Published:Updated:

தண்ணீரை உறிஞ்சும் தனியார் நிறுவனம்... வற்றிவரும் ஆத்தூர் நீர்த்தேக்கம்!

தண்ணீரை உறிஞ்சும் தனியார் நிறுவனம்... வற்றிவரும் ஆத்தூர் நீர்த்தேக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தண்ணீரை உறிஞ்சும் தனியார் நிறுவனம்... வற்றிவரும் ஆத்தூர் நீர்த்தேக்கம்!

தவிக்கும் திண்டுக்கல் மக்கள்…

திண்டுக்கல் நகரின் குடிநீர் ஆதாரமாக இருப்பது ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம். திண்டுக்கல்லுக்குக் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் கிடைத்தாலும் மாவட்டத்தின் தாகம் தீர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது காமராஜர் நீர்த்தேக்கம். படிப்படியாக வற்றிவரும் இந்த நீர்த்தேக்கம் இன்னும் சில நாள்களில் முழுமையாக வறண்டுவிடும் என்கிறார்கள் ஆத்தூர் மக்கள். ‘நீர்த்தேக்கத்தின் அருகிலேயே தனியார் தண்ணீர் வணிக நிறுவனம் ஒன்று ராட்சத ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து தண்ணீரை உறிஞ்சி வியாபாரம் செய்துவருவதுதான், தண்ணீர் வற்றுவதற்கான காரணம்’ என்று புகார் கிளம்பியிருக்கிறது.

தண்ணீரை உறிஞ்சும் தனியார் நிறுவனம்... வற்றிவரும் ஆத்தூர் நீர்த்தேக்கம்!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் இருக்கிறது ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம். தாண்டிக்குடி, பன்றிமலை, கொடைக்கானல் ஆகிய மலைகளிலிருந்து வரும் தண்ணீர் 78 அடி உயரம்கொண்ட இந்த நீர்த்தேக்கத்தில் தேக்கிவைக்கப்படுகிறது. ஆத்தூர், சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை, சீவல்சரகு, வக்கம்பட்டி உள்ளிட்ட ஊர்களும் திண்டுக்கல் நகரமும் இந்த நீர்த்தேக்கத்தின் நீர் ஆதாரத்தை நம்பியே இருக்கின்றன. இந்த நிலையில்தான் மேற்கண்ட ஊர்களில் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிட்டது. இதற்குக் காரணம் நீர்த்தேக்கத்தின் அருகிலேயே அமைந்திருக்கும் தனியார் தண்ணீர் நிறுவனம் ராட்சத ஆழ்துளைக் கிணறு அமைத்து, தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை உறிஞ்சுவதுதான் என்கிறார்கள் மக்கள். குறிப்பாக, மக்களுக்கான குடிநீர் எடுக்கும் ஆழ்துளைக் கிணறுகளுக்கு அருகில், (அக்கரைப்பட்டி ஊராட்சியில் சடையாண்டி கோயில் அருகே) இந்த நிறுவனம் அமைந்துள்ளதால், ஊர் மக்களின் குடிநீர் தேவைகள் கேள்விக்குறியாகியிருக்கிறது.

இப்படி ஒரு நிலை ஏற்படும் என்பதால், இந்த நிறுவனம் தொடங்கும்போதே மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ-வான பாலபாரதி, நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று பல போராட்டங்களை நடத்தினார். ஆனாலும், அரசு கண்டுகொள்ள வில்லை. இதுதொடர்பாகப் பேசும் பொதுமக்கள், “ஆத்தூர் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் மைனஸ் ஒன்றிலிருந்து மைனஸ் ஐந்து வரை போயிடுச்சு. இதுக்கு முன்னாடி இப்படி ஆனதில்லை. அணையைச் சுத்தியும் போர்வெல் போட்டு அது மூலமா, குடிநீர் சப்ளை ஆகிட்டிருக்கு. சடை யாண்டி கோயில் போற வழியில பஞ்சாயத்து சார்பாக நாலஞ்சு போர்வெல் இருக்கு. அங்கிருந்துதான் அக்கரைப்பட்டி, மல்லையாபுரம் உட்பட பல கிராமங்களுக்குத் தண்ணி போகுது. தனியார் தண்ணி கம்பெனி இங்க ஆரம்பிச்சதிலருந்து அந்த போர்வெல்களில் தண்ணி வரத்து குறைஞ்சுப் போச்சு. சில போர்வெல்களில் தண்ணியே வர்றதில்லை. நீர்த்தேக்கத் தண்ணியும் வேகமா வத்திடுச்சு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தண்ணீரை உறிஞ்சும் தனியார் நிறுவனம்... வற்றிவரும் ஆத்தூர் நீர்த்தேக்கம்!

குடிநீர் போர்வெல்களை ஒட்டி, அந்த கம்பெனிக் காரங்க ராட்சத போர்வெல் போட்டிருக்காங்க. அதில தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணியை உறிஞ்சுறாங்க. கீழே குழாய் பதிச்சு நீர்த்தேக்கத்திலயிருந்தும் தண்ணி எடுக்குறாங்களோன்னு சந்தேகமாக இருக்கு. இங்க எடுக்குற தண்ணியை பாட்டில், கேன்ல அடைச்சு வெளியூர்களுக்குக் கொண்டு போறாங்க. திண்டுக்கல் மாவட்டமே தண்ணியில்லாம தவிச்சுப்போய் கிடக்கு. இந்த நேரத்துல தனியார் நிறுவனம் தண்ணி எடுக்கறதை நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கணும். தண்ணீர் சேமிப்புல அதிக அக்கறை காட்டுற திண்டுக்கல் கலெக்டர் இதிலேயும் தலையிடணும்” என்றார்கள்.

பாலபாரதியிடம் பேசினோம். “அந்தத் தண்ணீர் நிறுவனம் தொடங்கப்பட்டபோதே எதிர்ப்பு தெரிவித்தோம். சட்டமன்றத்திலும் பேசினேன். அப்போது பதில் அளித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், ‘அப்படி ஒரு நிறுவனம் அங்கு இல்லை. ஒருவேளை இருந்தால், உடனடியாக அப்புறப்படுத்திவிடுகிறோம்’ என்றார். அதன் பிறகு சிறிது காலம் அந்த நிறுவனம் செயல்படாமல் இருந் தது. பின் வழக்கம்போல இயங்கத் தொடங்கியது. மீண்டும் நான், கேள்வி எழுப்பினேன். அதற்கு, ‘அந்த நிறுவனம் அங்கு தண்ணீர் எடுக்கவில்லை. வெளியிலிருந்து தண்ணீரைக் கொண்டுவந்து சுத்திகரிப்பு செய்து, பாட்டிலில் அடைக்கிறார்கள்’ என்றார்கள். தண்ணீரைச் சுத்திகரிக்க எத்தனையோ இடங்கள் இருக்கும்போது நீர்த்தேக்கத்தை ஒட்டினாற்போன்று நிறுவனத்தை அமைக்கக் காரணம் என்ன?” என்றார் கோபமாக.

சம்பந்தப்பட்ட தண்ணீர் நிறுவனத்தின் அதிகாரி களிடம் பேசினால், “நாங்கள் முறையான அனுமதி பெற்றுத்தான், தண்ணீரைச் சுத்திகரிக்கிறோம். தொழில்முறை எதிரிகள்தான் இதுபோன்ற புகார்களைக் கிளப்பிவருகிறார்கள்” என்றார்கள்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினய்யிடம் பேசினோம். விவரங்களை முழுமையாகக் கேட்டுக்கொண்டவர், “உடனடியாக ஆர்.டி.ஓ தலைமையில் அதிகாரிகள் குழுவை அனுப்பி ஆய்வுசெய்யச் சொல்கிறேன். அந்த நிறுவனத்தின்மீது தவறு இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

- ஆர்.குமரேசன்