Published:Updated:

கிறிஸ்துவ மாணவர்களுக்கு மட்டும் விண்ணப்பமா? - விளக்கம் அளித்த கோவை பள்ளி

கிறிஸ்துவ மாணவர்களுக்கு மட்டும் விண்ணப்பமா? - விளக்கம் அளித்த கோவை பள்ளி
கிறிஸ்துவ மாணவர்களுக்கு மட்டும் விண்ணப்பமா? - விளக்கம் அளித்த கோவை பள்ளி

எல்.கே.ஜி வகுப்பில் சேர்வதற்கு கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே விண்ணப்பம் என்று நோட்டீஸ் ஒட்டி சர்ச்சையில் சிக்கிய நிர்மல் மாதா மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தினர் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காகவே அப்படிச் செய்ததாக மன்னிப்புக் கடிதம் கொடுத்துள்ளனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியில்  செயல்பட்டு வருகிறது நிர்மல் மாதா மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் நேற்றைய தினம் எல்.கே.ஜி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாக ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம், `கிறிஸ்துவர்களுக்கு மட்டும்' என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்ததுதான். மாணவர்களிடம் ஒற்றுமையைப் போதிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள பள்ளிக்கூடம் கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே விண்ணப்பம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த அறிவிப்பு நோட்டீஸின் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன ``அமெரிக்காவில் போய் பள்ளிக்கூடம் நடத்துங்கள்" என்று ஏராளமான கண்டனக் குரல்கள் நிர்மல் மாதா பள்ளிக்கு எதிராக ஒலித்தன. இந்த விவகாரம் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் வரை சென்று பரபரப்பானது. இது தொடர்பாக கோவை சி.இ.ஓ விசாரணை நடத்துவார் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நிர்மல் மாதா பள்ளி முதல்வரிடம் கோவை சி.இ.ஓ அய்யண்ணன் இன்று விசாரணை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ``மாணவர்கள்  சேர்க்கையின்போது பள்ளியில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவே ஒரு நாள் கிறிஸ்துவர்களுக்கு மட்டும் விண்ணப்பம் வழங்கப்படும் என நோட்டீஸ் ஒட்டியதாக தெரிவித்தனர். அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்று தெரிவித்து இந்தச் செயலுக்கு வருத்தம் தெரிவித்து பள்ளி நிர்வாகம் சார்பில் மன்னிப்புக் கடிதம் கொடுத்துள்ளார்கள். இது மட்டுமல்லாது, கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது குறித்தும் ஆய்வு செய்துவிட்டோம். முறைகேடு எதுவும் நடைபெறவில்லை. இது குறித்து அரசுக்கு இன்று ரிப்போர்ட் அனுப்ப உள்ளோம்" என்றார்.