Published:Updated:

2ஜி ஊழல்: ரத்தன் டாடா, நீரா ராடியாவை விசாரித்தது பிஏசி!

புதுடெல்லி, ஏப்.4,2011

2ஜி ஊழல்: ரத்தன் டாடா, நீரா ராடியாவை விசாரித்தது பிஏசி!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக தொழிலதிபர் ரத்தன் டாடா, அரசியல் தரகர் நீரா ராடியா ஆகியோரிடம் நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்குக் குழு (பிஏசி) திங்கட்கிழமை விசாரணை நடத்தியது. ##~~##

டெல்லியில் பிஏசி முன்பு நீரா ராடியா காலை 11 மணி அளவிலும், ரத்தன் டாடா பிற்பகல் 3 மணி அளவிலும் ஆஜராகி, பொதுக்கணக்குக்குழு கேட்ட கேள்விகளுக்கு தங்கள் தரப்பு பதிலை தெரிவித்தனர்.

ஊடகங்கள் வாயிலாக வெளியான உரையாடல் டேப்புகளில் சில உண்மையானவை என்றும், அவற்றில் சில போலியானவை என்று நீரா ராடியா கூறியதாக பிஏசி தெரிவித்துள்ளது.

மேலும், பல கேள்விகளுக்கு 'எனக்குத் தெரியாது'; 'எனக்கு நியாபகம் இல்லை' என்று நீரா ராடியா கூறியதாகவும் பிஏசி குழு கூறியுள்ளது.

நீரா ராடியா உடனான உரையாடல் டேப்புகள், பத்திரிகையாளர்கள் சிலரை அணுகியது தொடர்பாக ரத்தன் டாடாவிடம் கேள்விகளை பிஏசி அடுக்கியதாக தெரிகிறது.

முன்னதாக, அரசியல் தலைவர்கள், தொழில் துறை பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்களுடன் நீரா ராடியா நடத்திய உரையாடல்கள் ரகசியமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த உரையாடல்களில் சில பத்திரிகைகள் மூலமாக வெளி உலகுக்கும் தெரியவந்தது. அந்த பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள்தான் இந்த விசாரணைக்கு முக்கிய மூலமாக அமைந்துள்ளது.

இரண்டாவது முறையாக மத்தியில் அமைந்துள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இவரிவருக்கு, குறிப்பிட்ட இலாகாக்கள் வழங்கப்படவேண்டும் என நீரா ராடியா நிர்பந்தித்தார் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பற்றி பொதுக் கணக்குக் குழு தலைவரும் பிஜேபி மூத்த தலைவருமான முரளி மனோகர் ஜோஷி விசாரணை நடத்தியுள்ளதாக தெரிகிறது.

திமுகவின் ஆ.ராசாவுக்கு தொலைத்தொடர்புத்துறை கிடைக்க ராடியா முயற்சி மேற்கொண்டது அவரது உரையாடல் பதிவுகளை ஆராய்ந்த போது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த செவ்வாய்க்கிழமை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் அனில் அம்பானி, எடிசலாட் டிபி டெலிகாம் தலைமை நிர்வாகி அடுல் டாம், எஸ்டெல் தலைமை நிர்வாகி ஷாமிஸ் தாஸ் உள்ளிட்டவர்களிடம் பொதுக்கணக்குக்குழு விசாரணை நடத்தியது.

அதேவேளையில், காங்கிரஸ் தலைவர் பி.சி.சாக்கோ தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு புகார் தொடர்பாக விசாரித்துவருகிறது.

இந்த குழுவானது 2008ல் நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு புகார் தவிர, 1998ம் ஆண்டுக்குப் பின் தொலைத்தொடர்புத்துறையில் நடந்த ஒதுக்கீடுகள் உள்ளிட்டவை குறித்தும் விசாரிக்கும்.

நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டதுமே, அதன் தலைவர் சாக்கோவுக்கும், பொதுக்கணக்குக் குழு தலைவர் ஜோஷிக்கும் இடையே, விசாரணை வரம்பு தொடர்பாக உள்ளூர மோதல் தொடங்கியதும் கவனத்துக்குரியது.