தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்தின் சொத்துகளை ஏலம்விடுவது தொடர்பாக வெளியான ஐ.ஓ.பி வங்கியின் அறிவிப்பு, அந்தக் கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏலம் தொடர்பாக வங்கி நிர்வாகம் முன்கூட்டியே கொடுத்த எச்சரிக்கையை அலட்சியம் செய்ததால், ஏற்பட்ட விளைவு இது என்கிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள்!
சென்னை, சாலிகிராமம் காவேரி தெரு மற்றும் வேதவள்ளித் தெருவில் உள்ள விஜயகாந்தின் வீடு, வணிக வளாகம், காஞ்சிபுரம் மாமண்டூரில் உள்ள ஸ்ரீஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி ஆகிய சொத்துகளை ஏல வரையறைக்குள் கொண்டுவந்திருக்கிறது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. விஜயகாந்த் செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.5,52,73,825. இதை வசூலிப்பதற்காக 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை ஏலம் அறிவிப்பு செய்துள்ளது வங்கி. `கேப்டன் திவாலாகிவிட்டார் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காக நடத்தப்படும் நாடகம் இது’ எனச் சர்ச்சைகள் கிளம்பின.

என்ன நடந்தது என விஜயகாந்த்தின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். ``ஸ்ரீ ஆண்டாள் அழகர் கல்லூரியின் விரிவாக்கத்துக்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஐந்து கோடி ரூபாய் கடன் வாங்கியது விஜயகாந்த் குடும்பம். கோயம்பேடு கட்சி அலுவலகம், திருமண மண்டபம், கேப்டன் ஃபார்ம்ஸ், ஸ்ரீஆண்டாள் அழகர் கல்வி அறக்கட்டளை ஆகியவற்றின் கணக்கு வழக்குகள் இந்த வங்கி மூலம்தான் பராமரிக்கப்படுகின்றன. வங்கிப் பரிவர்த்தனைகளைக் கவனித்துக்கொள்வதற்காக உதவியாளர் ஒருவர் நியமிக்கப் பட்டிருக்கிறார். கடந்த சில நாள்களுக்கு முன் வங்கிக்குச் சென்ற இவரிடம், `வாங்கிய கடனுக்கு வட்டியும் கட்டவில்லை. அசலை எப்போது செலுத்துவோம் என்றும் தெரிவிக்கவில்லை. கடனைச் செலுத்துவதற்கு உரிய தகவலைத் தெரிவிக்கவில்லை என்றால், ஏலம் குறித்து பப்ளிஷ் செய்துவிடுவோம்’ என வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்” என்று விவரித்தார்கள்.
இந்தத் தகவலை குடும்ப உறுப்பினர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார் அந்த உதவியாளர். ஆனால், குடும்பத்தினர் இதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘நீரவ் மோடி, விஜய் மல்லையாபோல ஓடியா போய் விட்டோம். அறிவிப்பு செய்தால் செய்து கொள்ளட்டும். கேப்டனின் நிலையை மக்களும் அறியட்டுமே’ என்று சொல்லியிருக்கிறார்கள். இதன் பிறகு, வங்கியிலிருந்து உதவியாளரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். அவரும், `உரிய பதில் வரவில்லை’ என்று தகவல் கூறியிருக்கி றார். இந்தத் தகவலைக் கேட்டு கடுப்பான வங்கி அதிகாரிகள், `சட்டபூர்வமாக நாம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற பேச்சு வந்துவிடக் கூடாது’ என்று தங்களுக்குள் ஆலோசித்துவிட்டு ஏல அறிவிப்பை வெளியிட்டு விட்டனர். சொல்லப்போனால், `விஜயகாந்துக்குக் கடன் இருக்கிறது’ என்ற அறிவிப்புதான் வெளியில்வரும் என்று கேப்டனின் குடும்பத்தினர் நினைத்தனர். ஒட்டுமொத்த சொத்துகளை வங்கி நிர்வாகம் ஏலத்துக்கு `அட்டாச்’ செய்யும் என்று எதிர்பார்க்கவில்லை. வங்கியிலிருந்து எச்சரிக்கை வந்தபோதே ஆடிட்டர், வழக்கறிஞர் ஆகியோரி டம் ஆலோசனைகளை நடத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்யத் தவறியதன் விளைவுதான் இது என்கிறார்கள்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தே.மு.தி.க நிர்வாகிகள் சிலர், ``2016 சட்டமன்றத் தேர்தலில், உளுந்தூர்பேட்டைத் தொகுதியில் போட்டியிட்டார் விஜயகாந்த். அப்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் 16-வது பக்கத்தில், தனக்கு எந்தக் கடனும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய மனைவி பிரேமலதா பெயரில் ஐ.ஓ.பி வங்கியில் கார் வாங்கிய கடனாக ரூ.29,49,234 இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 2016-ம் ஆண்டு வரையில் தனக்குக் கடன் இல்லை என்பவர், அதன் பிறகு வாங்கிய கடனுக்காக வங்கி நிர்வாகம் இரண்டே ஆண்டுகளில் நடவடிக்கை எடுக்குமா? ஏல அறிவிப்பின் பின்னணியில் ஏதோ நடந்திருக்கிறது” என்றார்கள்.
தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா, “எங்களுக்கு வேறு வருமானம் இல்லை. கஷ்டப் பட்டாவது கடனை அடைத்துக் கல்லூரியை மீட்போம். கடனைத் திருப்பிச் செலுத்த நேரம் கேட்டோம். ஒப்புக்கொள்ளவில்லை. நேர்மையாக நடந்துகொள்பவர்களுக்கு, கடவுள் சோதனையைக் கொடுப்பார். கைவிட மாட்டார்” என்றார்.
தே.மு.தி.க மாநில துணைச் செயலாளர் பார்த்தசாரதியிடம் கேட்டோம். ``ஆண்டாள் அழகர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை முடிந்ததும் வங்கிக்குச் செட்டில் செய்யலாம் என நினைத்திருந்தனர். வட்டி கட்டிவிட்டால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும்” என்றார்.
`ஏல அறிவிப்பை அடுத்து, இனி தே.மு.தி.க சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருக்கிறது. தொடர் தேர்தல் தோல்விகள், தவறான கூட்டணிக் கணக்குகள் எனத் தேய்பிறையை நோக்கிச் செல்கிறது தே.மு.தி.க’ என்ற குரல்களும் எழத் தொடங்கியிருக்கின்றன.
- ஆ.விஜயானந்த்
படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு