உலகம் முழுவதும் நேற்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. மத்திய அரசின் சார்பிலும் பா.ஜ.க-வின் சார்பிலும் இந்தியாவின் பல இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் பல்வேறு அமைச்சர்கள், பா.ஜ.க நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் என லட்சக் கணக்கானவர்கள் கலந்துகொண்டு யோகா செய்தனர்.

இதே போன்று உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரிலும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் உ.பி-யின் சிறுபான்மையினர் நலவாழ்வுத்துறை அமைச்சர் லக்ஷ்மி நாராயணும் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு அரசு அதிகாரி ஒருவர் ஷூ மாட்டிவிட்டு அதில் உள்ள லேஷையும் கட்டிவிட்டார். இந்த வீடியோ நேற்று முதல் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உ.பி அமைச்சருக்குப் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு லக்ஷ்மி நாராயண், “ ராமன் வனவாசம் சென்றபோது அவரின் மர காலணியை வைத்து 14 ஆண்டுகள் ஆட்சி செய்த ஊர் இது. இந்தச் சம்பவத்தைத் தவறாகப் பார்க்காமல் ஒரு சகோதரர் எனக்கு உதவி செய்ததாகப் பாருங்கள். அவரின் செயல் பாராட்டப்பட வேண்டியது” எனப் பதிலளித்துள்ளார்.
லக்ஷ்மி நாராயண் சர்ச்சைகளுக்கு மிகவும் பெயர் பெற்றவர். கடந்த வருடம் ஒரு திருவிழாவில் பங்கேற்ற இவர், ‘பகவான் ராமர்தான் இந்தியாவை வல்லரசாக்க உதவுவார்’ என்றும் அதற்கு முன்னால் ‘கடவுள் ஹனுமனிடம் ஜெட் இருந்ததாகவும் கூறி சர்ச்சையில் சிக்கினார்.