Published:Updated:

மீண்டும் பயம் காட்டும் ஹைட்ரோ கார்பன் எமன்!

மீண்டும் பயம் காட்டும் ஹைட்ரோ கார்பன் எமன்!
பிரீமியம் ஸ்டோரி
மீண்டும் பயம் காட்டும் ஹைட்ரோ கார்பன் எமன்!

சூழலியல்

மீண்டும் பயம் காட்டும் ஹைட்ரோ கார்பன் எமன்!

சூழலியல்

Published:Updated:
மீண்டும் பயம் காட்டும் ஹைட்ரோ கார்பன் எமன்!
பிரீமியம் ஸ்டோரி
மீண்டும் பயம் காட்டும் ஹைட்ரோ கார்பன் எமன்!

நெடுவாசல் பகுதி மக்களை நிம்மதி இழக்க வைத்திருந்த ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டம், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது முதல்கட்டமாக 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் போராட்டம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது.

ஹைட்ரோ கார்பன் என்று பொதுவான பெயரில் அழைக்கப்பட்டாலும், இது கச்சா எண்ணெய், மீத்தேன், ஷேல் கேஸ் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதுதான். நிலத்திலிருந்து இவற்றை எடுக்க விரும்பும் நிறுவனங்கள், ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக அனுமதி வாங்க வேண்டிய நிலை இருந்தது. கடந்த 2016-ஆம் ஆண்டு, அனைத்தையும் உள்ளடக்கிய ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஒற்றை அனுமதிக் கொள்கையை நடைமுறைப் படுத்தியுள்ளது, மத்திய அரசு. அதன்படிதான் தற்போது பிச்சாவரம் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ‘ஷேல் கேஸ்’ இருப்பதை ஆய்வுகள்மூலம் முன்பே கண்டறிந்துள்ளது, மத்திய அரசு.

மீண்டும் பயம் காட்டும் ஹைட்ரோ கார்பன் எமன்!

ஷேல் கேஸ் எடுக்க மிகவும் அபாயகரமான ‘ஹைட்ராலிக் ஃபிராக்ச்சரிங்’ எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். ஒருமுறை ஹைட்ராலிக் ஃபிராக்ச்சரிங் செய்ய 15 கோடி லிட்டரிலிருந்து 20 கோடி லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும். அதோடு கிட்டத்தட்ட 600 வகையான ரசாயனங்கள் பயன்படுத்த போவதாகச் சொல்லப்படுகின்றன. இதனால், நிலத்தடி நீரும், நிலப்பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்படும்.

இதுகுறித்து நம்மிடம் பேசினார், காவிரி டெல்டா பாசன விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன்.

“காவிரிப் படுகையைக் குறிவைத்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் பணிகள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டது. பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, நாப்தா, ஷேல் எரிவாயு போன்றவற்றின் ஒட்டுமொத்த வடிவம்தான் ஹைட்ரோ கார்பன். இதற்கு முன்பு தமிழ்நாட்டில் காவிரிப் படுகைப் பகுதியில் சிறிய அளவில்தான் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது, தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு முன்பே அனுமதி வழங்கிவிட்டது, மத்திய அரசு. முதல்கட்ட பணியாக, ஆய்வுகள் நடத்தி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்க மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், வேதாந்தா நிறுவனம் உடனடியாகக் காவிரிப்படுகையில் ஹைட்ரோ கார்பன் கிணறு தோண்டும் பணிகளைத் தொடங்கும்.

காவிரிப் படுகையை இரு மண்டலங்களாகப் பிரித்து மொத்தம் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. விழுப்புரம் மற்றும் புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் (பிரிவு-1) 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டப்படும். கடலூர் முதல் நாகை வரையுள்ள பகுதிகளில் (பிரிவு-2) 158 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டப்படும். இந்த 274 கிணறுகளும்… 3,500 மீட்டர் முதல் 4,500 மீட்டர் ஆழம் வரை தோண்டப்படலாம். காவிரிப்படுகையின் கடல் பகுதியில் சுமார் 4,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் பல இடங்களில் கிணறுகள் அமைக்கப்படும். நிலப்பகுதிகளில் நாகப்பட்டினம், காரைக்கால், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கிணறுகள் அதிகமாக அமையும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீண்டும் பயம் காட்டும் ஹைட்ரோ கார்பன் எமன்!

சில கிணறுகள் மக்கள் அதிகம் வாழும் பூம்புகார், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் அமைய உள்ளன. பிச்சாவரம் பகுதியில் மாங்குரோவ் என்றழைக்கப்படும் அலையாத்திக் காடுகளை ஒட்டியும் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. இக்கிணறுகள் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகளை ஏற்கெனவே வேதாந்தா நிறுவனம் தொடங்கிவிட்டது. அதனால், கிணறு அமைக்கும் பணிக்கான ஆய்வறிக்கை மத்திய அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது. அந்த அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், பணிகள் வேகமெடுக்கும்.

ஹைட்ராலிக் ஃபிராக்ச்சரிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது, காவிரி டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்படும். தற்போதே, மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்துவருகிறார்கள். எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும். விவசாயத்துக்கும் தண்ணீர் கிடைக்காமல் பெரும் அவல நிலை உருவாகும். கடல் நீர் உள்வாங்கக்கூடிய சூழல் ஏற்பட்டு நிலத்தடி நீர் மாசுபடும். நிலநடுக்கம் ஏற்படக்கூட வாய்ப்புகள் உண்டு” என்ற இளங்கீரன் நிறைவாக,

“ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் ஹைட்ரோ கார்பன் திட்டம் அழித்துவிடும். அதனால், காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டும் திட்டத்தை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் உறுதியான குரலில்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை உடனடியாக அறிவித்து, மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது, தமிழக முதல்வரின் கடமை.

- கு.ராமகிருஷ்ணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism