Published:Updated:

நெல்லையில் கள்ள ஓட்டு: `49 பி’ -ஐ பயன்படுத்தி `சேலஞ்ச்’ வாக்களித்த வாக்காளர்கள்!

நெல்லையில் கள்ள ஓட்டு: `49 பி’ -ஐ பயன்படுத்தி `சேலஞ்ச்’ வாக்களித்த வாக்காளர்கள்!
நெல்லையில் கள்ள ஓட்டு: `49 பி’ -ஐ பயன்படுத்தி `சேலஞ்ச்’ வாக்களித்த வாக்காளர்கள்!

நெல்லை மாவட்டத்தில் இரு வாக்காளர்களின் வாக்குகளை கள்ள ஓட்டு பதிவு செய்துவிட்டதால், அந்த வாக்காளர்கள் அதிகாரிகளிடம் போராடி 49 பி படிவத்தைப் பெற்று சேலஞ்ச் வாக்கு செலுத்தினார்கள். 

நெல்லை பேட்டையில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 178-வது பூத் செயல்பட்டது. இந்த பூத்தில் வாக்களிப்பதற்காக ஆயிஷா சித்திகா என்ற பெண் தனது கணவருடன் வந்திருந்தார். அவரது கணவர் ஏற்கெனவே வாக்களித்த நிலையில், ஆயிஷா சித்திகா பூத்தின் உள்ளே சென்றார். 

அவரது அடையாள அட்டையைக் கொடுத்து வாக்களிக்க முயன்றபோது அவரது வாக்கை யாரோ கள்ள ஓட்டு போட்டுச் சென்றதை அறிந்தார். அவரது வாக்கு ஏற்கெனவே பதிவாகி இருப்பதாக அதிகாரி தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்தார். தான் வாக்களிக்காத நிலையில், தனது வாக்கு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டதாக அதிகாரி சொன்னதை ஏற்க மறுத்த அவர், தன்னை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார். 

வாக்களிக்காமல் பூத்தை விட்டு வெளியே செல்ல மறுத்து அவர் போராடியதால் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் சமரசம் செய்ய முயன்றும் அவர் ஏற்க மறுத்ததால், சேலஞ்ச் வாக்களிப்பதற்காக விண்ணப்பத்தை ரூ.2 செலுத்திப் பெற்று அதை நிரப்பிக் கொடுத்து சேலஞ்ச் வாக்களித்த பின்னரே வீடு திரும்பினார்.

இதேபோல, நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள 13-வது வார்டுக்கு உட்பட்ட பூத்தில் வாக்களிக்கச் சென்ற மணிகண்டன் என்பவரது வாக்கு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனக்கு 49 பி படிவம் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால் அவருக்கு விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டதால் சேலஞ்ச் வாக்களித்தார். 

தேர்தலில் கள்ள வாக்கு செலுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், நெல்லை மாவட்டத்தில் இரு வாக்குச் சாவடிகளில் கள்ள வாக்குகள் பதிவு செய்யப்பட்ட சம்பவம் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்து விட்டது.