Published:Updated:

‘இந்தியா, பாகிஸ்தான் போர் சிறந்த பொழுதுபோக்காக இருக்கும்’ - நடிகர் சர்ச்சைப் பேச்சு

‘இந்தியா, பாகிஸ்தான் போர் சிறந்த பொழுதுபோக்காக இருக்கும்’ - நடிகர் சர்ச்சைப் பேச்சு
‘இந்தியா, பாகிஸ்தான் போர் சிறந்த பொழுதுபோக்காக இருக்கும்’ - நடிகர் சர்ச்சைப் பேச்சு

கடந்த பிப்ரவரி மாதம், காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோசமான சூழல் நிலவிவருகிறது. புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளை பாகிஸ்தான் ஆதரிப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது. 

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், கடந்த 26-ம் தேதி அதிகாலை இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, 27-ம் தேதி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வான்வெளியில் தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானைச் சேர்ந்த F16 விமானத்தை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். அதே நேரம், இந்தியாவைச் சேர்ந்த MiG 21 ரக விமானம் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தில் விழுந்தது. அதில் இருந்த இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்தனர். பின்னர், இந்தியா உட்பட உலக நாடுகளின் கோரிக்கைப்படி நேற்று விமானி விடுவிக்கப்பட்டார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எந்த நேரத்திலும் போர் உருவாகலாம் என்ற சூழலில், இதைப் பற்றி மிகவும் நகைச்சுவையாகப் பேசியுள்ளார், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் ஒருவர். தற்போது, இவரின் கருத்து சர்ச்சையாகியுள்ளது. 

அமெரிக்காவில்  ‘தி டெய்லி ஷோ (TheDailyShow)’ என்ற தலைப்பில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் ட்ரெவோர் நோவா (Trevor Noah), இரவு நிகழ்ச்சி ஒன்றை நடத்திவருகிறார்.  உலகில் நடக்கும் சம்பவங்களை வைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதில் நடிகர் நோவா, ‘ இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடக்காது என எனக்கு நம்பிக்கை உள்ளது. ஒருவேளை போர் நடந்தால், அது மிகவும் பொழுதுபோக்கான ஒரு போராக இருக்கும்’ எனக் கூறியுள்ளார். மேலும், பாலிவுட் படங்களை மேற்கோள் காட்டி, அதில் வருவதுபோல் இந்திய வீரர்கள் போர்க்களத்தில் துப்பாக்கிகளுடன் பாடலுக்கு நடனமாடுவார்கள்’ என்பது போல் பேசியுள்ளார். 

இவரின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இரு நாடுகளும் போர்ப் பதற்றத்தில் இருக்கும் நேரத்தில், அதை நகைச்சுவையாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது என்றும், இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் போர் உங்களுக்கு பொழுதுபோக்கா என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.