Election bannerElection banner
Published:Updated:

அப்டேட்ஸ்: பாபா ராம்தேவ் போராட்டம்..

அப்டேட்ஸ்: பாபா ராம்தேவ் போராட்டம்..

அப்டேட்ஸ்: பாபா ராம்தேவ் போராட்டம்..

பிரதமரையும் மத்திய அரசையும் தாம் மன்னித்துவிட்டதாக கூறியுள்ள பாபா ராம்தேவ், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறினார்.

ஹரித்வாரில் உண்ணாவிரதம் தொடரும் அவர், பிரதமரின் 'அரசியல் பாவத்தை' வரலாறு மன்னிக்காது என்றும் அவர் சாடினார்.

*

ராம்தேவ் வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணா ஹஸாரே டெல்லியில் நாளை மேற்கொள்ளவிருந்த ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.

*

டெல்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், "இது துரதிஷ்டவசமே என்றாலும், வேறு மாற்று வழி இல்லை," என்றார்.

*

ஹரித்வாரில் உண்ணாவிரதத்தை தொடர்ந்துள்ள பாபா ராம்தேவ், சத்யாகிரகத்தின் விளைவுகளை மத்திய அரசால் தாங்க முடியாது என்று கூறினார்.

*
ராம்தேவ் போராட்டம் மூலம் பிஜேபி அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறது என்று குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ், சத்யாகிரகம் செய்பவர்கள் பெண்கள் உடையில் ஒளிந்து கொண்டு ஓட மாட்டார்கள் என்று ராம்தேவை சாடியுள்ளது.

*
லோக்பால் மசோதா வரைவுக் கூட்டுக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தை பொதுமக்கள் சார்பிலான அண்ணா ஹஸாரே குழு திங்கட்கிழமை புறக்கணித்தது.

மேலும், ராம்தேவ் மீதான அரசின் நடவடிக்கையை கண்டித்து டெல்லியில் அண்ணா ஹஸாரே தலைமையில் புதன்கிழமை ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அக்குழு அறிவித்துள்ளது.

*
ராமலீலா நள்ளிரவு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

*
காங்கிரஸ் பொதுச் செயலரும், செய்தித் தொடர்பாளருமான ஜனார்த்தன் த்விவேதி மீது நபர் ஒருவர் செருப்பு வீச முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராம்தேவுக்கு எதிராக நான் பேசப்போகிறேன் என்பது ஏற்கெனவே தெரிந்திருந்ததால், இந்த தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்று ஜனார்த்தன் தெரிவித்தார்.

*
ராம்தேவை 'ஃபிராடு' என கடுமையாக விமர்சித்து, இரு தரப்பினரிடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய் சிங் பேசியதாக தொடரப்பட்ட மனுவை முஸாபார்பூர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

இதனிடையே, திக்விஜய் சிங்கின் வீட்டில் திடீரென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

*
ராம்தேவுக்கு எதிரான அரசின் நடவடிக்கைக்கு பூரி சங்கராச்சாரியார் ஆதோக்ஷானந்தா ஆதரவு தெரிவித்தார். அனைத்து பிரச்னைகளுக்கும் ராம்தேவ்தான் காரணம் என்றும், அவர் காவி அங்கி அணிவதை கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

*
ராம்தேவ் போன்ற ஆன்மிகத் தலைவர்கள், அரசியலில் இருந்து விவகி இருக்க வேண்டும் என்று மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கருத்து தெரிவித்தார்.

*

ராம்தேவ்: டெல்லியில் நான் நுழைவதை அரசால் தடுக்க முடியாது. அரசுக்கு மட்டுமே டெல்லி சொந்தமானது அல்ல, அனைத்து குடிமக்களுக்கும் சொந்தமானது.

*

ஜனாதிபதி பிரதிபா பாட்டீலைச் சந்தித்த பிஜேபி தலைவர்கள், உடனடியாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, ஊழல் மற்றும் கறுப்பு பணம் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அத்வானி, "அமெரிக்க அதிபருக்கு அளிக்கப்பட்டதை விட ராம்தேவுக்கு மிகச் சிறந்த வரவேற்பை தந்தது மத்திய அரசு. ஆனால், அவரது உண்ணாவிரதப் போராட்டத்தை அகற்றியது முரண்பாடானது," என்றார்.

*

போலீஸார் தடியடி நடத்தவில்லை என்கின்றனர். ஊழலுக்கு எதிராக ஒன்றிணைவது சட்டத்துக்கு புறம்பானது என்றால், காந்திஜியின் சத்யாகிரகமும் தவறானதா? : ராம்தேவ் கேள்வி

*
ராம்தேவ் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியை சந்திக்கவுள்ள பிஜேபி தலைவர்கள், உடனடியாக சிறப்பு நாடாளுமன்ற தொடரை கூட்ட வேண்டும் என வலியுறுத்தவுள்ளனர்.

*

டெல்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து ராம்தேவ் வெளியேற்றப்பட்டது, போலீஸார் நடத்திய தடியடி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை உத்தரவிட்டது. (ராம்தேவ் வெளியேற்றம்: மத்திய அரசுக்கு SC நோட்டீஸ்)

*
டெல்லியில் இருந்து வெளியேற்றப்பட்ட யோகா குரு ராம்தேவ், ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்தை உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் திங்கட்கிழமை காலை தொடர்ந்தார். (ஹரித்வாரில் உண்ணாவிரதம் தொடர்கிறார் ராம்தேவ்!)

*
ராம்தேவ் மற்றும் அவரது சீடர்கள், ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து 24 மணி நேர நாடு தழுவிய தர்ணாவை பிஜேபி ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியுள்ளது. ##~~##

மேலும், நாடு முழுவதும் இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என கட்சியின் மாநிலத் தலைவர்களுக்கு கட்சியின் தேசியத் தலைவர் நிதின் கட்காரி உத்தரவிட்டார்.

*
ராம்தேவ் உண்ணாவிரதத்தில் போலீஸார் தடியடி நடத்தியதைக் கண்டித்து, ஜூன் 8-ல் நாடு தழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த மூத்த காந்தியவாதி அண்ணா ஹசாரே அழைப்பு விடுத்தார்.

*
டெல்லிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வர முயற்சி செய்தார் ராம்தேவ். அவரது காரை உத்தரப் பிரதேச போலீஸார் தடுத்து நிறுத்தி ஹரித்வாருக்கு திருப்பியனுப்பினர். டெல்லியில் பாபா ராம் தேவ் நுழைய தடை உள்ளதால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாக முஸாஃபர்நகர் போலீஸார் கூறினர்.

*
ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டத்தை தடியடி நடத்தி கலைத்ததை அடுத்து, நாடு முழுவதும் நிலவி வரும் கொந்தளிப்பான சூழ்நிலை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் அதன் தலைவர் சோனியா காந்தி ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஆலோசனை நடத்தினார்.

*
யோகா குரு பாபா ராம் தேவின் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கலைக்க எடுக்கப்பட்ட போலீஸ் நடவடிக்கை சரியானதே என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. அத்துடன், இனிமேல் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் திட்டவட்டமாக அறிவித்தது.

*
உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது இந்திய வரலாற்றில் மிகமோசமான நாள் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கருத்துத் தெரிவித்தார்.

*
அமைதியாக போராடிய பெண்கள், முதியவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதற்காகவும், தடியடி நடத்தியதற்காக பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பிஜேபி வலியுறுத்தியது.

*

ராம்லீலா மைதானத்தில் போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதும், தடியடி நடத்தியதும் கொடூரமான நடவடிக்கை என்று ஆர்.எஸ்.எஸ். மற்றும் சிவசேனை கடும் கண்டனம் தெரிவித்தன.


*
ஊழலுக்கு எதிரான தனது சத்யாகிரகப் போராட்டத்தை ஹரித்வாரில் தொடரப் போவதாக யோகா குரு பாபா ராம்தேவ் அறிவித்தார்.

*
ராமதேவ் உண்ணாவிரத நிகழ்வை அரசு கையாண்ட விதம் மிக மோசமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர் டி.ராஜா குற்றம்சாட்டினார்.

*
ராம்தேவின் உண்ணாவிரதப் பந்தலில் போலீஸார் தடியடி நடத்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது.

*
பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று அண்ணா ஹசாரே கடுமையான கண்டனம் தெரிவித்தார்.

*
யோகா பயிற்சி முகாம் நடத்துவதற்காக அனுமதி பெற்றுவிட்டு, அரசியல் கூட்டம் நடத்தியதாலேயே ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் தடியடி நடத்தியதாக டெல்லி போலீஸார் விளக்கம் அளித்தனர்.

*
டெல்லி ராம்லீலா மைதானத்தில் போலீஸாரால் நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.(டெல்லியில் இருந்து பாபா ராம்தேவை வெளியேற்றியது டெல்லி போலீஸ்!)

*
ராம்தேவ் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த ராம்லீலா மைதானத்தில் சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின் 1.30 மணியளவில் போலீஸார் அதிரடியாக நுழைந்து கண்ணீர் புகைக் குண்டுகளை வெடிக்கச் செய்து கூட்டத்தினரைக் கலைத்தனர்.

உண்ணாவிரதப் பந்தலில் இருந்த ராம்தேவை வலுக்கட்டாயமாக வெளியேற்றி, விமானம் மூலம் ஹரித்வாருக்கு அனுப்பிவைத்தனர்.

*
அரசின் பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்வதாக பாபா ராம்தேவுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது. இதனை ஏற்று அவர் உண்ணாவிரதத்தை கைவிடுவார் என்றும் அரசு தரப்பு நம்பிக்கைத் தெரிவித்தது.

*

ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை யோகா குரு பாபா ராம்தேவ் சனிக்கிழமை காலை தொடங்கினார். (யோகா குரு பாபா ராம்தேவின் கோரிக்கைப் பட்டியல்!)

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு