Published:Updated:

ராம்தேவின் அறக்கட்டளை வர்த்தக மதிப்பு ரூ.1,177 கோடி!

ஹரித்வார், ஜூன் 9,2011

ராம்தேவின் அறக்கட்டளை வர்த்தக மதிப்பு ரூ.1,177 கோடி!

ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ள பாபா ராம்தேவ் தனது அறக்கட்டளைகளின் வர்த்தக மதிப்பு ரூ.1,177 கோடி என சொத்து விவரத்தை வெளியிட்டார். ##~~##

உண்ணாவிரததின் ஆறாவது நாளான புதன்கிழமை அவர் தனது முதன்மை உதவியாளரான ஆச்சாரியா பால்கிருஷ்ணாவுடன் நிருபர்களைச் சந்தித்தார்.

அப்போது, "எங்களது நான்கு அறக்கட்டளைகளின் மொத்த மூலதன மதிப்பு ரூ.426. 19 கோடி. தொடக்கத்தில் இருந்து அவற்றின் செலவினம் போக மீதம் உள்ள சொத்தின் மதிப்பு ரூ.751. 2 கோடி.

திவ்ய யோகா மந்திர் அறக்கட்டளையின் மூலதனம் ரூ.249.63 கோடி; பதஞ்சலி யோகா பீட அறக்கட்டளை மூலதனம் ரூ.164.80 கோடி; பாரத் ஸ்வாபிமான் அறக்கட்டளை மூலதனம் ரூ.9.97 கோடி மற்றும் ஆச்சார்யாகுல் சிக்ஷ சன்ஸ்தான் மூலதன மதிப்பு ரூ.1.79 கோடி," என்றார் பால்கிருஷ்ணா.

இந்த நான்கு அறக்கட்டளைகளின் வரி விவரம் மற்றும் வரவு-செலவு கணக்கு அறிக்கை அனைத்தும் பாபா ராம்தேவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் வெளியிடப்பட்டன.

ராம்தேவின் சொத்துகள் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியதன் எதிரொலியாக, இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நிறுவனங்களின் மதிப்பு?

"நாங்கள் நிதி விவகாரங்களில் வெளிப்படைத்தன்மையை விரும்புகிறோம். எங்கள் எல்லா கணக்கு வழக்குகளும் முழுமையாக இருக்கிறது.

அரசின் சட்டவிதிமுறைகளின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்குகளை சமர்ப்பித்து அறக்கட்டளைகளை புதுப்புக்கிறோம். யாரெல்லாம் கொடுத்தார்கள், என்னவெல்லாம் செலவானது என்பதை மிகச் சரியாக பதிவு செய்து வருகிறோம்," என்றார் அவர்.

அதேவேளையில், ராம்தேவ் தொடர்புடைய அறக்கட்டளைத் தவிர்த்த மற்ற நிறுவனங்களின் மதிப்பு விவரத்தை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.

நான் சொன்னது தேசியவாதப் படையே : ராம்தேவ்

ஊழலுக்கு எதிராக 11 ஆயிரம் பேர் கொண்ட படையை உருவாக்கப் போவதாக தாம் கூறிய கருத்தை வேறு கோணத்தில் பிரசாரம் செய்வதாக குற்றம்சாட்டினார், ராம்தேவ்.

மேலும், தங்கள் போராட்டத்தை தடுக்க முயலும் போலீஸார் மற்றும் சமூகநலனுக்கு எதிரானவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ளவே இந்த ஏற்பாடு என்று அவர் விளக்கம் அளித்தார்.

தீவிரவாதிகளையோ, நக்சலைட்டுகளையோ, மாவோயிஸ்டுகளையோ தாம்  உருவாக்கப்போவதில்லை என்றும், நாட்டின் நலன்களை பாதுகாக்கும் தேசியவாத படையை மட்டுமே தாம் அமைக்கப்போவதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, ஆயுதப் படைப் அமைப்பதாக இருந்தால் சட்டம் தனது கடமையை செய்யும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்திருந்தது கவனத்துக்குரியது.

உண்ணாவிரதத்தில் தளர்வு...

இதனிடையே, பாபா ராம்தேவின் உடல் எடை ஒன்றரை கிலோ குறைந்தது என்றும், ரத்த அழுத்தமும் குறைந்தது என்றும் அவரை பரிசோதித்த மருத்துவக் குழு கூறியது.

இதனால், ராம்தேவை மாவட்ட கலெக்டர் ஆர்.மீனாட்சி சுந்தரம் சந்தித்து, உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், ராம்தேவ் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டார்.

பின்னர், குளுக்கோஸ் சக்தி கொடுக்கவல்ல எலுமிச்சை பழரசம் மற்றும் தேன் ஆகியவற்றை மட்டுமாவது சாப்பிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இதனை ஏற்றுக் கொண்ட ராம்தேவ், பழச்சாறு மற்றும் தேனை அருந்த தொடங்கினார். எனினும், அவர் தனது தனது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.