Published:Updated:

கீதாஜீவன் எம்.எல்.ஏ-வின் சர்ச்சைப் பேச்சு! - வைரலாகும் ஆடியோவால் பரபரப்பு

கீதாஜீவன் எம்.எல்.ஏ-வின் சர்ச்சைப் பேச்சு! - வைரலாகும் ஆடியோவால் பரபரப்பு
கீதாஜீவன் எம்.எல்.ஏ-வின் சர்ச்சைப் பேச்சு! - வைரலாகும் ஆடியோவால் பரபரப்பு

தூத்துக்குடி தி.மு.க எம்.எல்.ஏ கீதாஜீவன், சாதிய மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பான ஆடியோ வைரலாகப் பரவி வருவதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. 

தூத்துக்குடி சட்டமன்ற தி.மு.க எம்.எல்.ஏ கீதாஜீவன், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் தி.மு.க செயலாளரான மறைந்த என்.பெரியசாமியின் மகள். இவர், வடக்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில், தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க வேட்பாளராக மாநில மகளிரணிச் செயலாளரான கனிமொழி களம் இறங்கத் திட்டமிட்டு செயல்பட்டுவருகிறார். 

இந்த நிலையில், கீதாஜீவன் எம்.எல்.ஏ பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகப் பரவிவருகிறது. பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க கோரிக்கை வலுத்ததால், தமிழக அரசு சார்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் குழு அமைத்துள்ளது. இந்தக் குழு, அனைத்துத் தரப்பினரிடமும் விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்க உள்ளது. 

ஆனால், பட்டியல் இனத்தவர்களை வேளாளர் என்ற பெயரில் அழைக்க சைவ வேளாளர் சங்கத்தினரும் அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். வேளாளர் இனத்தின் அடையாளத்தை பட்டியல் இனத்தினருக்கு அளிக்கக் கூடாது என சைவ வேளாளர் பேரவை, தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் உள்ளிட்டோர் தமிழக அரசிடம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த சைவ வேளாளர் சங்க நிர்வாகி ஒருவர் கீதாஜீவனிடம் பேசும்போது, அவருக்கு ஆதரவாகவும் பட்டியல் இனத்தினருக்கு எதிராகவும் கீதாஜீவன் கருத்து தெரிவிக்கிறார். வேளாளர் என்ற பட்டம் பிற சாதியினருக்குக் கிடைத்துவிடாமல் இருக்க வேண்டுமானால், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டம், நகரம், கிராமங்களில் உள்ள ஏராளமான அமைப்புகளின்  பெயரில் மனுக்களை எழுதி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு அனுப்புமாறு கீதாஜீவன் ஐடியா கொடுக்கிறார். அத்துடன், இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவருக்கும் பல்வேறு அமைப்புகளின் பெயரில் மனு கொடுக்குமாறும் அறிவுரை வழங்குகிறார். 

அவரது இத்தகைய ஒருதலைபட்சமான பேச்சுக்கு, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. தேர்தல் சமயத்தில், அவரைப் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்களுக்குள் நுழைய விடமாட்டோம் என சில தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அறிவித்திருக்கிறார்கள். தி.மு.க-வில் இருக்கும் தலித் தொண்டர்களிடமும் இந்தப் பேச்சு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம், தி.மு.க சார்பாக தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட இருக்கும் கனிமொழிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, புதிய தமிழகம் கட்சியின் சார்பாக கீதாஜீவன் குறித்து தி.மு.க தலைமையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. கீதாஜீவனின் இந்த சாதியப் பாகுபாடு பேச்சுகுறித்த சர்ச்சையை தி.மு.க தலைமையும் ரசிக்கவில்லை. அதனால், கீதாஜீவனை கட்சித் தலைமை அழைத்து கடிந்துகொண்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக கீதாஜீவன் அளித்த விளக்கத்தில், ’’நான் யாருக்கும் ஆதரவாகவோ யாருக்கும் எதிராகவோ பேசவில்லை. ஒரு சிலர் என்னிடம் தொடர்ந்து இந்த விவகாரம் பற்றிப் பேசியதால் விளக்கம் அளித்தேன். ஆனால், என்னுடைய பேச்சை திட்டமிட்டே எடிட் செய்து வெளியிட்டுவிட்டார்கள். இதன் பின்னணியில் பாரதிய ஜனதா இருக்கிறது’’ எனத் தெரிவித்தார். தொடர்ந்து வைரலாகிவரும் இந்த ஆடியோ விவகாரம், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.