Published:Updated:

தூத்துக்குடி போலீஸின் திட்டமிட்ட கொலை! -அதிர்ச்சியளிக்கும் 13 பேரின் பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்

தூத்துக்குடி போலீஸின் திட்டமிட்ட கொலை! -அதிர்ச்சியளிக்கும் 13 பேரின் பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்
தூத்துக்குடி போலீஸின் திட்டமிட்ட கொலை! -அதிர்ச்சியளிக்கும் 13 பேரின் பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100-வது நாள் போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பிரேதப் பரிசோதனை முறையாக நடைபெறவில்லை என்றும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாக  சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் புகழேந்தி கூறியுள்ளார்.


இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மருத்துவர் புகழேந்தி, ``தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 9 பேரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை எங்களுக்குக் கிடைத்தது. குற்றம் நடந்த இடம் உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் என சட்டத்தில் இருந்தும் அது கடைப்பிடிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் பல விதிமுறை மீறல்களும் நடந்துள்ளன. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின், கந்தையா, தமிழரசன், செல்வசேகர் ஆகியோருக்கு நடந்த பிரேதப் பரிசோதனை ஆய்வு மற்றும் அறிக்கைகள் அவசர கோலத்திலும் முறையாகவும் நடத்தப்படவில்லை. இறந்தவர்கள் அணிந்த உடை, குண்டு பாய்ந்த இடத்தை ஒட்டிய தோல் மாதிரிகள் பாதுகாக்கப்பட வேண்டும் (police standing order 151) என இருந்தும் அது கடைப்பிடிக்கப்படவில்லை.

கந்தையாவுக்கு உடற்கூறு ஆய்வு செய்த தூத்துக்குடி அரசு மருத்துவர்கள் சுடலைமுத்து, சோமசுந்தரம் ஆகியோர் அவற்றைப் பாதுகாக்க  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், கிளாஸ்டன் என்பவருக்கு ஜூன் 6, 2018 அன்று உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டபோது அந்த இரண்டு மருத்துவர்களும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவர் வினோத் அசோக் சவுத்திரியும் கொடுத்த அறிக்கையில் அவை இரண்டும் பாதுகாக்கப்பட்டுள்ளது என இருக்கிறது. இதன்மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவர்களுக்கு அதைப்பற்றித் தெரியவில்லை என்றோ அல்லது தெரிந்தும் அரசின் அழுத்தம் காரணமாக அது பதிவு செய்யப்படவில்லை என்றோ நாம் முடிவுக்கு வர முடியும்.

ஒருவரை அருகிலிருந்து சுடும்போது அப்ரேசன் காலர் (abrasion collar) கிரீஸ் காலர் ( grease collar) என்பவை குண்டு நுழையும் இடத்தில் மட்டும் இருக்கும் என்பதும் ஆடை அணிந்திருந்தால் கிரீஸ் காலர் இல்லாமல் போகலாம் என்பதும் தடயவியல் உண்மை. ஸ்னோலின் உடற்கூறு ஆய்வறிக்கையில் முதல் பக்கத்தில் மே 24,2018 என்றும் இரண்டாம் பக்கத்தில் மே 25, 2018 என்றும் முரண்பட்ட தகவல் பதிவாகியுள்ளது. இதை ஏன் ஆய்வின்போது உடனிருந்த நீதிபதி கவனித்து கேள்வி எழுப்பவில்லை.

மேலும் ஆடை, குண்டு பாய்ந்த இடத்தை ஒட்டியுள்ள தோல்மாதிரி இவை பாதுகாக்கப்படவில்லை என்பது அறிக்கையில் இருந்தும் மேற்பார்வை செய்த நீதிபதிகள் அதை கவனித்து கேள்வி எழுப்பவில்லை. உடற்கூறாய்வு முறையாக நடத்தப்பட வேண்டும் என போராடிய மக்களின் கோரிக்கை சரியே. உடல் கூறாய்வும் பிரேதப் பரிசோதனை அறையில் நடத்தப்படாமல் பிணவறையில் நடத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடலை பிரேதப் பரிசோதனை அறைக்கு எடுத்துச் செல்லும்போது சட்டம் - ஒழுங்கு பிரச்னையைத் தவிர்க்க (To avoid law and order problem) என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மக்களை வன்முறையாளர்களாகச் சித்திரிக்கும் அரசின் முயற்சிக்குத் துணை போகும் செயல். இரண்டு அறைகளுக்கும் இடையே அதிக தூரம் இல்லை. இரண்டு வாரங்கள் கழித்து ஜூன் 6, 2018 அன்று நடந்த உடற்கூறாய்வு சட்டம் ஒழுங்கு பிரச்னை என்ற காரணத்தை மேற்கோள் காட்டி பிணவறையில் நடத்தப்பட்டது எப்படி சரியானதாகும். பிணவறையில் சிசிடிவி கேமராக்கள் இருப்பதில்லை. எனவே, காணொலிப் பதிவில் நேரம் குறிப்பிடப்படாமல் போவதால் அதை மாற்றம் செய்துவிட்டு மாற்றம் செய்யவில்லை என்று கூறலாம். கோணங்களை மாற்ற முடியும் என்பதாலும், விட்டுவிட்டு பதிவு செய்ய முடியும் என்பதாலும் முக்கிய விடயங்கள் விடுபட வாய்ப்புள்ளது.

உதாரணமாக உடம்பில் குண்டு சிக்கியிருந்த நிலையில், அதை எடுத்துவிட்டு குண்டு இல்லை என்று பதிவு செய்ய முடியும். ஆக காணொலிப்பதிவுகள் இருப்பதாலேயே உண்மை வெளிச்சத்துக்கு வரும் என சொல்ல முடியாது. ஆரம்ப காலத்தில் பாதிக்கப்பட்டவர் சார்பில் மருத்துவர் ஒருவர் உள்ளிருப்பதை அனுமதியளித்த நீதிமன்றம், தற்போது அதை நிராகரித்து வருவது கவலையளிக்கிறது. பிணவறையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது என்பது மர்மமாகவே உள்ளது. உண்மையை மறைக்க இவ்வாறு செய்தனரா என்ற சந்தேகம் எழுகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்பது இறந்தவர்களுக்கு அருகாமையில் இருந்து நடத்தப்பட்டது. அப்ரேசன் காலர், கிரீஸ் காலர் பெரும்பாலோருக்கு இருப்பது இதை உறுதி செய்கிறது. மேலும், குண்டு துளைத்து வெளிவரும் காயங்கள் (perforating injury) 9-ல் 8 பேருக்கு இருக்கிறது ஜெயராமன் ஒருவருக்கு மட்டுமே குண்டு இடது முன்பக்க மூளையில் தங்கி ( penetrating injury) பிரேதப் பரிசோதனையின்போது அகற்றப்பட்டுள்ளது. சட்டபடி முன்னெச்சரிக்கை விடப்படாமலும், முன்கூட்டியே திட்டமிட்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என்ற
குற்றச்சாட்டு முக்கிய கேள்வியாக உள்ளது 

இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரில் 12 பேருக்கு குண்டு தலை, நெஞ்சுப் பகுதியில் பாய்ந்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் (Reuters) நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 8 பேர் பின்புறமிருந்து சுடப்பட்டுள்ளனர். அதாவது உயிரை தற்காத்துக்கொள்ள தப்பி ஓடும்போது சுடப்பட்டு இறந்துள்ளனர். இறந்தவர்கள் எல்லாம் மண்ணின் மைந்தர்களே, சமூக விரோதிகள் அல்ல. அவர்கள் கையில் பயங்கர ஆயுதங்கள் எதுவும் இல்லை. காவல்துறையில் ஒருவர்கூட இறக்கவில்லை. தப்பி ஓடும் மக்களைப் பின்புறமாக சுடுவது காவல்துறையின் நோக்கமாக இருக்கும். கூட்டத்தைக் கலைக்கும் திட்டத்துக்குப் பதில் உயிர் கொலைக்காகவே இது நடந்து இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. 

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 9 பேரில் 3 பேருக்கு (செல்வசேகர், கந்தையா, கிளாஸ்டன்) இடது நுரையீரல் சுருங்கி (lung collape) செயலிழந்துள்ளது. ஒருவருக்கு கூட வலதுபுற நுரையீரல் பாதிப்பு இல்லை. இடதுபுறத்தில்தான் முக்கிய உறுப்பான இதயம் உள்ளது. ஆக இடதுபுறத்தில் தாக்கினால்தான் உயிரிழப்பு ஏற்படுத்த முடியும் என்ற நோக்கத்தில்தான் காவல்துறை திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.

மொத்தத்தில் சட்டரீதியான நோக்கமான கூட்டம் கலைந்து செல்ல சட்டத்தைக் காக்க வேண்டிய காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் (CrPC 129-ன்படி தேவையான அளவு பலம் மட்டுமே காவல்துறை பயன்படுத்த வேண்டும் என இருக்கையில்) மீறி செயல்பட்டது தெளிவாக உள்ளது. இடுப்புக்கு கீழேதான் சுட வேண்டும் எனும் வழிகாட்டுதல் மீறப்பட்டுள்ளது இதை உறுதிபடுத்துகிறது. 

சட்ட விதிகளின்படி குற்றம் நடந்த இடம் முறையாக பாதுகாக்கப்பட வேண்டும் அப்போதுதான் பிரேதப் பரிசோதனை அறிக்கையை அதனோடு ஒப்பிட்டு உண்மையை சரிபார்த்துக்கொள்ள முடியும். கந்தையா என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் உள்ளே இடதுபக்க மார்பில் பின் பக்கம் குண்டு துளைத்து முன்பக்கம் வெளிவந்துள்ளது என்பது அறிக்கையில் உள்ளது. ஆனால், காட்சி சம்பவங்களைப் பார்க்கும்போது ஒரு வேளை தவறாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. பின்பக்க மார்பில் குண்டு துளைத்தால் அவர் குப்புற விழுந்திருக்க வேண்டும் ஆனால், அவரோ இரண்டு கைகளையும் தூக்கி மல்லாக்கப்படுத்துக்கிடக்கிறார் என்பதை காணொலி மூலம் தெளிவாகக் காணமுடிகிறது. அவர் படுத்திருந்த கோணம், தலை-கால் திசை இவற்றைப் பார்க்கும்போது அவர் முன் பக்க மார்பில் குண்டு துளைத்துச் சென்றதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அவரது வலதுகை மணிக்கட்டின் பின்புறம் குண்டு துளைத்து ரேடியஸ் ( radius) எலும்பின் கீழ்பகுதியில் எலும்பில் முறிவு ஏற்படுத்தி மறுபுறம் குண்டு துளைத்து வெளிவந்துள்ளது எனும் தகவல் உள்ளது. 

குண்டு பாய்ந்து சென்ற இடங்களில் ரத்தம் நிறைந்திருந்தது என்ற செய்தியும் உள்ளது. ஆனால், கணொலி காட்சியில் ரத்தம் அந்தப் பகுதியில் வந்ததற்கான பதிவுகள் இல்லை. மாறாக வலது கைமுட்டி அருகில் ரத்தக் கசிவு உள்ளது. ரத்தம் ஏன் வலது கை மணிகட்டுக்கு அருகில் இல்லை என்பதை அறிவியல் ரீதியாக விளக்க வேண்டிய தேவையுள்ளது. குற்றம் நடந்த இடம் முறையாக, வரைபடம், புகைப்படம், காணொலிக் காட்சிகள் மூலம் பதிவு செய்யப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தால்தான் இந்த ஒப்பீடு சாத்தியம்.

தூத்துக்குடி வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றிய பின் அதன் கூடுதல் கண்காணிப்பாளர் மாரிராஜ், மாவட்ட துணை கண்காணிப்பாளர் அனில் குமார் ஆகியோர் கொடுத்த பத்திரிகை செய்தியில் தடயவியல்துறை வெடிமருந்து துறை வல்லுநர்களுடன் இணைந்து முறையான ஆய்வை மேற்கொண்டதாகப் பதிவாகியுள்ளது. காவல்துறையால் மே 22 அன்று மூன்று எஸ்.எல்.ஆர் வகை துப்பாக்கியிலிருந்து 30 குண்டுகளும் 0.303 ரைஃபிள்ஸ் வகை துப்பாக்கிகள் மூலமாக 4 ரவுண்டுகளும் 410 வகை துப்பாக்கியிலிருந்து 12 ரவுண்டுகள் பயன்படுத்தபட்டன என்ற நிலையில் அவற்றை சுடப்பட்ட இடத்திலும் தருவைகுளம் குப்பைக்கிடங்கிலும் பிற குப்பை கொட்டும் இடத்திலும் தேடியுள்ளனர். 

காவல்துறை துப்பாக்கிச்சூடு நடந்த உடனேயே பிற வல்லுநர்கள் உதவியுடன் சம்பவ இடத்துக்குச் சென்று தடயங்களை சேகரித்து முறையாகப் பாதுகாக்கவில்லை. குற்றம் நடந்த இடத்தில் உள்ள தடயங்களை பாதுகாத்து அவற்றை குற்றம் நடந்த நாள் அன்றோ அதை அடுத்து வந்த நாள்களிலோ தடயங்களைச் சேகரிக்காமல் அவை அனைத்தையும் அப்புறப்படுத்த அனுமதித்த பின்னர் அந்தத் தடய பொருள்களை ஒரு மாதம் கழித்து நகர குப்பைக் கிடங்கிளும், பிற இடங்களிலும் தேடுவது என்பது தடயவியல் துறையில் இல்லாத ஒன்று.


செல்வ சேகர் என்பவர் காவல் துறையால் அடித்தே கொலை செய்யப்பட்டிருக்கின்றார். அவரின் இறப்புக்கு இடது நுரையீரலில் 700 மி.லி திரவ ரத்தமும் 1,400 கிராம் உறைந்த ரத்தமும் இருந்தது காரணமாக உள்ளது என்று அறிக்கையில் உள்ளது. இது காவல் துறையின் கண்மூடித்தனமான தாக்குதலை குறைத்துக்காட்டுவதாக உள்ளது. ஏனெனில் அவரது வலது கால் எலும்பான டிபியாவில் (tibia) 12 செ.மி நீளத்துக்கு பெரிய எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது அறிக்கையில் பதிவாகி உள்ளது. அந்த வலது கால் இடது காலைவிட நிச்சயம் அதிகமாக வீங்கியிருக்கும். மேலும், அந்த இடத்தில் ரத்தக் கசிவும் அதிகமாக இருந்திருக்கும். ஆனால், அது குறித்து பிரேதப் பரிசோதனை அறிக்கையில் எந்தத் தகவலும் இல்லை மேற்கூறிய காரணங்களும் இறப்புக்குக் காரணமாக இருந்து இருக்கலாம். மேலும், நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவரது இதயத்தைச் சுற்றி (pericardial cavity) 25 மி.லி ரத்தம் இருந்தது அறிக்கையில் உள்ளது. அதுவும் இதய செயல்பாட்டை பாதித்து அவரது இறப்புக்குக் காரணமாக இருந்திருக்கலாம். அவரது இடது முதல் விலா எலும்பில் காவல்துறை அடித்ததால் முறிவு ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் இறப்புக்கான காரணமாக இருந்திருக்கலாம் என இருந்தும் இடது மார்பகம் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட ரத்தக் கசிவு மட்டுமே பதிவு செய்யப்பட்டு மீதி காரணங்கள் மறைக்கப்பட்டதாகத் தெரிகின்றது.

ஜான்சி என்ற பெண்மணியை அருகாமையில் இருந்து சுட்டதால் தலையில் உள்ள மூளையைப் பாதுகாக்கும் பல எலும்புகளில் முறிவு ஏற்பட்டதுடன் மூளையே காணாமல் போயுள்ளது என்ற தகவல் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உள்ளது. உரிமைக்காக ஆயுதமின்றி அறவழியில் போராடிய அவருக்கு காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டின் மூலம் நேர்ந்த கதி எவ்வளவு கொடூரம் என்பதை நினைத்துப் பார்க்கவே வேதனையாக உள்ளது. அறிவியலும் சட்ட விதிமுறைகளும் மட்டுமே பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வழி நடத்த வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிச்சத்துக்கு வந்து நீதி நிலைநாட்டப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு