பட்டிருக்கும் உலகமுதலாளியத்தின் ( global capitalism) அடியாள் படைகளாகச் செயல்படுபவை.  முதலாளியத்தைப்போல, மத அடிப்படை வாதமும், பயங்கரவாதமும் தேசம் கடந்த நிகழ்வுகளாக மாறியுள்ளன. அதை ஒரு குறுகிய தேசத்திற்குள்ளோ, அங்குள்ள மதங்கள், மதநம்பிக்கையாளர்கள் அல்லது மக்களிடம் சுருக்கிப் பார்ப்பது பிரச்னையின் ஆழத்தைப் புரிந்துகொள்ள உதவாது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு குறிப்பிட்ட நாட்டின் இளைஞர்கள் பலியாவதற்குக் காரணம், அங்குள்ள பொருளியல் நிலை உருவாக்கும் நெருக்கடி, வேலையின்மை, வாழ்வின் துயரங்களுக்கு தீர்வின்மை எனப் பல காரணங்களும், அதனால் தூண்டப்படும் உணர்ச்சிகளுக்கு அடிமையாவதுமே. இதன் பொருள், அடிப்படையில் மதங்கள் சிறந்தவை, மத அடிப்படைவாதம் மட்டுமே மோசம் என்பதல்ல. ஒருகாலத்தில், அரசில் அதிகாரம் செலுத்திய மதங்களைத் தற்போது உலக முதலாளியம் தனது புவிசார் அரசியலுக்குக் கையாளும் நடவடிக்கையின் ஒரு வெளிப்பாடே இந்நிகழ்வுகள். பயங்கரவாதம், தீவிரவாதம், மத அடிப்படைவாதம் ஆகியவற்றை ஒரு தேசத்திற்குள் சுருக்கிவிட முடியாது. அது ஒரு சர்வதேசிய, உலகமய நிகழ்வாகும் என்கிற புரிதல் அவசியம்.

உலகமயமாகும் பயங்கரவாதம் - இலங்கைத் தொடர் குண்டுவெடிப்பு

வெடிகுண்டு வைத்த தற்கொலைப்படையினரில் இருவர், தொழில் அதிபரின் மகன்கள் என்கிறார்கள்.   கோடிஸ்வரர்களான இவர்கள் எப்படி தம் உயிரை மாய்த்துக் கொள்ளச் சம்மதிப்பார்கள்? இங்கு பணம் மட்டுமே காரணம் அல்ல. இறையியலில் ஏற்றப்படும் போதை, மரணமற்ற பெருவாழ்வு பற்றி பெருங்கதையாடலுடன் இணைந்தது இது.  எல்லா மதங்களிலும் அடிப்படைவாதம் மதத்தைக் காக்க மரணிப்பதை அமரத்துவம் (martyrdom) என்ற பெரும் பிம்பமாகக் கட்டமைக்கிறது. அப்பிம்பம் தரும் இதமே அவர்களது ஆழ்மன வேட்கையாக, விருப்பாகப் பதிகிறது. தற்கொலைதாரி இந்த அமரத்துவ மதவாதக் கருத்தியலால் கட்டப்படுகிறான்.

தற்போதைய உலகமயச் சூழலில், இத்தகையத் தொடர் குண்டுவெடிப்புகள் ஒரு புதிய போர்வடிவமாக மாறியுள்ளன.  தற்கொலைத் தாக்குதலும், இலக்கற்று ஒரு பயங்கரத்தை உருவாக்கும் வண்ணம் நிகழ்த்தப்படும் குண்டுவெடிப்புகளும், உலக முதலாளிய அமைப்பு இன்று ஒரு நாட்டின் சந்தைகளை, மூலவளங்களைக் கைப்பற்ற உருவாக்கியிருக்கும் உளவுத்துறை வழியிலான உள்நாட்டுப் போர்முறையே. இது இந்நூற்றாண்டின் மத அடிப்படைவாதத்தின் பின்னணி அரசியலாகும்.

இம்முறை, தேவாலயங்களோடு இலங்கையின் முக்கியப் பொருளாதாரமான சுற்றுலாப் பொருளாதாரத்தைக் குறிவைத்து, சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ள விடுதிகள் தாக்கப்பட்டு, பல நாடுகளின் சுற்றுலாப் பயணிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இங்கு தாக்குதலின் பின்னணியில் மத அடிப்படை வாதிகளின் மத வெறுப்புணர்வு மட்டுமே இல்லை. இலங்கையின் சுற்றுலாப் பொருளாதாரத்தை குலைக்கும் நோக்கமும் உள்ளது. ஆக, இக்குண்டுவெடிப்புகளின் பின்னுள்ள திட்டமிடலில், இலங்கையை ஒரு ஈரான், ஆப்கான் போன்ற நாடாக மாற்றி, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் நுழைவிற்கான கதவைத் திறப்பதாகவும் உள்ளது. அதாவது இலங்கை ‘குளோபல் வார் ஆன் டெர்ரர்’ என்ற வலையத்தில் இணைக்கப்படுகிறது. 

உலகமயமாகும் பயங்கரவாதம் - இலங்கைத் தொடர் குண்டுவெடிப்பு

இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க, மதங்களின் பெயரால் வெளிப்படும் ஜனநாயகமற்ற அனைத்துக் காரணிகளையும் உடனடியாகக் கண்டு களைவது முக்கியம்.

இந்தக் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் உள்நாட்டு, வெளிநாட்டு, பன்னாட்டு என, எந்த அரசியல் செயல் பட்டாலும், எந்த மதம் செயல்பட்டாலும், அது மக்கள் விரோதமானது. அதைச் சமூகத்திலிருந்து அப்புறப்படுத்துவது ஒவ்வொருவரின் கடமையாகும். ‘தங்கள் மதம் விடுதலைக்கானது’ என நம்பும் ஒவ்வொரு மதவாதியும் செய்யவேண்டிய பணி.  ஒவ்வொரு தனிமனிதரும் செய்யவேண்டிய பணி!