Published:Updated:

2ஜி வழக்குப் பதிவுக்கு பிறகே கலைஞர் டிவி ரூ.200 கோடியை திருப்பித் தந்துள்ளது: சிபிஐ

Vikatan Correspondent

புதுடெல்லி, மே 2,2011

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தீவிரம் காட்டியதை அடுத்தே, தாங்கள் பெற்ற பணத்தை கலைஞர் டி.வி. திருப்பி அளித்துள்ளது என்று சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. ##~~##

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்ட பின்னரே கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி அளிக்கப்பட்டது குறித்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிபிஐ அண்மையில் தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையில் இதைத் தெரிவித்துள்ளது.

ஸ்வான் டெலிகாம், டி.பி. ரியாலிட்டி நிறுவனங்கள் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியுள்ளது. டிசம்பர் 23,2008-ஆகஸ்ட் 7,2009-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த பணம் கைமாறியுள்ளது.

இந்தத் தொகை கலைஞர் டி.வி.க்கு அளிக்கப்பட்டது குறித்து அப்போது ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகவில்லை.

இந்நிலையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து அக்டோபர் 21,2009-ல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்தே கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியது தொடர்பாக முறைப்படி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனவரி 27,2010-ல் தான் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவை கைது செய்து விசாரிக்கத் தொடங்கி, இந்த வழக்கில் தீவிரம் காட்டியதை அடுத்தே பணத்தை கலைஞர் டி.வி. திருப்பி அளித்துள்ளது என்று சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் கணக்காளர் சதீஷ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மொஹமத் மொரானி ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

அவர்கள் அளித்த தகவல் மூலமே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு ரூ.200 கோடிக்கான ஒப்பந்தத்தை கலைஞர் டி.வி. மேற்கொண்டது அம்பலமாகியுள்ளது.

ஆனால், இந்தப் பணத்தை கடனாகப் பெற்றதாகவும், அதை வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் கலைஞர் டி.வி. தரப்பில் கூறப்படுகிறது.

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி எம்.பி. ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சிபிஐ தாக்கல் செய்துள்ள துணைக் குற்றப்பத்திரிகையில், 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை 'கூட்டுச் சதியாளர்' என்று குற்றம்சுமத்தியுள்ளது.

மேலும், மே 6-ல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.