Published:Updated:

காங்கிரஸ் அரசின் ஊழல்கள்தான் பா.ஜ.க.வின் அமோக வெற்றிக்கு காரணம்: அத்வானி

விகடன் விமர்சனக்குழு
காங்கிரஸ் அரசின் ஊழல்கள்தான் பா.ஜ.க.வின் அமோக வெற்றிக்கு காரணம்: அத்வானி
காங்கிரஸ் அரசின் ஊழல்கள்தான் பா.ஜ.க.வின் அமோக வெற்றிக்கு காரணம்: அத்வானி
காங்கிரஸ் அரசின் ஊழல்கள்தான் பா.ஜ.க.வின் அமோக வெற்றிக்கு காரணம்: அத்வானி

பாட்னா: காங்கிரஸ் அரசின் ஊழல்கள்தான் பா.ஜ.க.வின் அமோக வெற்றிக்கு காரணம் என்று அத்வானி கூறியுள்ளார்.

பீகார் தலைநகர் பாட்னாவில் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி செய்தியாளர்களிடம் பேசும்போது, ''பிரதமர் பதவி கிடைக்காததில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. நாடாளுமன்றத்தில் எனக்கு கிடைத்த இடமும், அனைத்து கட்சிகளும் எனக்கு அளிக்கும் மரியாதையும் போதும். அந்த மரியாதை, என்னை திக்கு முக்காடச் செய்கிறது. அது பிரதமர் ஆவதைவிட மேலானது.

இந்த அரசு பதவி ஏற்று சிறிது காலம்தான் ஆகிறது. அதற்குள் அதை மதிப்பிடுவது சரியல்ல. ஆனாலும், நல்ல காரியங்களைத்தான் இந்த அரசு செய்து வருகிறது. ஆட்சேபிக்கத்தக்க எதையும் இதுவரை செய்யவில்லை. இன்னும் அதிக நாட்கள் ஆன பிறகுதான், இந்த அரசை மதிப்பிட முடியும்.

முந்தைய காங்கிரஸ் அரசு ஒன்றன்பின் ஒன்றாக செய்த ஊழல்கள்தான், நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற காரணம். யாராவது எங்களுக்காக பெரிதும் பாடுபட்டார்கள் என்றால், அது காங்கிரஸ்தான். நாங்கள் எந்த கட்சியின் கூட்டணியையும் முறித்தது இல்லை. சிவசேனாவுடனான கூட்டணி தொடரவே விரும்பினோம். ஆனால், தனியாக போட்டியிட்டால், அமோக வெற்றி பெறலாம் என்று நினைத்து, உத்தவ் தாக்கரே தனியாக செல்லும் முடிவை எடுத்தார்.

நான் அவரை தொடர்பு கொண்டு, 'அப்படி செய்வது முறையல்ல, நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் நிறுவனர்களில் ஒருவர். எனவே, எங்களுடன் இருங்கள்' என்று கூறினேன். ஆனால், உத்தவ் தாக்கரே என் யோசனையை ஏற்கவில்லை. இதனால், 25 ஆண்டுகால கூட்டணி முறிந்தது.

ஐக்கிய ஜனதாதளம் விஷயத்திலும் அதுதான் நடந்தது. கடந்த 1998 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்துக்கு ஜார்ஜ் பெர்னாண்டசை நான் அழைக்க சென்றேன். அப்போது, அங்கிருந்த நிதிஷ் குமாரையும் அழைத்தேன். அவரும் வந்தார். அங்குதான் தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்கப்பட்டது. எனவே, அதை நிறுவியவர்களில் நிதிஷ் குமாரும் ஒருவர்.

ஆனால், அவர் பா.ஜனதாவுடனான கூட்டணியை முறித்தபோது, அப்படிச் செய்யாதீர்கள் என்று கூறினேன். ஆனால் அவர் ஏற்கவில்லை. வாஜ்பாய் காலத்தில், கூட்டணி கட்சிகள் பிரிந்து சென்றது இல்லை. ஆனால் இப்போது சூழ்நிலை மாறி உள்ளது. தனியாக போட்டியிட்டால் அமோக வெற்றி பெறலாம் என்று கூட்டணி கட்சிகள் கருதுகின்றன" என்றார்.